வீழ்ச்சியின் தொடக்கமா?- தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட்டில் படுதோல்வி

By இரா.முத்துக்குமார்

டர்பன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 241 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

416 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 136/4 என்ற நிலையில் இன்று களமிறங்கியது. ஆனால் மொயீன் அலி, ஸ்டீவ் ஃபின் ஆகியோரது அபாரப் பந்து வீச்சில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டர்பனில் 6 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி அடையும் 5-வது தோல்வியாகும் இது. மேலும் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

நேற்றைய ஸ்கோர் 37 ரன்களில் இன்று தொடர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் மேலும் ரன் சேர்க்காமல் மொயீன் அலி பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்து நேராக வர பின்னால் சென்று ஆடினார் டிவில்லியர்ஸ், பந்து சற்றே தாழ்வாக கால்காப்பில் வாங்கினார். முறையீடு எழுந்தது, நடுவர் கையை உயர்த்தினார், ஆனால் டிவில்லியர்ஸ் மேல்முறையீடு செய்தார், பலனில்லை, பந்து லெக்ஸ்டம்பை தாக்குவதாக ரிப்ளேயில் தெரிந்தது.

அடுத்ததாக பவுமா ரன் எதுவும் எடுக்காமல், மொயீன் அலியை மேலேறி வந்து ஆட முயன்றார் பந்து தாண்டிச் சென்றது பேர்ஸ்டோ ஸ்டம்பிங் செய்தார்.

இரவுக்காவலனாக இறங்கிய டேல் ஸ்டெய்ன் 2 ரன்களில் ஸ்டீவ் ஃபின் பந்தை தவறான லைனில் ஆட ஆஃப் ஸ்டம்ப் பறந்தது. கைல் அபாட் 2 ரன்களில் மொயீன் அலியின் பந்தில் நேராக வாங்கினார் நடையைக் கட்டினார். பியட் 27 பந்துகளைச் சந்தித்து ரன் எடுக்காமல் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசியாக மோர்கெல் 8 ரன்களில் பிராட் பந்தில் நேராக வாங்கினார். ரிவியூ செய்தார், பலனில்லை. இங்கிலாந்து வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியது.

ஜே.பி.டுமினி கிறிஸ் வோக்ஸ் ஓவரில் அருமையான கவர் டிரைவ் மற்றும் நேராக ஒரு டிரைவ் பவுண்டரி ஆகியவை உட்பட 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ஒரு முனையில் நாட் அவுட்டாகத் தேங்கினார்.

மொத்தத்தில் நேற்று மாலை டுபிளெஸ்ஸிஸ் விக்கெட்டையும் சேர்த்து கடைசி 7 விக்கெட்டுகளை 38 ரன்களில் தென் ஆப்பிரிக்கா இழந்தது. ஸ்டீவ் ஃபின் 4 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொயீன் அலி 7 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் இந்தியாவில் ஏற்பட்ட தோல்விகளின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை என்று வெளிப்படையாகத் தெரிந்தது.

அவர்களது ஸ்ட்ரைக் பவுலர் டேல் ஸ்டெய்ன் காயமடைந்து அடுத்த டெஸ்ட் போட்டிக்கு விளையாடப் போவதில்லை என்று தெரியவந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடுவது உறுதி என்பதும் தெரியவந்துள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா இன்னும் 2 நாட்களுக்குள் கடுமையாக தங்களை ஒன்று திரட்டிக் கொள்வது அவசியமாகிறது.

பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்க வேண்டும் என்பதான பிரச்சினை அல்ல தென் ஆப்பிரிக்க அணியுடையது. மாறாக இந்தியாவுக்கு எதிரான தோல்விகளையடுத்து அந்த அணியின் ஒட்டுமொத்த மனநிலையுமே எதிர்மறைப்பாங்குடன் விளங்குகிறது. அந்த அணி கிரேம் ஸ்மித் காலத்தில் இருந்ததைப் போன்ற பாசிட்டிவான, ஆக்ரோஷமான ஆட்டத்திறனை சமீபகாலங்களில் வெளிப்படுத்த தவறி வருகிறது.

அதிரடியான ஒரு கேப்டன், ஒரு சிறந்த ஸ்ட்ரைக் பவுலர், அதிரடி ஆல்ரவுண்டர் என்று தென் ஆப்பிரிக்க அணிக்கு தேவைப்பாடு அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது.

நம்பர் 1 டெஸ்ட் அணியின் வீழ்ச்சியின் தொடக்கமாக இந்தத் தோல்விகள் இருந்துவிடக்கூடாது என்பது கிரிக்கெட்டுக்கு நன்மை பயப்பதாகும். அணித்தேர்வுகளில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மேலும் கறாராக செயல்படுவது அவசியம். டிவில்லியர்ஸ் போன்ற மேட்ச் வின்னர் மீது விக்கெட் கீப்பிங் பணிச்சுமையை ஏற்றுவது தவறான முடிவு.

ஒரு சிறந்த டெஸ்ட் அணி தங்கள் சொந்த மண்ணிலேயே எந்தவித போராட்ட குணமுமின்றி பெரிய அச்சுறுத்தலற்ற இங்கிலாந்து பந்து வீச்சில் சரணடைவது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதையே காட்டுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்