கிறைஸ்ட் சர்ச்சில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, நியூஸிலாந்து 118 ரன்கள் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி 8.2 ஓவர்களில் விளாசி இலங்கை அணியை நொறுக்கியது.
உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆட்டம் முடிந்தது. மொத்தமே 36 ஓவர்களில் ஆட்டம் முடிந்தது. மார்டின் கப்திலின் 30 பந்துகள் 93 ரன்களில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 310.
கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டுவெண்டி 20 போட்டி போல் மெக்கல்லமும், கப்திலும் ஆட, இது டி10 கிரிக்கெட் போல் தாறுமாறு அடிதடி ரன் வேட்டை போட்டியாக அமைந்தது. இலங்கை இன்னும் கொஞ்சம் ஸ்கோரை எடுத்திருந்தால் டிவில்லியர்ஸின் 31 பந்து உலக சாதனை சதம் இன்று மார்டின் கப்திலினால் முறியடிக்கப்பட்டிருக்கும். இன்று மெக்கல்லம் தொடக்க வீரராகக் களமிறங்கவில்லை என்பது இலங்கைக்கு ஒரே ஆறுதல்.
டாஸ் வென்று இலங்கை முதலில் பேட் செய்ய முடிவெடுக்க மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, மெக்லினாகன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 27.4 ஓவர்களில் இலங்கை 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நியூஸிலாந்து பந்துவீச்சில் பெரிய அச்சுறுத்தல் இல்லை. ஆனால் பெரிய அளவுக்கு கட்டுக்கோப்பு இருந்தது. இலங்கை அணியின் பேட்டிங் படுமோசமாக அமைந்தது. நியூஸிலாந்து அணியின் பீல்டிங் அதன் அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் மீறிய ஒரு அதி அபாரமான, நம்பமுடியாத பீல்டிங்காக இருந்தது.
குறிப்பாக மிட்செல் சாண்ட்னர் கவரில் பிடித்த கேட்ச், கல்லி திசையில் மார்டின் கப்தில் டைவ் அடித்து பந்தைத் தடுத்து ரன் அவுட் செய்த விதம் என்று நியூஸிலாந்து பீல்டிங் உச்சத்தில் இருந்தது.
ஹென்றி பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று பிறகு ஷாட்டை செக் செய்தார் தில்ஷன் இதனால் பந்து மட்டையில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 7 ரன்களில் அவர் வெளியேறினார். 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த தனுசிகா குணதிலக, ஹென்றியின் பந்தை பளார் என்று அடித்தார் பந்து கவர் திசையில் சாண்ட்னருக்கு வலப்புறம் செல்ல அருமையான டைவிங் கேட்ச் ஒன்றைப் பிடித்தார் அவர். மெக்லினாகன் பந்தை திரிமானே தேர்ட்மேன் திசையில் கேட்ச் கொடுத்து 2-வது முறையாக இந்தத் தொடரில் 1 ரன்னில் அவுட் ஆனார்.
தினேஷ் சந்திமால் 9 ரன்களுக்கு டக் பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.ஆனார். மேத்யூஸ் தனது 17 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் அவரை லெக் திசையில் ஷார்ட் பிட்ச் பந்து வீசியே மடக்கி வருகின்றனர் நியூஸிலாந்து பவுலர்கள். இந்நிலையில் அவர் மீண்டும் திணறி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற இலங்கை 15 ஓவர்களில் 56/5 என்று ஆனது.
சிறீவதனா, கபுகேதரா இருவருமே 12 ரன்களுக்கு ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். கடைசியில் அன்று போல் மீண்டும் குலசேகரா தெளிவாக அடித்து ஆடி அதிகபட்ச ஸ்கோரான 19 ரன்களை எடுக்க ஒருவழியாக மூன்றிலக்க ஸ்கோரை எட்டி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை.
சற்றும் எதிர்பாராத மார்டின் கப்திலின் காட்டடி: நிலைகுலைந்த இலங்கை:
காட்டடி தர்பார் தொடங்கும் முன்னரே மார்டின் கப்திலுக்கு முதல் பந்திலேயே லெக் கல்லியில் சிறீவதனா கேட்சைக் கோட்டைவிட்டார். இதனையடுத்து அடுத்த குலசேகராவின் ஓவரில் ஆரம்பித்தார் கப்தில். நடந்து வந்து லாங் ஆனில் மிகப்பெரிய அலட்சியமான சிக்ஸர் ஒன்றை அடித்தார் கப்தில். அடுத்ததாக பாயிண்டில் ஒரு புல்லட் ஷாட் பவுண்டரி. அடுத்து தேர்ட்மேனில் ஒரு மிஸ்ஹிட் பவுண்டரி.
3-வது ஓவரில் சமீரா வந்தார், வாங்கிக் கட்டிக்கொண்டார். ரவுண்ட் த விக்கெட்டில் வந்து லெக் ஸ்டம்பில் வீசினால் கப்தில் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார்? லாங் ஆஃபில் பந்து சிக்ஸ். அடுத்து ஸ்பின்னரை தேர்ட்மேனில் ஒரு சிக்ஸ். தேர்ட்மேனில் ஸ்பின்னரை சிக்ஸ் அடிக்கும் ஒரே வீரராக கப்திலே இருப்பார் என்று தெரிகிறது. இடையில் ஒரு வைடு. அடுத்த ஷார்ட் பிட்ச் பந்து மைதானத்திலிருந்து மறைய, அதற்கு அடுத்த பந்து நேராக பவுண்டரி, அடுத்த பந்தை ஒதுங்கிக் கொண்டு மிட் ஆனில் சாத்து சாத்தினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. கப்தில் 12 பந்துகளில் 46 ரன்கள். டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனையை வைத்துள்ளார். அவரது சாதனை நிச்சயம் முறியடிக்கப்படும் என்ற ஆவல் ரசிகர்களிடத்தில் எழுந்தது.
ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தை சமீரா அருமையாக வீச கப்திலால் ரன் எடுக்க முடியவில்லை. கப்திலே சமீராவை பாராட்டினார். சமீரா ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டது. நியூஸிலாந்து 3 ஓவர்கள் முடிவில் 56 ரன்கள். இதில் லேதம் 5 ரன்கள்.
டிவில்லியர்ஸ் உலகசாதனையை முறியடிக்க முடியாமல் செய்தவர் குலசேகரா. இவர் இரண்டு அபாரமான யார்க்கர்களை கப்திலுக்கு வீசினார். இரண்டு பந்திலுமே ஒரு ரன்னே எடுக்க முடிந்தது. 15 பந்துகளில் 48 என்ற நிலையில் சேனநாயகேவும் தன் பந்தில் கப்திலுக்கு 1 ரன்னையே விட்டுக் கொடுத்தார். இதனால் 16 பந்துகளில் 49 ரன்களையே எடுத்திருந்தார் கப்தில், ஆனால் 17 பந்துகளில் அரைசதம் கண்டு புதிய நியூஸிலாந்து சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்து இலங்கையின் அறிமுக ஸ்பின்னர் வாண்டர்சே கப்திலிடம் சிக்கினார், அந்த ஓவரில் 4,6,6,4,0,6 26 ரன்களை விளாசினார் கப்தில். இதில் ஒரு சிக்சர் 107 மீட்டர்கள் தூரம் சென்ற அரக்க அடியாகும். 6 ஓவர்களில் 97/0. அடுத்து சேனநாயகேவின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிச்கர்களுடன் 85 ரன்களில் டிவில்லியர்ஸின் ஒருநாள் சத உலக சாதனை அச்சுறுத்தப்பட்டது. வாண்டர்சேயை மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப்பில் சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் அவர் 29 பந்துகளில் 92 ரன்கள் என்று இருந்தார். நியூஸிலாந்து ஸ்கோர் 116 ரன்களை எட்டியிருந்தது. இந்நிலையில் 8.2 ஓவர்களில் நியூஸிலாந்து இலக்கை எட்ட கப்தில் 30 பந்துகளில் 93 நாட் அவுட். இலங்கை படுதோல்வி அடைந்தது. கப்திலின் ஸ்ட்ரைக் ரேட் 310 என்பது குறிப்பிடத்தக்கது. லேதம் 20 பந்துகளில் 17 நாட் அவுட். சமீரா 2 ஓவர்கள் 41 ரன்கள். வாண்டர்சே 2 ஓவர்கள் 34 ரன்கள்.
உண்மையில் இலங்கை வீரர்கள் தன்னம்பிக்கையை கடுமையாக நாசம் செய்த இன்னிங்ஸாகும் இது, முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கை தோல்வியடைந்த விதம் அந்த அணியை சிறிது காலம் எழும்பவிடாமல் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago