ஷார்ஜாவில் நடைபெற்ற இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் ஸ்கோர்கள் சமமாக சூப்பர் ஓவர் முறையில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் வென்று, டி20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து உலகக்கோப்பை டி20 தொடரில் தான் ஒரு சவால் என்பதை அறிவித்துள்ளது.
சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது, உமர் அக்மல், கேப்டன் அப்ரீடி களமிறங்கினர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் மிக அருமையான ஒரு ஓவரை வீசினார். முதல் 2 பந்துகள் ஃபுல் லெந்தில் அருமையாக வீசப்பட இரண்டையுமே கண்ணை மூடிக் கொண்டு சுழற்றினார் அப்ரீடி, ஆனால் ஒன்று சிக்கவில்லை மற்றொரு பந்தில் ஒரு லெக் பை மட்டுமே வந்தது. பிறகு உமர் அக்மலுக்கும் ஒரு பந்து சிக்காமல் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. அடுத்த பந்து 90 மைல்கள் வேகம் கொண்ட பந்து, அப்ரீடி ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயன்றார் பந்து அவரைத் தொடர்ந்தது மீண்டும் லெக்பை. பிறகு ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான யார்க்கர். ரன் இல்லை. கடைசி பந்தில் உமர் அக்மல் பவுல்டு. ஆக மொத்தம் 3 ரன்களே. மிக அருமையான சூப்பர் ஓவரை வீசினார் ஜோர்டான்.
4 ரன்களை இங்கிலாந்து கஷ்டப்பட்டே எடுத்தது. அப்ரீடி சூப்பர் ஓவரை வீசினார். அன்வர் அலி, பட்லர் இரண்டாவது ரன்னை ஓடும் போது பந்தை சரியாக சேகரிக்கவில்லை, இதனால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதலில் இரு அணிகளும் 154 ரன்களையே எடுத்ததால் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேட்பன் இயன் மோர்கன் பேட் செய்ய முடிவெடுத்தார். முதல் பந்திலேயே ஜேஜே ராய், அமீர் யாமினிடம் எல்.பி.ஆனார். ஆனால் அதன் பிறகு ஜேஎம்.வின்ஸ் மற்றும் ஜோ ரூட் இணைந்து அதிரடி காண்பித்தனர். ஜோ ரூட் 22 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார், ஆனால் வின்ஸுக்கு சொஹைல் தன்வீர் அவரது ஸ்கோர் 4-ஆக இருந்த போது தன் பவுலிங்கில் கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார். ஜோ ரூட் நல்ல அதிரடி மூடில் இருந்தார். அதுவும் 7 அடி உயர மொகமது இர்பானை அவர் ஸ்டாண்டுக்கு அடித்த சிக்ஸ் அபாரமானது. அவர் 4 பவுண்டரி ஒரு சிச்கருடன் 32 ரன்கள் எடுத்து அஃப்ரீடியின் அபாரமான பந்துக்கு பவுல்டு ஆனார்.
அடுத்த பந்தே மொயீன் அலியையும் வீழ்த்தினார் அப்ரீடி. மொயீன் அலி அப்ரீடியிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இயன் மோர்கன் 1 சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஷோயப் மாலிக் பந்தில் பவுல்டு ஆனார். பட்லர், பில்லிங்ஸ் அடுத்தடுத்து வெளியேற 13-வது ஓவரில் 86/6 என்று தடுமாறியது இங்கிலாந்து.
ஆனால் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ் இணைந்து 39 பந்துகளில் 60 ரன்களை விளாசினர், குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 24 பந்துகளில் 37 ரன்கள் விளாசி இங்கிலாந்து வெற்றிக்கு முக்கியக் காரணமானார். இவரும் மொகமது இர்பானை அடித்த சிக்ஸ் அற்புதமானது. வின்ஸ் 45 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 86/6-லிருந்து 20-வது ஓவர் முடிவில் 154/8 என்ற ஸ்கோரை எட்டியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகித் அப்ரீடி 4 ஓவர்கள் வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 2.2 ஓவர்களில் ஷெசாத், ஹபீஸ், ரபாதுல்லா மொகமது ஆகியோரை இழந்து 11/3 என்று சரிவு கண்டது. இதில் ஹபீஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
ஷோயப் மாலிக் தன் வாழ்நாளின் சிறந்த டி20 இன்னிங்ஸை ஆடினார். 54 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து 19.5-வது ஓவரில் 9-வது விக்கெட்டாக அவுட் ஆனார். மொகமது ரிஸ்வான் 24 ரன்களை எடுக்க பேட்டிங்கிலும் அதிரடி அப்ரீடி 20 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து வில்லே பந்தில் பவுல்டு ஆனார். உமர் அக்மல் 4 ரன்களில் அவுட் ஆகி சோபிக்காமல் போனார்.
19 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 145/6 என்று இருந்தது. கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இதில் கடைசி ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸ் பந்து ஒன்றை லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார் சொஹைல் தன்வீர்.
அடுத்த பந்தில் ரன் இல்லை, அடுத்த பந்தில் ஒரு ரன், அதற்கு அடுத்த பந்தில்தான் ஷோயப் மாலிக், சிக்ஸ் அடித்து மேட்சை முடிக்கும் எண்ணத்துடன் தூக்கி அடிக்க லாங் ஆனில் கேட்ச் ஆனது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தன்வீர் சுழற்றினார் ஆனால் பந்து சிக்கவில்லை, ஆனால் விக்கெட் கீப்பரிடம் செல்வதற்கு முன்பாக ஒரு ரன்னை எடுக்க தன்வீரும், அன்வர் அலியும் ஓடினர், பட்லர் த்ரோ செய்தார் ஆனால் தன்வீர் ஒரு ரன்னை எடுத்து முடித்தார். 154 ரன்களில் முடிய, சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றது, இதில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக ஷோயப் மாலிக்கும், தொடர் நாயகனாக வின்ஸும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான், ஒருநாள் மற்றும் டி20 தொடரை இங்கிலாந்திடம் இழந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago