என்னுடைய குடும்பத்தில் ஒவ்வொருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால்தான் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினேன். இந்த மன உளைச்சலால் 8 முதல் 9 நாட்கள் வரை சரியாகத் தூங்கக்கூட முடியாமல்தான் விளையாடினேன் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
14-வது ஐபிஎல் டி20 தொடர், கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன.
ஆனால், 2-வது சுற்று தொடங்கியவுடன் கொல்கத்தா அணியின் வீரர்கள் சந்தீப் வாரியர், சக்ரவர்த்தி, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா, சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சாஹா, சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லாத சூழல் இருப்பதையடுத்து, தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்தார்.
ஆனால், அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், அவரின் குடும்பத்தில் சில உறுப்பினர்களும், உறவினர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் உடனடியாகத் தொடரிலிருந்து விலக நேர்ந்தது என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் ஜூன் 18ஆம் தேதி நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய அணியினர் தற்போது மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கரோனா கால அனுபவங்களை யூடியூப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''ஐபிஎல் தொடரில் நான் ஏன் விலகினேன், விலகியபின் நடந்தது குறித்து யாருக்கும் நான் தெரிவிக்கவில்லை. உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமான சூழலை அந்த நேரத்தில் சந்தித்தேன். என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். எனது நெருங்கிய உறவினர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி மிகவும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்று மீண்டனர்.
வீட்டில் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், என்னால் விளையாட முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். சரியாகத் தூங்கக்கூட முடியவில்லை. 8 முதல் 9 நாட்கள் நான் சரியாகத் தூங்காமல்தான் ஐபிஎல் தொடரில் விளையாடினேன். தொடர்ந்து நான் இதுபோன்று விளையாட முடியாது என்ற மன அழுத்தத்தில் இருந்ததால்தான் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினேன்.
என்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா என்று கூட அப்போது எண்ணினேன். நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி அடுத்த ஒரு வாரத்தில் என் வீட்டில் பலரும் படிப்படியாக குணமடைந்ததால் மீண்டும் கிரிக்கெட் விளையாட எண்ணினேன். ஆனால், ஐபிஎல் அணியிலும் பல வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு அடுத்தகட்ட கிரிக்கெட்டுக்குத் தயாராகி வருகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அனைவரும் மும்பையில் இருக்கிறோம். மும்பைக்கு வருவதற்குக் கூட தென் மாநிலங்கள் உள்ள வீரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தனி விமானத்தில்தான் சென்னையிலிருந்து புறப்பட்டு மும்பை வந்து சேர்ந்தோம். மும்பை ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின், பலகட்ட கரோனா பரிசோதனைக்குப் பின், இங்கிலாந்து புறப்படுகிறோம்.
இங்கிலாந்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறோம். ஆனால், அங்கு சாஃப்ட் பபுள் என்பதால், எங்களால் பயிற்சியில் ஈடுபட முடியும். கடந்த ஆஸ்திரேலியத் தொடரில் ஏராளமான வீரர்கள் காயமடைந்ததால், இந்த முறை அதிகமான வீரர்களுடன் செல்கிறோம். இடைப்பட்ட காலத்தில் பயிற்சிப் போட்டியும் விளையாடுகிறோம்''.
இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago