பொலார்டிடம் தோற்றது சிஎஸ்கே: கடைசிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ்க்கு 'த்ரில்' வெற்றி : தோனி படையை துவம்சம் செய்த போர்வீரன் 

By க.போத்திராஜ்

ஆட்டம்னா இப்படி இருக்கணும். போட்டி தொடங்கியதிலிருந்து சேஸிங்கின் கடைசிப்பந்துவரை இருக்கையின் நுனிவரை ரசிகர்களை அமரவைத்த அமர்க்களமான போட்டி. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே என இரு சாம்பியன்கள் மோதிய இந்த ஆட்டம் உண்மையில் ஐபிஎல் தொடரில் தரமான போட்டி. இரு அணிகளின் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கும், ட்ரால்களுக்கும், கமெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் விருந்தாக அமைந்தது.

அதில் குறிப்பாக சிஎஸ்கே அணியை தோற்கடித்தபின் மும்பை அணி கூறுவதுபோல் அமைந்த, “நீ படித்த ஸ்கூலில் நான் பிரின்ஸிபல்டா…” என்பதுதான் உச்சம்.

இரு அணிகளும் சேர்ந்து 436 ரன்கள், 30 சிக்ஸர்கள், 30 பவுண்டரிகள் என டெல்லி அருண் ஜேட்லி மைதானமே அதிர்ந்தது.

வார்த்தைகளால் வர்ணி்க்க முடியாத கெய்ரன் பொலார்ட்டின் ஆகச்சிறந்த ஆட்டத்தால் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

சிஎஸ்கே அணியின் 11 வீரர்களுமே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்கவில்லை, கெய்ரன் பொலார்ட் என்ற தனிஒரு வீரரிடம் தோற்றுவிட்டனர்.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. 219 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணிக்கு புள்ளிப்பட்டியலில் எந்தவிதமான சரிவும் இல்லை. ஆனால் தொடர்ந்து 5 வெற்றிகளுடன் சென்ற சிஎஸ்கே அணிக்கு ஒரு பிரேக். 7 போட்டிகளில் 2 தோல்வி, 5 வெற்றிகள் என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் சிஎஸ்கே இருக்கிறது

மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது இமேஜை உயர்த்திக் கொள்ள இந்த ஒரு போட்டி போதும். சென்னை ஆடுகளத்தை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை தவறாகக் கணித்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பிக் ஹிட்டர்ஸ் இருக்கும் மும்பை அணியை சாய்ப்பது என்பது அசாத்தியமானது. இது இங்கு நிருபணமாகி, தங்களை சாம்பியன் என மும்பை இந்தியன்ஸ் நிரூபித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் முழு வெற்றிக்கு கெய்ரன் பொலார்ட் மட்டுமே காரணம் என்றுதான் கூற முடியும். 17 பந்துகளில் அரைசதம், 34 பந்துகளில் 87 ரன்கள்(6பவுண்டரி, 8சிக்ஸர்கள்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பொலார்ட்டுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான அரைசதம் அடித்தவர்களில் 4-வது வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களில் 3-வது வீரராகவும் பொலார்ட் இடம் பெற்றார். இதற்கு முன் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளி்ல் அரைசதம் அடித்துள்ளனர்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிவிரைவாக அரைசதம் அதாவது 17 பந்துகளில்அரைசதம் அடித்த முதல்வீரர் என்ற பெருமையை பொலார்ட் பெற்றார். இதற்கு முன் சாம்ஸன் 19 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

டெல்லி அருண் ஜேட்லி மைாதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யப்பட்டு இருந்தது. தற்போது 2-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யப்பட்டுள்ளது.

219 ரன்களை மும்பை அணி சேஸிங் செய்தது என்பது ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச சேஸிங்காகும். அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச சேஸிங் 194 ரன்களாகத்தான் இருந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், அதையும் மும்பை இந்தியன்ஸ் சேஸிங் செய்துவிட்டனர். ஐபிஎல் தொடரில் சிஎஸ்ேக அணிக்கு எதிராக 19 முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

2012ம் ஆண்டுக்குப்பின், கடைசிப்பந்தில் வெற்றியை சிஎஸ்கே அணி நழுவவிட்டுள்ளது. அந்த கடைசிப்போட்டியும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானதுதான். சிஎஸ்கே அணியை கடைசிப்பந்தில் மும்பை அணி வெல்வது 2-வது முறை, கடைசியாக 2012ல் 174 ரன்கள் இலக்கை துரத்தியபோது மும்பை அணி கடைசிப்பந்தில் வென்றது.

இப்படி இரு சாம்பியன் அணிகள் மோதிய ஆட்டத்தைப் பற்றி ஏராளமான புள்ளிவிவரங்களைக் கூறலாம்.


மும்பை அணியைப் பொருத்தவரை மீண்டும் தங்களை மாஸ்டர் கிளாஸ் என நிரூபித்துள்ளது. மிகப்பெரிய இலக்கை நோக்கி பயணி்த்த நிலையில் ரோஹித் சர்மா, டீகாக் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா(38), சூர்யகுமார்(3), டீகாக்(35) ஆகிய மூவரும் ஆட்டமிழந்தபின் ஆட்டம் கையைவிட்டு செல்கிறதோ என்ற நிலையில்தான் பொலார்ட், குர்னல் பாண்டியா கூட்டணி சேர்ந்தனர்.

பொலார்ட்டுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து குர்னல் பாண்டியா ஒத்துழைத்து பேட் செய்தார். ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பொலார்ட் கடைசிவரை களத்தில் ராஜாவாக இருந்து ஆண்டுவிட்டார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 89 ரன்கள் சேர்த்தனர்.

அதிலும் கடைசி 10 ஓவர்களில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி 138 ரன்களைச் சேர்த்தது. ஜடேஜா வீசிய 13-வது ஓவரிலிருந்துதான் பொலார்ட் ருத்தரதாண்டவத்தைத் தொடங்கினார். ஜடேஜா வீசிய ஓவரில் 3 சிக்ஸர்களையும், இங்கிடி வீசிய 14-வது ஓவரில் 2 சிக்ஸர்களையும் விளாசி ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு பொலார்ட் உயர்த்தினார். தாக்கூர் வீசிய 15-வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களை பொலார்ட் வெளுத்துவாங்கினார்.

இங்கிடி வீசிய 16-வது ஓவரில் குர்னல் பாண்டியா தனது பங்கிற்கு ஒருசிக்ஸர்,2 பவுண்டரி என 16 ரன்களை எடுத்தார். 32 ரன்கள் சேர்த்த நிலையில் குர்னல் பாண்டியா கால்காப்பில் வாங்கி சாம் கரன் பந்துவீச்சில் வெளியேறினார்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. சாம்கரன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர்ளை ஹர்திக்பாண்டியா விளாசி ஆட்டமிழந்தார், அடுத்துவந்த நீஷமும் டக்அவுட் ஆகினார்.

கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மறுமுனையில் நின்றிருந்த தவால் குல்கர்ணியை ரன் ஏதும் எடுக்க வேண்டாம், ஸ்ட்ரைக்கே தானே தக்கவைக்கிறேன் என பொலார்ட் கூறிவி்ட்டார். இங்கிடி கடைசி ஓவரை வீசினார்.

முதல் பந்தில் ரன் சேர்க்கவில்லை. 2-வது, 3-வது பந்தில் இரு பவுண்டரிகளை பொலார்ட் விளாசினார். 5-வது பந்து ஃபுல்டாஸாக வரவே ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸருக்கு பொலார்ட் பறக்கவிட்டார். கடைசிப்பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் பொலார்ட் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களுமே பேட்ஸ்மேன்களிடம் உதைவாங்கினர். அதிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் பும்ரா 58 ரன்கள், போலாட் 42 என இருவரும் சேர்ந்து 100 ரன்களை வாரி வழங்கினார்கள். இருவரின் பந்துவீச்சுமே சிஎஸ்கே பேட்ஸ்மேகளால் துவம்சம் செய்யப்பட்டது.

பொலார்ட் 2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்த நிலையில் அவருக்கு கூடுதலாக ஓவர்களை வழங்கியிருக்கலாம்

பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் பிக் ஹிட்டர்ஸ் இருக்கும் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை எந்த குறையும் கூற முடியாது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், 219 ரன்கள் அடித்தும் ஒரு அணி தோற்கிறது என்றால் அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் கூற முடியும்.

இதைவிட பொலார்ட்டுக்கு பவுண்டரி எல்லையில், டூப்பிளசிஸ் கேட்ச் விட்டபோதே ஆட்டம் சிஎஸ்கே அணியைவிட்டுச் சென்றுவிட்டது. ஆர்பிசி அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் ஜடேஜாவுக்கு கேட்ச்சை கோட்டைவிட்டபின் ஆட்டம் சிஎஸ்கேவுக்கு சாதகமாகமாறியது. இந்த ஆட்டத்தில் பொலார்ட்டுக்கு கேட்ச் பிடிக்கப்படாமல் ஆட்டம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் மீது குறைகூறுவது இயலாது. பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி ஷாட்களை விளையாடுவதற்காக வந்தது.

இருப்பினும் லுங்கி இங்கிடி 62 ரன்கள் வாரி வழங்கியது சற்று அதிகம்தான். சிஎஸ்கே அணி வரலாற்றில் இதுவரை எந்த பந்துவீச்சாளரும்இதுபோல் வள்ளலாக மாறியது இல்லை. அடுத்ததாக ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை பொலார்ட் உருட்டி எடுத்துவிட்டார், 56 ரன்களை கொடுத்து மனச்சோர்வை தாக்கூர் அடைந்துவிட்டார்

ஆனால், தீபக் சஹர், சாம்கரன் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது. அதிலும் டெத் ஓவரில் சாம்கரன் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை நெருக்கடியாகக் கொண்டு சென்றார்.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட்(4) ரன்னில் ஆட்டமிழந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு டூப்பிளசிஸ், மொயின் அலி ஜோடி ஆட்டத்தை கையிலெடுத்தனர். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை அனாசயமாகக் கையாண்ட மொயின் அலி, சி்க்ஸர்,பவுண்டரிகளாக விளாசினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்தார், துணையாக ஆடிய டூப்பிளசிஸ் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரையும் பிரிக்க 11-வது ஓவரில் பும்ரா வரவழைக்கப்பட்டார். பும்ரா ஓவரில் இரு சிக்ஸர்களை டூப்பிளசிஸ் விளாசிய நிலையில் கடைசிப்பந்தில் மொயின் அலி ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் 58 ரன்கள் (5சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து மொயின்அலி ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து பொலார்ட் வீசிய 12-வது ஓவரில் டூப்பிளசிஸ் 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார், அடுத்துவந்த ரெய்னா அதே ஓவரில் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 112 ரன்களுக்கு ஒரு வி்க்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு ராயுடு, ஜடேஜா கூட்டணி சேர்ந்தனர். ஜடேஜா நிதானம் காட்ட ராயுடு காட்டடியில் இறங்கினார். பும்ரா, போல்ட், சஹர், குல்கர்னி என யார் பந்தையும் ராயுடு விட்டுவைக்காமல் பவுண்டரி, சி்க்ஸர்களாக ராயுடு விளாசினார். லெக் திசையில் அதிகமாகக் கவனம் செலுத்தி ஆடிய ராயுடு 45 ரன்களை லெக்திசையில் எடுத்தார்.

அதிரடியாக பேட் செய்த ராயுடு 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 10 ஓவர்களில் சிஎஸ்கே அணியும் 123 ரன்கள் சேர்த்தது, அதிலும் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 82 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்தது.

அதிரடியாக ஆடிய ராயுடு 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார், துணையாக ஆடிய ஜடேஜா 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே அணி 218 ரன்கள் சேர்த்து. 4-வது விக்கெட்டுக்கு ராயுடு, ஜடேஜா கூட்டணி 102 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ஒரே அணியில் இரு 100 ரன்கள் பார்டனர்ஷிப் வருவதுதான் இதுதான் முதல்முறையாகும்

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பொலார்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்