ஏபிடி சரவெடி: கடைசிப்பந்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி;அன்று அஸ்வின் நேற்று மிஸ்ரா; பந்த் தவறான முடிவு:ரிஷப், ஹெட்மெயர் போராட்டம் தோல்வி

By க.போத்திராஜ்


360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம், பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் ஆர்சிபி முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் 2 தோல்வி, 4 வெற்றி என 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் இந்த ஆட்டம் அமைந்திருந்தது. தொடக்கத்தில்கட்டுக்கோப்பாக பந்துவீசிய ஆர்சிபி அணியினர் கடைசி நேரத்தில் ரிஷப்பந்த், ஹெட்மயரால் வெளுத்து வாங்கப்பட்டனர்.

கடைசிஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தைபந்த் எதிர்கொண்டு ஒரு ரன் அடித்தார். 2-வது பந்தில் ஹெட்மயர் ஒரு ரன், 3-வதுபந்தில் பந்த் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தில் ரிஷப் பந்த் 2 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் பந்த் பவுண்டரி அடிக்க ஆட்டம் பரபரப்படைந்தது. கடைசிப்பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்த் அடித்த ஷாட் பவுண்டரியை மட்டுமே பெற்றுக் கொடுக்க ஒரு ரன்னில் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

வெற்றிக்காக போராடிய ஹெட்மெயர் 25 பந்துகளில் 53ரன்களுடனும், ரிஷப் பந்த் 48 பந்துகளில் 58 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு இளம் பேட்ஸ்மேன்களின் போராட்டக் குணம் பாராட்டுக்குரியது.

ஆர்சிபி அணி ஐபிஎல் டி20 தொடரில் 3-வது முறையாக ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, இதற்கு முன் இதேபோன்று ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை வென்றுள்ளது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபிடிவில்லியர்ஸ் மட்டும்தான். அதிலும், டெல்லி அணி வீசிய கடைசி ஓவரில்தான் ஒட்டுமொத்த ஆட்டமும் டிவில்லியர்ஸால் திரும்பியது. ஸ்டாய்னிஷ் வீசிய கடைசி ஓவரில் டிவில்லியர்ஸ் 23 ரன்கள் சேர்தத்தால்தான் ஸ்கோர் 171 ரன்கள் வந்தது. இல்லாவிட்டால், ஆர்சிபி அணி இருந்த நிலைக்கு 150 ரன்களை கடப்பதே கடினமாக இருந்தது. அதிலும் டிவில்லியர்ஸ் விரைவாக ஆட்டமிழந்திருந்தால் ஆர்சிபி அணி 120 ரன்களை தொடுவததே கடினம்.

ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த சுமைையயும் தோளில் சுமந்த டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்கள்(5சிக்ஸர்கள்,3பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய வீரர் எனும் பெருமையை டிவில்யர்ஸ் பெற்றார். டிவல்லியர்ஸ் 3,288 பந்துகளில் 5 ஆயிரம் ரன்களை டிவில்லியர்ஸ் எட்டியுள்ளார். இதுபோன்று எந்த பேட்ஸ்மேனும் வேகமாக எட்டியதில்லை. டேவிட் வார்னருக்கு அடுத்தபடியாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வெளிநாட்டு வீரர் டிவில்லியர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்ஸ் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் 5வது முறையாக அந்த அணிக்கு எதிராக நேற்று அரைசதம் அடித்தார். இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி, ரஹானே இருவரும் 5 அரைசதங்கள் அடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அரைசதம் அடித்து 23 முறை டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்து அதிகமுறை அரைசதத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் எனும் பெருமையை பெற்றார். டிவில்லியர்ஸுக்கு அடுத்தபடியாக தோனி 19 முறை அரைசதங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே டிவில்லியர்ஸ் மட்டும் தான். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்திருந்தபோது 171 ரன்களை எட்டுமா என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், களத்தில் டிவில்லியர்ஸ் நிலைத்து நின்றால் கடைசியில் எதிரணிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவார் என டெல்லி கேபிடல்ஸ் அணி உணரவில்லை. அதை நேற்று செய்து காட்டினார் டிவில்லியர்ஸ்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர், கடந்த 2 ஆண்டுகளாக எந்த விதமான உள்நாட்டுப்போட்டிகளிலும் லீக் ஆட்டங்களிலும் விளையாடத ஒரு பேட்ஸ்மேன்கள் , இப்படி நேர்த்தியாக ஷாட்களை ஆட முடியுமா, அதிரடியான ஆட்டத்தை விளையாட முடியுமா என டிவில்லியர்ஸ் ஆட்டத்தைப் பிரமிப்பு வருகிறது.

ஒரு சில பேட்ஸ்மேன்கள், சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன் பேட்டிங் பயிற்சி எடுத்துவந்து பேட் செய்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு பேட்டில் பந்து சிக்குவதே இல்லை. ஆனால், டிவில்லியர்ஸ் பேட்டை எந்தப் பக்கம் சுழற்றினாலும் சிக்ஸர், பவுண்டரியாக் செல்கிறது.அதிலும் நேற்று ஸ்டாய்னிஷ் அடித்த 3 சிக்ஸர்களுமே ஏபிடியின் ஸ்டைலிஷான ஆட்டத்துக்கு உதாரணம்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே டெல்லி அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.ஆனால், பந்த், ஹெட்மெயர் கூட்டணியை கடைசிவரை உடைக்க முடியவில்லை. ஜேமிஸன், சுந்தர், படேல் மூவரும் சிறப்பாகப் பந்துவீசினர், சிராஜ் நேற்று ரன்களை வாரி வழங்கிவிட்டார்.

டெல்லி அணியைப் பொருத்தவரை ரிஷப் பந்த் கேப்டன்ஷிப்பில்ல செய்த தவறுதான் ஆர்சிபி அணி 171 ரன்கள் குவிக்கக் காரணமாக இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய லீக் ஆட்டத்தில் அஸ்வினுக்கு 3 ஓவர்களுடன் ரிஷப்பந்த் நிறுத்தி கடைசி ஓவரை ஸ்டாய்னிஷை வீசச் செய்தார். அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப்பின், அஸ்வினுக்கு 4 ஓவர்கள் வழங்கியிருக்க வேண்டும் என டெல்லி அணி பயிற்சியாளர் பாண்டிங் தவறை ஒப்புக்கொண்டார். அதேபோன்றுதான் நேற்று அமித் மிஸ்ராவை கையாண்டதிலும் தவறு ஏற்பட்டது.

டி20 போட்டிகளில் 9 முறை மட்டுமே கடைசி ஓவரை ஸ்டாய்னிஷ் வீசியுள்ளார். ஐபிஎல் தொடரில் அந்த அனுபவம் மிகக் குறைவு எனும்போது இதுபோன்ற முடிவை டிவில்லியர்ஸ் களத்தில் இருக்கும்பது பந்த் எடுத்திருக்க கூடாது.

இந்த ஆட்டத்திலும் அனுபவம் மிகுந்த பந்துவீச்சாளர், ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டை வீழ்த்திய அமித் மிஸ்ராவுக்கு 3 ஓவர்களுடன் நிறுத்தி ஸ்டாய்னிஷ்க்கு கடைசி ஓவரை வழங்கினார். அமித் மிஸ்ராவுக்கு 4 ஓவர்களை முடித்துவிட்டு, கடைசி ஓவரை ரபாடாவை வீசச் செய்திருக்கலாம், அல்லது ஆவேஷ் கானை பந்துவீசச் செய்திருக்கலாம்.

ஸ்டாய்னிஷ் முழுநேர பந்துவீச்சாளரும் அல்ல, டெத்ஓவர் ஸ்பெலிஸ்டும் அல்ல. அதிலும் டிவில்லியர்ஸ் போன்ற வலிமையான பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கும் போது பந்துவீச்சாளரைத் தேர்வு செய்து பயன்படுத்தவேண்டும் . கடைசிஓவரில் 23 ரன்களைத் தடுத்திருந்தால், டெல்லி அணி வென்றிருக்கும்.


இதே கருத்தைத்தான் போட்டி முடிந்தபின் ரிஷப்பந்த்தும் தெரிவித்துள்ளார். கூடுதலாக 15 ரன்களை கொடுத்துவிட்டோம் என தவறை உணர்ந்துள்ளார். அமித் மிஸ்ரா 3 ஓவர்கள்வீசி 27 ரன்கள் ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார், அவருக்கு முழுமையாக ஓவர்களை வழங்கியிருக்க வேண்டும்.

மற்றவகையில் ரிஷப்பந்த் பேட்டிங்கில் கேப்டனுக்குரிய பொறுப்புணர்்ச்சியுடன் பேட் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஹெட்மெயருடன் சேர்ந்து களத்தில் கடைசிவரை ரிஷப்பந்த் போரிட்டதற்கு வெற்றி கிைடத்தே தீர வேண்டும். ஆனால், கிரிக்கெட்டில் ஒரு ரன் என்பது எவ்வளவு முக்கியத்துவம் என்பதை இந்தப் போட்டி உணர்த்திவிட்டது.

172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். தவண் 6 ரன்னில் ஜேமிஸன் பந்துவீச்சிலும் அடுத்து வந்த ஸ்மித் 4 ரன்னில் சிராஜ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். நிதானம் காட்டிய பிரித்வி ஷாவும் 21 ரன்னில் படேல் பந்துவீச்சில் வெளியேறினார். 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஷ் , ரிஷப்பந்த் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர்.


ஸ்டாய்னிஷ் 22 ரன்கள்சேர்த்திருந்த போது, படேல் பந்துவீ்ச்சில் வி்க்கெட்டை இழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். 5-வது விக்கெட்டுக்கு வந்த ஹெட்மெயர், பந்த்துடன் சேர்ந்தார். ரிஷப்பந்த் பொறுமையாக ஆட, ஒருபக்கம் ஹெட்மெயர் சிக்ஸர், பவுண்டர்களாக நொறுக்கி எடுத்தார்.
ஒரு கட்டத்தில் 3 ஓவர்களில் வெற்றிக்கு டெல்லி அணிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது.

ஜேமிஸன் வீசிய 18-வது ஓவரில் ஹெட்மயர் 3 சிக்ஸர்களை விளாசி பதற்ரத்தைக் குறைத்தார். படேல் வீசிய 19-வது ஓவரி்ல் 11 ரன்கள் சேர்த்தது பந்த், ஹெய்மெயர் கூட்டணி.கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரில் ரிஷப்பந்த், 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஒரு ரன்னில் டெல்லி கேபிடல்ஸ் தோல்வி அடைந்தது.


ஹெட்மெயர் 25 பந்துகளில் 53ரன்களுடனும், ரிஷப் பந்த் 48 பந்துகளில் 58 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. ஆர்சிபி தரப்பில் ஹர்ஸல்படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


முன்னதாக ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. விராட் கோலி, படிக்கல் நல்ல தொடக்கம் அளித்தனர். ஆனால், ஆவேஷ் கான் பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் எடுத்து கோலி 12ரன்னில் போல்டாகினார். இசாந்த் சர்மா பந்துவீச்சில் 17ரன்னில் படிக்கல் போல்டாகினார். நிதானமாக ஆடிய மேக்ஸ்வெல் 25 ரன்னில் மிஸ்ராவிடம் விக்கெட்டை இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு பட்டிதார், ஏபிடி கூட்டணி 54 ரன்கள்சேர்்த்து நம்பிக்கை அளித்தனர். பட்டிதார் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.


ஏபிடி வழக்கம் போல் தனது காட்டடி ஆட்டத்தையும் கடைசியில் வெளிப்படுத்தி பந்தை நாலாதிசையிலும் பறக்கவிட்டு 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுந்தர் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னின் வீசிய கடைசி ஓவரை வெளுத்துவாங்கிய டிவில்லியர்ஸ் 23ரன்கள் சேர்்த்தார். டிவில்லியர்ஸ் 75 ரன்களுடனும் சாம்ஸ் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்