பட்டைய கிளப்பிய பிரித்வி ஷா;ஒரே ஓவரில் 6 பவுண்டரி, அதிவேக அரைசதம்: கொல்கத்தாவை காலி செய்த டெல்லி கேபிடல்ஸ்

By க.போத்திராஜ்


பிரித்வி ஷாவின் அசுரத்தனமான பேட்டிங்கால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 21 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் 2 தோல்வி, 5 வெற்றி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பிரித்வி ஷாவின் அசுரத்தனமான பேட்டிங், மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் மட்டும்தான். பிரித்வி ஷாவின் பேட்டிங் ஆய்வுகளின்படி நேற்றைய ஆட்டத்தில் ஒரே ஒரு தவறான ஷாட் மட்டுமே ஆடியுள்ளார் .

மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து(11பவுண்டரி, 3சிக்ஸர்) ஆட்டநாயகன் விருது வென்றார். தனது ஸ்ட்ரைக் ரேட்டை 200 வைத்திருந்து பிரித்வி ஷா மிரட்டிவிட்டார்.

ஆர்சிபி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஷிவம் மாவி 4ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து அருமையாகப் பந்துவீசியிருந்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் நிலைமை இப்படி பரிதாபமாக மாறும் என நினைக்கவில்லை.

ஆட்டத்தில் ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி பிரித்வி ஷா மிரட்டினார். எந்த பக்கம் பந்துவீசினாலும், எப்படி வீசினாலும் பிரித்வி ஷா பவுண்டரிகளை பறக்கவிட்டார். யுவராஜ் சிங் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பிராட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தபோது பிராட் குழப்பத்தில் நின்றாரோ அதேபோன்று மாவிக்கு எவ்வாறு பந்துவீசுவதென்றே தெரியவி்ல்லை.

மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரித்வி ஷா ஐபிஎல் டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசிய 2-வது பேட்ஸ்மேன் எனும் பெருமையை பிரித்வி ஷா பெற்றார்.

இதற்கு முன் 2021ல் அஜின்கயே ரஹானே ஆர்சிபி அணிக்கு எதிராக அடித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஒரே ஓவரில் 6பவுண்டரி அடித்த முதல் வீரர் பிரித்வி ஷா மட்டும்தான்
அதுமட்டுமல்லாமல் பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்த ஐபிஎல்சீசனில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை பிரித்வி ஷா பெற்றார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிவேக அரைசதம் அடித்த 2-வது வீரர் பிரித்வி ஷா, இதற்கு முன் ரிஷப் பந்த் 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகவேக அரைசதத்தை 17பந்துகளில் அடித்து கிறிஸ் மோிஸ் சாதனை படைத்துள்ளார். 2016ல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக மோரிஸ் அந்த சாதனையை நிகழ்த்தினார்.

இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணியில் 50 ரன்களுக்கு மேல் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200 என வைத்திருந்து குயின் டீக் காக் மட்டுமே 2016ல் கொல்கத்தா அணிக்கு எதிராக டீ காக் 200 ஸ்ட்ரைக்ரேட் வைத்தருந்தார்.அதன்பின் தற்போது பிரித்வி ஷா 200 ஸ்ட்ரைக் வைத்துள்ளார்.

முதல் ஓவரை மோசமாக வீசி அதிகமான ரன்களை வழங்கிய வீரர்களில் 3-வது இடத்தை மாவி பிடித்தார். இதற்கு முன் 2011ல் அபு நீசிம் 27ரன்கள், 2013ல் ஹர்பஜன் 26 ரன்களை முதல் ஓவரில் வாரி வழங்கியிருந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷா , ஷிகர் தவண் இருவரும் சேர்ந்து 132 ரன்கள் சேர்த்துப் பிரிந்தபோதே ஆட்டம் டெல்லி பக்கம் சென்றுவிட்டதை உணர முடிந்தது.

பந்துவீச்சிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாகச் செயல்பட்டனர். அமித் மிஸ்ராவுக்கு பதிலாக களமிறங்கிய லலித் யாதவ் அருமையாகப் பந்துவீசி 3 ஓவர்கள் 13 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். லலித் யாதவ் வீழ்த்திய இரு விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றின. அக்ஸர் படேல் வழக்கம்போல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

ஒட்டுமொத்தத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஆடினர்.குறிப்பாக இளம் கேப்டன் ரிஷப் பந்த், விக்கெட்டு விழுந்தவுடன் முன்னெடுப்பு எடுத்து 3-வ வீரராகக் களமிறங்குவது, கேப்டன்ஷிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எந்த இலக்காக இருந்தாலும் பரவாயில்லை நான் களமிறங்குகிறேன் என்று முன்வந்து களமிறங்குவதுதான் கேப்டன்ஷிப்புக்கு அழகு.

கேப்டன்ஷிப்பில் பிரச்சினையா

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை நல்ல பேட்டிங் வரிசை, வலுவான வீரர்கள் இருந்தபோதிலும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது தவற்றைச் செய்து வெற்றியைக் கோட்டை விடுகிறார்கள்.
அகமதாபாத்தில் நேற்று போட்டி நடந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது, இதில் 154 ரன்கள் சேர்த்தது என்பது மிகக்குறைவான ஸ்கோர். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நின்று விளையாடியிருந்தால் 200 ரன்களை தொட்டிருக்கும்.

கடந்த 7 போட்டிகளில் மட்டும் பவர்ப்ளே ஓவர்களில் 12 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்துள்ளதன் மூலம் பேட்டிங் வரிசையின் பலவீனம் தெரியவருகிறது. ராணா, கில், திரிபாதி இந்த மூன்று வீரர்களிடமும் கடந்த 7 போட்டிகளிலும் எந்தவிதமான நிலைத்தன்மையும் இல்லை, ஃபார்மிலும் இல்லை.

சுனில் நரேன் பேட்ஸ்மேனே கிடையாது ஆனால் தொடர்ந்து அவரை 4-வது வீரராக களமிறக்கி விக்கெட்டை இழந்து அழுத்தத்துக்கு ஆளாகிறது கொல்கத்தா அணி. இந்த சீசனில் சுனில் நரேன் வழக்கமான ஃபார்மில் இல்லை.

நடுவரிசையில் நல்ல பேட்டிங் வலு இருந்தபோதிலும் இக்கட்டான சூழலில் அணி இருக்கும்போது, அதை தூக்கி நிறுத்தக்கூடிய மனநிலையுடன் பேட்ஸ்மேன்கள் ஆடுவதில்லை. குறிப்பாக கேப்டன் மோர்கன் கடந்த 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட சிறப்பான ஸ்கோர் செய்யவில்லை.

கேப்டனாக இருக்கும் ஒரு வீரர் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் போது நிலைத்து விளையாட வேண்டும், ஆனால், சர்வதேச அளவில் மோர்கன் சிறந்த கேப்டனாக இருந்தாலும், கொல்கத்தா அணியைப் பொருத்தவரை சிறந்த கேப்டனாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. பேட்டிங்கிலும் ஆழ்ந்த கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

கேப்டன்ஷிப்பில் பிரச்சினையா அல்லது, வீரர்களை சரியாக பயன்படுத்த முடியவில்லையா, அல்லது வெளிநாட்டு வீரர் உள்நாட்டு வீரர்களுடன் சரியான முறையில் பழகமுடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு மாற்றியதிலிருந்து கொல்கத்தா அணியின் செயல்பாடுகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாகத்தான் இருக்கிறது. பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் லாக்கி பெர்குஷன், டிம் ஷீபெர்ட், பென் கட்டிங் ஆகியோரைப் பயன்படுத்தலாம்.

உள்நாட்டு வீரர்களில் ஹர்பஜனுக்கு வாய்ப்பு வழங்கவே இல்லை, குல்தீ்ப் யாதவ், சந்தீப் வாரியர் ஆகியவை களமிறக்கி பரிசோதிக்கலாம். தினேஷ் கார்த்திக்கிடம் ஒரு போட்டிக்கு கேப்டன்ஷிப்பை ஒப்படைத்துவிட்டு, மோர்கனுக்கு பதிலாக லாக்கி பெர்குஷனை களமிறக்கலாம். பந்துவீச்சு, பேட்டிங் பலப்படும்

ஆன்ட்ரூ ரஸல் பேட்டிங் மட்டுமே நேற்று ஆறுதலாக அமைந்து. டி20 போட்டியில் 6 ஆயிரம் ரன்களை ரஸல் நேற்று எட்டினார். கடைசி நேரத்தில் ரஸல் மட்டும் அதிரடியாக ஆடாமல் இருந்தால், கொல்கத்தா அணியின் ஸ்கோர் 120 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் வலுவான வீரர்களைக் கொண்டிருந்தபோதிலும் தவற்றை திருத்திக் கொள்ளாமல், மாற்றங்கள் செய்யாமல் தொடர்ந்து கொல்கத்தா அணி தோல்வியடைகிறது.

155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தவண், பிரித்வி ஷா களமிறங்கினார். மாவி வீசிய முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகளை விளாசி துவம் ெசய்தார் பிரித்வி ஷா. முதல் ஓவரிலேயே ரன்ரேட் எகிறியது. அந்த ரன்ரேட்டை குறையவிடாமல் தவணும்,பிரித்வி ஷாவும் ஆட்டத்தை நகர்த்தி்னர்.
பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். 10.2 ஓவர்களில் டெல்லி அணி 100 ரன்களை எட்டியது.

தவண் 46ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 132 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட 2-வது அதிகபட்ச பாட்னர்ஷிப்.

அடுத்து வந்த ரிஷப்பந்த், பிரித்வி ஷாவுடன் சேர்ந்து அதிரடியா சில ஷாட்களை ஆடி, ஆட்டத்தை விரைவாக முடிக்க எண்ணினார். சிறப்பாக ஆடிவந்த பிரித்வி ஷா 41பந்துகளில் 82 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து ஸ்டாய்னிஷ் களமிறங்கினார். ரிஷப் பந்த் 16 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஷ் 6 ரன்னிலும், ஹெட்மெயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டத்தை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. கொல்கத்தா அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக கொல்கத்தா அணி முதலில்பேட் செய்தது. கொல்கத்தா அணித் தரப்பில் ஷுப்மான் கில்(43), ரஸல் ஆட்டமிழக்காமல் 27பந்துகளில் 45 ரன்கள்(4சிக்ஸர்,2பவுண்டரி) சேர்தததே அதிகபட்ச ஸ்கோராகும். 15 ஓவர்கள்வரை கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ரஸலின் அதிரடியான ஆட்டம்தான் ஸ்கோரை 150 ரன்களுக்கு மேல் உயர்த்தியது. 69 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 13 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. ராணா(15), திரிபாதி(19), மோர்கன்(0),நரேன்(0), கார்த்திக்(14) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் லலித் யாதவ், அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்