ஹர்பிரீத் பிராரின் பிரமாதமான பந்துவீச்சு, கேஎல் ராகுலின் பேட்டிங் ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக இருக்கிறது. இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணி மோதும் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மும்பை அணி வென்றாலும் அதே இடத்தில்தான் இருக்கும் ஆனால், ரன்ரேட்டை உயர்த்திக் கொள்ளலாம். ஆனால், தோல்வி அடையும் பட்சத்தில் பஞ்சாப் கிங்ஸ்க்கு கீழே சரியும்.
» ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடக அமைப்பு சார்பில் இந்தியர்களுக்காக கரோனா நிதியுதவி
» ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜெயதேவ் உனத்கத் உதவி: 10 சதவீத ஊதியத்தை கரோனா நிவாரணமாக வழங்க முடிவு
ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 2 தோல்வி, 5 வெற்றிகள் என 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 3 போட்டிகளில் ஆர்சிபி அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். “மொமன்ட்டம்” ஆர்சிபி அணியைவிட்டு மெல்ல நழுவுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஆர்சிபி அணி்க்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் விளையாடினாலே குஷியாகிவிடுகிறது, ஏனென்றால், கோலி படைக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி பெறும் 15-வது வெற்றிஇதுவாகும். கடந்த 2020ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 3-வது முறையாக ஆர்சிபி அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்கிறது.
அதிலும் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடுவது என்றாலே அல்வா சாப்பிட்டதுபோல் இருக்கிறது. கடந்த 3 இன்னிங்ஸிலும் சேர்த்து 284 ரன்கள் குவித்துள்ளார். 132, 61, 91 என்று நாட்அவுட்டாக இருந்து ஆர்சிபி அணியை ராகுல் அலறவிட்டுள்ளார்.
இந்த ஆட்டத்தில் 57 பந்துகளில் 91 ரன்கள் நாட்அவுட்(7பவுண்டரி, 5சிக்ஸர்). ஆர்சிபி அணிக்கு எதிராக மட்டும் ராகுல் 133 சராசரி வைத்துள்ளார். எந்த அணி்க்கும் எதிராக ஒரு வீரர் வைத்திருக்கும் 2-வது மிகப்பெரிய சராசரியாகும். ஆர்சிபி அணிக்கு எதிராக 216 சராசரி வைத்துள்ளது சிஎஸ்கே கேப்டன் தோனி மட்டும்தான்.
இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ராகுலின் பேட்டிங், ஹர்பிரீத் பிராரின் பந்துவீச்சும், பேட்டிங்கும்தான். இதற்கு முன் களமிறங்கிய போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்காத பிரார் நேற்று ஆர்சிபியின் முக்கிய 3 தூண்களையே சாய்த்துவிட்டார். விராட் கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என 3 பேரையும் தனது சுழற்பந்துவீச்சால் வீழ்த்தி ஹீரோவாக பிரார் மாறிவிட்டார்.
4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 2 சிக்ஸர் உள்பட 25 ரன்களையும் சேர்த்த ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கெயில்,ராகுல் களத்தில் இருந்தபோது ஸ்கோர் சென்ற வேகத்தில் 200 ரன்களைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுவரிசை வீரர்கள் வழக்கம் போல் சரிந்து ஏமாற்றினர். ஆனால், 6-வது விக்கெட்டுக்கு ராகுல், ஹர்பிரீத் பிரார் ஜோடி கடைசி 5 ஓவர்களை ஆர்சிபி பந்துவீச்சை வெளுத்து வாங்கிவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 61 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஹர்பிரீத் பிரார் மட்டும்கடைசி நேரத்தில் ராகுலுக்கு கை கொடுக்கவில்லையென்றால், 150 ரன்களை தொட்டிருப்பதே கடினம்தான்.
பந்துவீச்சிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி நன்கு தயாராகி வந்திருந்தது. ரவி பிஸ்னோய், பிரார் இருவரும் சேர்ந்து நடுப்பகுதியில் ஆர்சிபி அணியின் ரன்வேகத்தை குறைத்தனர், விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆர்சிபியின் 8 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகளை பிஸ்னோய், பிரார் இருவரும் எடுத்தனர்.
குறிப்பாக விராட் கோலி, மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் "ஸ்லோ லெப்ட்ஆர்ம் ஸ்பின்னுக்கும்", "லெக் ஸ்பின்னுக்கும்" திணறுவார்கள் எனத் தெரிந்து பிரார், பிஸ்னோய்க்கு ராகுல் வாய்ப்பளித்து விக்கெட்டை வீழ்த்தினர்.
வேகப்பந்துவீச்சில் மெரிடித் நேற்று மிரட்டிவிட்டார். இந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்ச வேகமாக 146 கி.மீ வேகத்தில் மெரிடித் பந்துவீச்சு நேற்று இருந்தது. ஆர்சிபி வீரர் படிக்கலுக்கு ஆஃப் ஸ்டெம்ப்பை “கார்ட்வீலிங்” செய்து மெரிடித் தெறிக்கவிட்டார்.
ஆனால்,துரதிருஷ்டமாக கடைசி ஓவரை வீசும்போது, ஜேமிஸன் அடித்த பந்து மெரிடித் காலில் படவே பாதியிலேயே வெளியேறினார். அடுத்தப் போட்டிக்கு வருவாரா என்பது தெரியவி்ல்லை.
பீல்டிங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் கலக்கிவிட்டனர், குறிப்பாக நிகோலஸ் பூரன் பேட்டிங்கில் சொதப்பினாலும் பீல்டிங்கில் சிறப்பாகச்செயல்பட்டு ஒரு கேட்ச் பிடித்தார். பூரன் கடந்த 5 இன்னிங்ஸ்களில் 4-வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
அடுத்த போட்டியில் பூரனுக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் டேவிட் மலானை களமிறக்கலாம். டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் டேவிட்மலானை ஏன் பஞ்சாப் அணி வீணாக்குகிறது எனத் தெரியவில்லை.
ஒட்டுமொத்தத்தில் இந்த வெற்றிக்காக பஞ்சாப் கிங்ஸ் நிறைய “ஹோம் ஒர்க்” செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
ஆர்சிபி அணியைப் பொருத்தவரை மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்யும்போது தடுமாறுகிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக 190 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தபோது இதேபோன்ற தடுமாற்றம் இருந்தது, இப்போது இந்த போட்டியிலும் இருந்தது.
ஆர்சிபியில் படிக்கல், கோலி, ஏபிடி, மேக்ஸ்வெல் இந்த 4 பேர்தான் பேட்டிங்கில் தூண்கள், இவர்களை வெளியேற்றிவிட்டாலே ஆட்டம் முடிந்துவிடும். அதுபோல்தான் நேற்றும் நடந்தது. அதிலும் படிக்கல்லை விரைவாக தூக்கிவிட்டாலே ஆர்சி்பி அணியின் பவர்ப்ளே ஸ்கோர் படுத்துவிடும் என்பதை தெரிந்து தூக்கிவிட்டார்கள். கடந்த 7 போட்டிகளிலும் கோலி தொடக்கவரிசையில் களமிறங்கி ரன்ரேட்டை உயர்த்தும் அளவில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
இந்த 4 பேட்ஸ்மேன்கள்தான் ஆர்சிபி அணிக்கு ஸ்கோரை பெற்றுக் கொடுப்பவர்கள். இவர்களை நிலைக்கவிடாமல் கட்டம்கட்டி தூக்கிவிட்டாலே கோலிபடை வீழ்ந்துவிடும் என்று பஞ்சாப் அணி சரியாகக் கணித்துள்ளது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நடுவரிசை பேட்டிங்கை விரைவாக குைலத்த ஆர்சிபி பந்துவீ்ச்சாளர்கள் கடைசி 5 ஓவர்களில் ராகுலையும், பிராரையும் அடிக்கவிட்டனர். நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசிவிட்டு கடைசியில் கோட்டைவிட்டனர்.
ஹர்ஸல் படேல் தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசினாலும் டெத் ஓவரில் பதற்றத்துடன் ரன்களை வாரி வழங்கினார். சிஎஸ்கே அணிக்கு எதிராக ஹர்சல் படேல்பந்துவீச்சை ஜடேஜா வெளுத்ததை யாரும் மறக்கவில்லை, அதேபோன்று நேற்றும் பிராரும், ராகுலும் நொறுக்கிவிட்டனர். படேல் 4 ஓவர்கள் வீசி 53 ரன்களை வழங்கினார். இந்தப் போட்டியில் ஆர்சிபியில் சாம்ஸ், ஷான் பாஸ் மட்டுேம நன்றாகப் பந்துவீசினர். மற்ற வீரர்கள் சுமார் ரகம்தான்.
வலிமையான பந்துவீச்சு, பேட்டிங் வரிசை , திறமையான கேப்டன் ஆகியவை இருந்தும் ஆர்சிபி அணிக்கு கடந்த 3 போட்டிகளில் 2-வது முறையாக சறுக்கியுள்ளது.
180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. படிக்கல், கோலி ஆட்டத்தைத்தொடங்கினர். 146 கி.மீ வேகத்தில் வீசிய மெரிடித் பந்துவீச்சை சமாளிக்க படிக்கல் தொடக்கத்திலிரந்தே திணறினார், இருப்பினும் மெரிடித் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் ஆஃப் ஸ்டெம்ப் கார்ட்வீலிங் செய்து பறக்கவிட்டார் மெரிடித். படிக்கல் 7ரன்னில் போல்டாகி வெளியேறினார்.
அடுத்துவந்த பட்டிதார்,கோலியுடன் சேர்ந்து நிதமான ஆடினார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒருவி்க்கெட் இழப்புக்கு 36ரன்கள் மட்டுமே சேர்த்தது. கோலி 34 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்பிரீத் பிரார்பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அடுத்துவந்த மேக்ஸ்வெல் அடுத்தபந்தில் அவரும் போல்டாகி பெவிலியன் திரும்பினர்.
டிவில்லியி்ர்ஸ், பட்டிதார் கவனத்துடன் ஆடினர். ஆனால், பிரார் வீசிய பந்தில் டிவில்லியர்ஸ் தூக்கிஅடிக்க எக்ஸ்ட்ரா கவரில் ராகுலிடம் கேட்சாக மாறியது. டிவில்லியர்ஸ் 3ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த ஷான் பாஸ் அகமது(8), டேனியல் சாம்ஸ்(3) இருவரின் விக்கெட்டுகளையும் பிஸ்னோய் சாய்த்தார்.
ஜேமிஸன், ஹர்ஸல் படேல் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினாலும், அதனால் அணியி்ன் வெற்றிக்கு எந்தப் பயணும் இல்லை. இருவரும் 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹர்ஸல் படேல் 31 ரன்னில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜேமிஸன் 16 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்களி்ல 8 விக்கெட் இழப்புக்கு 145ரன்கள் சேர்த்து ஆர்சி்பி அணி தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் பிரார் 3 விக்கெட்டுகளையும், பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்தது. ராகுல், பிரப்சிம்ரன் சிங் ஆட்டத்தைத் தொடங்கினர். ஒரு பவுண்டரி அடித்த பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் ஜேமிஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கெயில், ராகுலுடன் சேர்ந்தார்.
ஜேமிஸன் வீசிய 6-வது ஓவரில் கெயில் 5 பவுண்டரிகளை(மிட்ஆஃப், மிட் ஆன்,மிட் ஆன், லாங் ஆன், மிட்ஆஃப்) அடித்து ஜேமிஸனை மிரள வைத்தார். பவர்ப்ளே முடிவில் ஒருவிக்கெட் இழப்புக்குபஞ்சாப் அணி 49 ரன்கள் சேர்த்தது.
சஹல் வீசிய 7-வது ஓவரில் 2அபாரமான சிஸ்கர்களை விளாசி கெயில் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினார். சஹல்வீசிய 9-வது ஓவரில் ராகுல் சிக்ஸர், பவுண்டரி சாத்தினார்.
அதிரடியாக ஆடிய கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள்(6பவுண்டரி, 2சிக்ஸர்) சேர்த்து சாம்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தனர்.
அடுத்து வந்த பூரன்(0), ஹூடா(5), ஷாருக்கான்(0) என வரிசையாக வீழ்ந்து ஏமாற்றம் அளித்தனர். அதிரடியாக ஆடிய ராகுல் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
6-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், பிரார் சேர்ந்தார். இருவரும் கடைசி 5 ஓவர்களை வெளுத்துவாங்கி ரன்ரேட்டை உயர்த்தினர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 51 ரன்கள் சேர்த்தனர்.
ராகுல் 57 பந்துகளில் 91 ரன்கள்(5சிக்ஸர்கள், 7பவுண்டரி), பிரார் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஜேமிஸன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago