பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு, மோர்கனின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. 124 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 பந்துகள்மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் சேர்த்து5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியது. 6 போட்டிகளில் 4 தோல்வி, 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி உள்ளது. என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை பஞ்சாப் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 4 தோல்வி, 2 வெற்றி 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் நீடிக்கிறார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் பெறும் 19-வது வெற்றி இதுவாகும். கடந்த 6 போட்டிகளில் 6-ல் கொல்கத்தா அணிதான் வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிகமான வெற்றிகளைக் குவித்த அணியாகவும் கொல்கத்தா அணி இருக்கிறது. அடுத்த இடத்தில் 15 வெற்றிகளுடன் சிஎஸ்கே இருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டுக்குப்பின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் டி20 போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது. கடைசியாக2015, ஏப்ரல்24ம் தேதி ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டில் வென்றது.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் 100 சதவீத உழைப்பும், பொறுமையாக களத்தில் இருந்து நிதானமாக ஆடிய மோர்கனின் ஆட்டமும்தான் காரணம். கேப்டன் மோர்கன் 40 பந்துகளில் 47 ரன்களுடன்(2சிக்ஸர்,4பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்
மோர்கன் ஐபிஎல் தொடரில் கடந்த 8 இன்னிங்ஸ்களில் 16*, 0, 7, 29, 7, 2, 1, 4 ரன்கள்சேர்த்த நிலையில் நீண்டநாட்களுக்குப்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறைந்த ஸ்கோர்தானே எளிதாக சேஸிங் செய்யலாம் என்ற எண்ணிய கொல்கத்தா அணிக்கு இந்த வெற்றி எளிதாகவும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வழக்கம் போல் தள்ளாடியது. ஆனால், மோர்கன், திரிபாதி கூட்டணி சேர்ந்து விக்கெட் சரிவிலிருந்து அணியைத் தடுத்தனர், 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தப் போட்டியில் மோர்கன் 4 ரன்கள் சேர்த்தபோது, டி20 போட்டிகளில் 7ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை மோர்கன் பெற்றார்.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ராணா, கில் ஆகியோரின் பேட்டிங் படுமோசமாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஷுப்மான் கில், இந்த தொடரில் இதுவரை எந்த உருப்படியான ஸ்கோரும் செய்யவி்ல்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று சொல்வார்களே அதுபோல் ஷுபமான் கில் சராசரி ஆண்டுக்கு ஆண்டு சரி்ந்து வருகிறது. கடந்த 2018ல் 40.60, 2019ல்32.88, 2020ல் 36.66, 2021ல் 14.88 ஆக இருக்கிறது.
நிதிஷ் ராணா அடித்தால் 80 ரன்கள் இல்லாவி்ட்டால் டக்அவுட் என்ற ரீதியில் விளையாடுகிறார். கொல்கத்தா அணிக்கு நல்ல நிலையான தொடக்க வீரர்கள் அவசியம், இல்லாவிட்டால் மாற்று வழியைத் தேட வேண்டும்.
ஆன்ட்ரூ ரஸல் நேற்று ஷாட்களை அடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டால், ஆனால் பாவம், பேட்டில் ஒருபந்துகூட சிக்கவில்லை. மீண்டும் தனது இயல்பான ஃபார்முக்கு வருவதற்கு ரஸல் முயற்சித்து வருகிறார் முடியவில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தவரை மாவி, வருண், நரேன், பிரசித் கிருஷ்ணா, கம்மின்ஸ் என அனைவரும் கட்டுக்கோப்புடன் வீசினர்.அதனால்தான் 123 ரன்களில் சுருட்ட முடிந்தது. குறிப்பாக பஞ்சாப் அணியின் பிக் ஹிட்டர்ஸ் கேஎல் ராகுல், அகர்வால், கெயில் போன்றபேட்ஸ்மேன்கள் நிலைக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தது நல்ல விஷயம். ஒட்டுமொத்தத்தில் வறண்டு கிடந்த கொல்கத்தாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது, தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர உதவும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ஆடுகளத்தை குறை சொல்வதா, அல்லது பனிப்பொழிவைக் குறை கூறி தப்பிப்பார்களா எனத் தெரியவில்லை. 123 ரன்களை வைத்துக்கொண்டு டிபென்ட் செய்வது கடினம். பேட்டிங் படுமோசம் என கேப்டன் கே.எல்.ராகுல் தனது பேட்டியில் ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனாலும் இவ்வளவு மோசமாக பேட்டிங் செய்யக்கூடாது.
கேப்டன் ராகுல் ஆட்டமிழந்தபின், சீரான இடைவெளியில் அதாவது 10 முதல் 15 ரன்கள் இடைவெளியில் வி்க்கெட் விழுந்தவாறு இருந்தது.38 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்திருந்த பஞ்சாப் அணி அடுத்த 60 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
கொல்கத்தா அணிக்கு எதிராக 2-வது குறைந்தபட்ச ஸ்கோரையும் பஞ்சாப் அணி பதிவு செய்தது. இதற்கு முன் 2011ல் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்தது.
இதில் கிறிஸ் கெயில் டி20 போட்டிகளில் 29-வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை முதல்பந்திலேயே கெயில் டக்அவுட் ஆவது இது 2-வது முறையாகும்.
பஞ்சாப் அணியில் பல குறைபாடுகள் இருக்கின்றன. அதை எப்போது களையப் போகிறார்கள் எனத் தெரியவி்ல்லை. இதுவரை நடந்த 6 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே பவர்ப்ளேில் நல்ல ஸ்கோர் செய்துள்ளார்கள், மற்ற ஆட்டங்களில் எல்லாம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளனர்.
பஞ்சாப் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களான நிகோலன் பூரன், கெயில் இருவரும் பேட்டிங்கில் இந்த முறை தடுமாறுகிறார்கள். பூரன் 4- முறை இந்தத் தொடரில் டக்அவுட் ஆகியுள்ளார். அடுத்தப் போட்டியில் பூரன் அல்லது கெயிலை அமரவைத்து டி20 போட்டிகளில் முதலிடத்தில் இருக்கும் டேவிட் மலானை களமிறக்குவது அவசியமாகும்.
இந்த ஆட்டத்தில் கேப்டன் ராகுலுக்கு அடுத்தார்போல் அதிகபட்ச ஸ்கோர் என்பது டெய்ல்எண்டர் கிறிஸ் ஜோர்டன் கடைசி நேரத்தில் சிக்ஸர், பவுண்டரி விளாசி 30 ரன்கள் சேர்த்ததாகும். ஜோர்டனும் இந்த ரன்களை சேர்்க்காமல் இருந்தால், 100 ரன்களுக்குள் பஞ்சாப் கதை முடிந்திருக்கும்.
124 ரன்கள் ேசர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணிகளமிறங்கியது. வழக்கம்போல், விக்கெட் சரிவு இருந்தது. ஹென்ரி்க்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே ராணா(0) ஆட்டமிழந்தார். ஷமி ஓவரில் 9 ரன்னில் கில் வெளியேறினார், நரேன் டக்அவுட்டில் அர்ஷ்தீப் சிங் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்து 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மோர்கன், திரிபாதி ஜோடி சேர்ந்து அணியைசரிவிலிருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து 66 ரன்கள் சேர்த்தனர். திரிபாதி நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார், தேவையில்லாமல் ஷாட் அடித்து ஹூடா பந்துவீச்சில் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த ரஸல் பெரிய ஷாட்களை ஆட முயன்றார், ஆனால் பந்து மீட் ஆகவில்லை. ரஸல் 10 ரன்னில் ரன்அவுட்ஆகினார்.
தினேஷ் கார்த்திக்,மோர்கன் ஜோடி கடைசிவரை நிலைத்து நின்று வெற்றி பெற வைத்தனர். மோர்கன் 47, தினேஷ் 12 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.16.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஷமி, ஹென்ரிக்ஸ், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு வி்க்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக பஞ்சாப் அணி முதலில்பேட் செய்தது. ராகுல், அகர்வால் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். ராகுல் 19 ரன்கள்சேர்த்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்தபின் பஞ்சாப் அணியின் சரிவு தொடங்கியது. சீரான இடைவெளியில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
கெயில்(0) அகர்வால்(31), ஹூடா(1), பூரன்(19), ஹென்ரிக்ஸ்(2), ஷாருக்கான(13), ஜோர்டான்(30),பிஸ்னோய்(1) என சீரான இடைவெளியில் விக்ெகட்டுகளை இழந்தது. 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்ெகட்டுகளையும், கம்மின்ஸ், நரேன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago