சிஎஸ்கேவை இனி அசைக்க முடியாது: சன்ரைசர்ஸ் அணியை சிதைத்த தோனி படை: கெய்க்வாட், டூப்பிளசிஸ் அபாரம்: விரக்தியில் வார்னர்

By க.போத்திராஜ்


டூப்பிளசிஸ், கெய்க்வாட் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்அணி.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையி்ல் 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி மீண்டும் புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியது. 6 போட்டிகளில் ஒரு தோல்வி, தொடர்ந்து 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது.

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. 5 தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் இந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் அணி வருவது சந்தேகம்தான்.

திரும்பி வந்துட்டேனு சொல்லு…… இந்த வசனத்துக்கு ஏற்ப சிஎஸ்கே அணி அசுரத்தனமான பேட்டிங் வலிமையுடன் திரும்பி வந்துள்ளது. அதிலும் ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி ஒவ்வொரு அணிக்கும் சவாலாக இருந்து வருகிறார்கள், பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றி பெறவும் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்து விடுகிறார்கள்.

அப்படித்தான் இந்த ஆட்டமும் அமைந்தது. டூப்பிளசிஸ், கெய்க்வாட் இருவரும் சேர்த்து ஏறக்குறைய வெற்றியை 50 சதவீதத்துக்கு மேல் உறுதி செய்துவிட்டுதான் சென்றனர்.

கெய்க்வாட், டூப்பிளசி்ஸ் ஆட்டம் மிகப்பிரமாதம். அதிலும் கெய்க்வாட் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 12 பவுண்டரி உள்பட 44 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். டூப்பிளசிஸ் 38 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்துஆட்டமிழந்தார்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணியின் வெற்றியை எளிதாக்கிவிட்டனர்.

சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து 3 அரைசதங்களை அடித்த வீரர் டூப்பிளசிஸ் எனும் பெருைமயைப் பெற்றார். கடந்த ஆண்டு சீசனில் தொடர்ந்து 3 அரைசதங்களை சிஎஸ்கே அணிக்காக அடித்த முதல்வீரர் எனும் சிறப்பை கெய்க்வாட் பெற்றார்.

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை இந்த ஆட்டத்தில் வழக்கத்தை விட பீல்டிங்கில் நல்ல முன்னேற்றம் இருந்தது. டூப்பிளசிஸ், கெய்க்வாட், ஜேடஜா, ராயுடு, ரெய்னா என ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக பீல்டிங் செய்தனர்.

பந்துவீச்சைப் பொருத்தவரை தீபக் சஹர், ஜடேஜா, சாம்கரன் ஓரளவுக்கு நன்றாகப் பந்துவீசினர். மற்றவகையில் இங்கிடி, தாக்கூர் பந்துவீச்சு எடுக்கவில்லை. வார்னர், மணிஷ் பாண்டே ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஏறக்குறைய 14 ஓவர்களாகத் திணறும் அளவுக்குத்தானே பந்துவீச்சு இருந்துள்ளது. ஆதலால், வேகப்பந்துவீச்சில் இங்கிடி தவிர்த்து பெஹரன்டார்ப் வந்தால் இன்னும் பலப்படும். ஷர்துல் தாக்கூரை அடுத்த போட்டியில் அமரவைத்து கூடுதலாக சுழற்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பளிக்கலாம்.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் வெற்றி வீதம் என்பது வெறும் 26 சதவீதம் மட்டும்தான். இதுவரை சிஎஸ்கே அணிக்கு எதிராக 4 முறை மட்டுமே வென்றுள்ள சன்ரைசர்ஸ் அணி 11 முறை தோல்வி அடைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தோடு ஒப்பிடுகையில் டெல்லி மைதானம் ஓரளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் நன்றாக ஒத்துழைத்தது. சேப்பாக்கம் ஆடுகளம் மிக மட்டமான ஆடுகளம், பேட்ஸ்மேன்களையும் பந்துவீச்சாளர்களையும் வெறுக்கவைத்துவிடும் என்று விளையாடிய அணிகள் அனைத்துமே ஒப்புக்கொண்டுவிட்டன. ஆனால், டெல்லி மைதானத்தில் நேற்று பந்து நன்றாக பவுன்ஸ் ஆகியது, பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக வேகமாக வந்ததால், அடித்து ஆடுவதற்கும் ஏதுவாக இருந்தது.

இந்த ஆடுகளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டனர். அதிலும் கெய்க்வாட், டூப்பிளசிஸ் இருவரும் பந்துவீச்சாளர்களை “கவனிப்பதை” பிரித்துக் கொண்டனர். சுழற்பந்துவீச்சை அடித்து நொறுக்கும் பணியை கெய்க்வாட்டும், வேகப்பந்துவீச்சை டூப்பிளசிஸும் கவனித்துக்கொண்டனர்.

ரஷித் கான், சுசித் இருவரின் பந்துவீச்சையும் கெய்க்வாட் துவம்சம் செய்தார். மறுபுறம் சித்தார்த் கவுல், கலீல் அகமது, சந்தீப் சர்மா ஓவர்களை டூப்பிளசிஸ் வெளுத்துவாங்கினார். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

ஆனால், சன்ரைசர்ஸ் அணியில் சவாலான பந்துவீச்சாளர் என்றால், அது ரஷித் கான் மட்டும்தான். அவரால்மட்டுமே விக்கெட் வீழ்த்த முடியும் என்ற நிலை அணியி்ல் வந்துவிட்டது. கெய்க்வாட், டூப்பிளசிஸ், மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை ரிஷத் கான்தான் வீழ்த்தினார்.

சன்ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தரத்தில்தான் இருக்கின்றன. அது பந்துவீச்சு, பேட்டிங் எதுவாக இருந்தாலும் பெரியஅளவுக்கு இரு அணிகளின் தரத்தில் மாற்றமில்லை. ராஜஸ்தான் அணியிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே விளையாடுகிறார்கள், சன்ரைசர்ஸ் அணியிலும் அதே கதிதான்.

நடுவரிசை இரு அணிகளிலும் மிகவும் பலவீனம். பந்துவீ்ச்சில் இரு அணிகளிலும் சர்வதேச அளவில் அனுபவம் கொண்டவர்கள் பெரிதாக யாருமில்லை. சர்வதேச அனுபவம் இல்லாத, எதிரணிக்கு சிரமத்தை அளிக்காத பந்துவீச்சைத்தான் இரு அணிகளும் வைத்துள்ளன. இந்த இரு அணிகளுக்கும் எதிராக இந்த சீசனில் வெற்றி பெறுவது என்பது சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற சாம்பியன் அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்காது.

திரிசங்கு நிலையில் வார்னர்

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை ஏராளமான குறைபாடுகள் அணியில் உள்ளன. வெளிநாட்டு வீரர்கள் பேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்ஸன்,ரஷித் கான் ஆகிய 4 பேரை நம்பித்தான் சன்ரைசர்ஸ் அணியே இயங்குகிறது என்று கூறினாலும் வியப்பில்லை.

இந்த 4 வீரர்கள் சொதப்பினால் சன்ரைசர்ஸ் கதி கந்தல்தான். இந்த ஆட்டத்தில் சன்சைரர்ஸ் அணி எடுத்த 3 விக்கெட்டுகளுமே ரஷித்கான் எடுத்ததுதான். ரஷித் கான் ஓவரை வைத்துதான் எதிரணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைக்கு சன்ரைசர்ஸ் அணி வந்துவி்ட்டது. 6-வது அல்லது 7-வது பந்துவீச்சாளர் என்ற அமைப்பே அணியில் இல்லை.

அணியில் ஏற்கெனவே இருக்கும் பிரதான பந்துவீச்சாளர்களும் ஒழுங்காகப் பந்துவீசவில்லை என்பதால், சன்ரைசர்ஸ் நிலைமையைப் பார்த்து கேப்டன் வார்னர் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் மனஉளைச்சலில், அழுத்தத்தில் இருப்பதை அவரின் பேட்டிங்கில் காண முடிகிறது.

இந்த ஆட்டத்தில் வார்னர் தனது அரைசதத்தை 50 பந்துகளில் எட்டினார். வார்னரின் ஐபிஎல் வாழ்க்கையில் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாகும். இதற்கு முன் கடந்த 2019ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 49 பந்துகளில் அரைசதத்தை வார்னர் அடித்திருந்தார்.

இந்தஆட்டத்தில் பல ஷாட்களை வார்னர் அடிக்க முயன்று பந்து பேட்டில் மீட் ஆகவில்லை. பல நேரங்களில் வார்னர் விரக்தியில் தரையில் அமர்ந்ததைக் காணமுடிந்தது. அணியி்ன் இந்த நிலைமைக்கு தகுதியற்ற வீரர்களைத் தேர்வு செய்த தேர்வாளர்களைக் குறைகூறுவதா, நிர்வாகத்தை கூறுவதா, கேப்டன் என்ற முறையில் என்ன செய்வது எனத் தெரியாமல் வார்னர் திணறுகிறார்.

இந்த சீசனில் முதல்முறையாக நேற்று சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்து ஓரளவுக்கு சவாலான ஸ்கோரை எடுத்தது. ஆனால், மோசமான பந்துவீச்சு இருந்ததால் இந்த ஸ்கோரைக் கூட தக்கவைக்க முடியவில்லை

நடராஜன், புவனேஷ்வர் குமார் இருவரும் இல்லாதது பந்துவீச்சில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச தரத்தில் எந்த பந்துவீச்சாளரும் இல்லை. ஹேஸன் ஹோல்டரை அணிக்குள் கொண்டுவந்தால், பேர்ஸ்டோ, வில்லியம்ஸன், இருவரில் ஒருவரை அமரவைக்க வேண்டும். இருவருமே அணி்யின் பேட்டிங்கிற்கு முக்கியமானர்கள்.

எதிரணிக்கு எந்தவிதமான சிரமத்தையும், நெருக்கடியையும் அளிக்காத பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம். சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, கலீல் அகமது ஆகியோருக்கு சர்வதேச அனுபவமே கிடையாது, அதுமட்டுமல்லாமல் லைன் லென்த்தில் தொடர்ச்சியாக வீசவும் முடியாது, ஓவருக்கு 3 பந்துகள் சரியான லென்த்தில் வீசினாலே பெரிய விஷயம். 3 பந்துகளை லென்த்தில் வீசினால், அடுத்த 3 பந்துகளை ஸ்லாட்டில் வீசி அடிவாங்குவார்கள். இதுபோன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தால், 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் சன்ரைசர்ஸ் அணி டிபென்ட் செய்வது கடினம்.

வார்னர் சாதனைகள்

இந்த சோகங்களுக்கும் மத்தியில் வார்னருக்கு கிடைத்த ஒரே ஆறுதல் டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் கெயில், பொலார்ட், சோயில் மாலிக் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தனர்.

அதில் சன்ரைசர்ஸ் அணிக்காக மட்டுமே 4 ஆயிரம் ரன்களை வார்னர் சேர்த்துள்ளார். வார்னர் நேற்று அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 50வது அரைசதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த 8-வது வீரர் எனும் சிறப்பு வார்னுக்குக் கிடைத்தது.

ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் நிலைமை மட்டுமல்ல வார்னர் நிலைமையும் பரிதாபம்.

அபாரமான தொடக்கம்

172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் கெய்க்வாட், டூப்பிளசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டத்தி்ன் தொடக்கத்திலிருந்தே இருவரும் சன்ரைசர்ஸ் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணிவிக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் குவித்தது.

அதிலும் கெய்க்வாட், சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சை நொறுக்கி அள்ள, டூப்பிளசிஸ் வேகப்பந்துவீச்சை விளாசித் தள்ளினார். 32 பந்துகளில் டூப்பிளசிஸ் அரைசதமும், 36 பந்துகளில் கெய்க்வாட் அரைசதமும் அடித்தனர் . இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் வார்னர் பல பந்துவீச்சாளர்களை மாறி,மாறிப் பயன்படுத்தியும் முடியவில்லை.

முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் கெய்க்வாட் 75 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மொயின்அலி, அதிரடியாக சில ஷாட்களை ஆடி 15 ரன்கள் சேர்த்து ரஷித்கான் வீசிய 15-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். சிறப்பா ஆடிவந்த டூப்பிளசிஸ் 56 ரன்னில் ரஷித்கான் வீசிய அதே ஓவரில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

ரெய்னா 17 ரன்களுடனும், ஜடேஜா 7 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 18.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள்சேர்த்து சிஎஸ்கே அணி வென்றது.

வார்னர், பாண்டே ஜோடி

முன்னதாக சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. பேர்ஸ்டோ 7 ரன்னில் சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே, வார்னர் ஜோடி அணியை வழிநடத்தினர். மணிஷ் பாண்டே அவ்வப்போது அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர் அடித்தாலும் வார்னரால் ஷாட்களை ஆடமுடியாமல் திணறினார்.

மணிஷ் பாண்டே 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க சிஎஸ்கே பந்துவீச்சாளர்களும் நீண்டநேரம் போராடி 18-வது ஓவரில்தான் முடிந்தது. வார்னர் 57 ரன்னில் இங்கிடி பந்துவீச்சில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 106 ரன்கள் சேர்த்தனர். மணிஷ் பாண்டே 46 பந்துகளி்ல் 61 ரன்கள் சேர்த்து இங்கிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

வில்லியம்ஸன் அதிரடி

கடை நேரத்தில் களமிறங்கிய கேதார் ஜாதவ், வில்லியம்ஸன் இருவரும் அதிரடியாக ஆடினர். தாக்கூர் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த வில்லியம்ஸன் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார்.

வில்லியம்ஸன் 10 பந்துகளில் 26 ரன்களும், ஜாதவ் 12ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்கள் குவித்ததால்தான், 171 ரன்களை எட்ட முடிந்தது, இல்லாவிட்டால் 150 ரன்களுக்குள் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் இருந்திருக்கும். சிஎஸ்கே தரப்பில் இங்கிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்