பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியது. தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி தோனி 70 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நாட் அவுட்டாகத் தேங்க 38 ஓவர்களில் 126 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.
டெல்லி அணியில் பண்ட் மற்றும் ஷிகர் தவண் தொடக்கத்தில் களமிறங்கி 13.3 ஓவர்களில் 53 ரன்களைச் சேர்த்தனர். ஜார்கண்ட் பவுலர்கள் சரியாக வீசாததால் சுலபமான பவுண்டரிகளை இருவரும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஒரு சிக்சருடன் சேர்த்து இருவரும் பெரிய ஷாட்களை ஆடினாலும் அனுபவசாலியான ஷிகர் தவணால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை, இதனால் ஓவருக்கு 4 ரன்கள் விகிதத்திலேயே இருவரும் ரன் எடுக்க முடிந்தது.
சுழற்பந்து வீச்சு அறிமுகமானவுடன் 53/0 என்று இருந்த டெல்லி 100/5 என்று ஆனது. பண்ட் (24), தவண் (27), உன்முக்த் சந்த் (17), கம்பீர் (20), மிலிந்த் குமார் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கம்பீர் 20 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார், ஆனால் மந்தத் தனத்தினால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ஷிகர் தவணை தோனி ஸ்டம்ப்டு முறையில் வெளியேற்றினார்.
பிறகு நிதிஷ் ரானா, மனன் சிங் இணைந்து 18 ஓவர்களில் 74 ரன்களைச் சேர்த்து டெல்லி இன்னிங்ஸை மீட்டெடுத்தனர். ரானா 76 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மனன் சர்மா 21 ரன்கள் எடுத்தார்.
ஆனால் பவன் நேகியின் இன்னிங்சே டெல்லி வெற்றியை உறுதி செய்தது என்றால் மிகையாகாது. அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 38 ரன்கள் விளாச கடைசி 5 ஓவர்களில் 51 ரன்கள் விளாசப்பட்டது. உதிரிகள் வகையில் 29 ரன்கள் ஜார்கண்ட் அணி விட்டுக் கொடுத்தது. இதில் 19 வைடுகள், 2 நோபால்கள், 4 லெக்பைகள், 4 பை-கள். 225 ரன்களுக்கு டெல்லி அணி சுருண்டது. வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும், ஆர்.சுக்லா 3 விக்கெட்டுகளையும், தபாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ்:
இலக்கைத் துரத்திய ஜார்கண்ட் அணி, டெல்லி வேகப்பந்து வீச்சாளர்களான சைனி, இசாந்த் சர்மா ஆகியோரின் வேகத்தை எதிர்கொள்ள திணறியது.
ஜக்கி, அண்டர்-19 கேப்டன் இஷான் கிஷன் தியோபிராட், சவுரவ் திவாரி ஆகியோர் சைனி, இசாந்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒற்றை இலக்க ஸ்கோரில் வெளியேற 9/4 என்று சரிந்தது.
தோனியுடன் கவுஷல் சிங் இணைந்தார், இருவரும் 5-வது விக்கெட்டுக்காக 23 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் கவுசல் சிங் 11 ரன்களில் சைனியிடன் பவுல்டு ஆனார். தபாஸ் இறங்கினார் இவர் 16 ரன்களை எடுக்க 6-வது விக்கெட்டுக்காக மேலும் 23 ரன்களை தோனியுடன் சேர்ந்து எடுக்கப்பட்டது.
விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க தோனி தனது பெரிய ஷாட்களை ஆடத் தொடங்கினார். இடது கை ஸ்பின்னர் மனன் சர்மா பந்தை இருமுறை ஸ்டேடியத்துக்கு சிக்சர்களுக்கு விரட்டினார்.
ஒரு விக்கெட் விழுந்தால் கதை முடிந்து விடும் நிலையிலும் தோனி ஷாட்களை ஆடினார். அதிலும் குறிப்பாக இசாந்த் சர்மாவின் ஒரு ஓவரில் 2 பெரிய சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார் தோனி. கடைசி விக்கெட்டுக்காக 29 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், விகாஸ் சிங் 1 ரன்னில் அவுட் ஆக ஜார்கண்ட் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது. டெல்லி அரையிறுதிக்கு முன்னேறியது.
தோனி 108 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கடினமான பிட்சில் விடாமுயற்சியுடன் ஆடிய தோனிக்கு யாரேனும் உறுதுணையாக ஆடியிருந்தால் ஒருவேளை இலக்கை எட்டி வென்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
டெல்லி தரப்பில் சைனி 3 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், எஸ்.பட்டி 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago