கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தி்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஹென்றியின் அபார தொடக்க ஓவர்களில் 27/5 என்று சரிந்து பிறகு சிறீவதனா (66), குலசேகரா (58) ஆகியோரின் இன்னிங்ஸ்களினால் 47 ஓவர்களில் 188 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் மெக்கல்லம், கப்தில் தொடக்க ஜோடியினர் முதல் 10 ஓவர்களில் கருணையற்ற அதிரடியில் 108 ரன்களைச் சேர்க்க 21 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இலங்கையை தவிடுபொடியாக்கியது.
ஒருநாள் போட்டியை டி20 போட்டியாகக் கருதி விளையாடியிருப்பார் போலும் மெக்கல்லம்.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் பேட் செய்ய முடிவெடுத்தார். குணதிலக, தில்ஷன் களமிறங்கினர். 8 ரன்கள் எடுத்த குணதிலக அதிவேக பவுலர் மில்னவின் பந்துவீச்சில் லூக் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக 9 ரன்கள் எடுத்த தில்ஷன், ஹென்றியின் அருமையான ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்றார், டாப் எட்ஜ் எடுத்து மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனது.
சண்டிமால், திரிமானே சேர்ந்தனர், ஆனால் மில்ன மணிக்கு 150 கிமீ வேகத்தை அடிக்கடி தொட்டார். ஹென்றியையும் அடிக்க முடியவில்லை இதனால் 19 பந்துகளைச் சந்தித்த திரிமானே ஹென்றியிடம் எல்.பி.ஆனார். அது ஒரு இன்கட்டர் பந்தாகும். அடுத்த பந்திலேயே கேப்டன் மேத்யூஸ் ஃபுல் பந்தை எட்ஜ் செய்ய பந்தை ஸ்லிப்பில் இடது புறம் டைவ் அடித்துப்பிடித்தார் லேதம். ஹேட்ரிக் பந்தை சிறீவதனா நேர் பேட்டில் தடுத்தாடி முறியடித்தார். பிறகு 5 ரன்களுக்கு 16 பந்துகள் ஆடிய சண்டிமாலும் ஹென்றியின் அவுட்ஸ்விங்கருக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10-வது ஓவர் முடிவில் இலங்கை 29/5 என்று நிலைதடுமாற்றத்தில் இருந்தது. ஹென்றி முதல் 7 ஓவர்களில் 1 மெய்டன் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.
சிறீவதனாவும் 10 ரன்களில் காலியாகியிருப்பார் ஆனால் மெக்லினாகன் பந்தில் மிட்விக்கெட்டில் நிகோல்ஸ் கேட்சைக் கோட்டைவிட்டதால் 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். கபுகேதரா இடையில் 8 ரன்களுக்கு பிரேஸ்வெல் பந்தில் அவுட் ஆக இலங்கை 65/6 என்று ஆனது. ஆனால் சிறீவதனா, நுவன் குலசேகரா ஜோடி இணைந்து 21 ஓவர்களில் 98 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சிறீவதனா 66 ரன்களில் பிரேஸ்வெல்லிடம் வீழ்ந்தார்.
குலசேகரா தொடக்கம் முதலே பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார். மில்னவின் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிக்சர் விளாசினார். ஸ்லாக் ஸ்வீப், கவர் டிரைவ் என்று நியூஸிலாந்தை வெறுப்பேற்றினார். 73 பந்துகள் சந்தித்த குலசேகரா 2 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து மெக்லினாகன்னிடம் வீழ்ந்தார். இலங்கை 47-வது ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹென்றி 4 விக்கெட்டுகளையும், பிரேஸ்வெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மெக்கல்லம், கப்திலின் அனாயாச அதிரடி:
மெக்கல்லம் தனது வழக்கமான ஒதுங்கிக் கொண்டு ஆடும் ஷாட்களையும், ஷார்ட் ஆர்ம் புல்களையும் வெளுத்து வாங்க, மார்டின் கப்தில் தனது டைமிங்கினால் அடித்து ஆடினார். இந்த பவுலர், இந்த லெந்த் என்றெல்லாம் கணக்கில்லை, எங்கு போட்டாலும் அடி என்ற ரீதியில் 4-வது ஓவரிலிருந்து 9-வது ஓவர் வரை 80 ரன்களை விளாசினர். இதில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும். இதனால் 9.1 ஓவரில் 100 ரன்களை எட்டியது நியூஸிலாந்து.
மைதானத்தில் இந்த இடத்தில் பவுண்டரி வரவில்லை என்று கூறமுடியாத அளவுக்கு அனைத்து இடங்களிலும் பந்துகள் பறந்து கொண்டிருந்தன. குலசேகரா 3 ஓவர்கள் 27 ரன்கள், லக்மல் 3 ஓவர்கள் 24 ரன்கள், மேத்யூஸ் ஒரு ஓவர் 17 ரன்கள், மேத்யூஸ் வந்தவுடன் மிகப்பெரிய சிக்சர் அடித்த மெக்கல்லம், அஜந்தா மெண்டிஸ் ஓவரில் 3 பவுண்டரிகள் என்று 23 பந்தில் அரைசதம் கண்டார்.
கப்திலும் திடீரென ஆக்ரோஷம் காண்பித்தார் சிறீவதனாவின் ஓரே ஓவரில் மேலேறி வந்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார் மார்டின் கப்தில். மெக்கல்லம் 25 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து பேக்வர்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து சிறீவதனாவிடம் அவுட் ஆக நியூஸிலாந்து 10.1 ஓவர்களில் 108/1.
லேதம் 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து தில்ஷனிடம் பவுல்டு ஆனார். நிகோல்ஸ் 21 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மார்டின் கப்தில் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்து சிறீவதனாவிடம் அவுட் ஆனார். டெய்லர் 5 ரன்கள் நாட் அவுட். 21 ஓவர்களில் 191 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளுடன் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago