வரலாற்றில் முதல் முறை: டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே: 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான பேட்டிங்

By செய்திப்பிரிவு

ஜாங்வேயின் வேகப்பந்துவீச்சு, ரியான் பர்லின் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் ஹராரேவில் நேற்று நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்களில் முதல் முறையாக வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி.

டி20 போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணியை முதல் முறையாக ஜிம்பாப்வே அணி நேற்றுதான் தோற்கடித்துள்ளது. இதற்கு முன் 16 முறை மோதியும் தோல்வி அடைந்திருந்த நிலையில் விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணியிடம் பாகிஸ்தான் உதை வாங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 2016-ம் ஆண்டு இதேபோன்று ஹராரேவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

3.5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் லூக் ஜாங்கி ஆட்டநாயகன் விருது பெற்றார். இவர் வீசிய 4 ஓவர்களில் 12 பந்துகள் டாட் பந்துகளாகும். ஜாங்கி, கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின் ஜிம்பாப்வே அணிக்குத் திரும்பியுள்ளார்.

கண்ணில், தலையில் அடிபட்டதையடுத்து, நீண்ட ஓய்வுக்குப் பின் மீண்டும் வெற்றிகரமாக வந்துள்ளார். இவருக்கு உறுதியாக லெக் ஸ்பின்னராக லூக் ப்ரல் பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக தினசே கமுகுகான்வே 34 ரன்கள் சேர்த்தார்.மருமானி (13), வெஸ்லே (16), சக்பாவ் (18), முசாகண்டா (13) ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஹஸ்னைன், அஜிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ரிஸ்வான், பாபர் ஆஸம் ஆட்டத்தைத் தொடங்கினர். ரிஸ்வான் (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பக்கர் ஜமான் (2), ஹபீஸ் (5) ரன்களில் வெளியேறினர். கேப்டன் பாபர் ஆஸம், அஜிஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ஸ்கோர் 78 ரன்களில் இருந்தபோது, பாபர் ஆஸம் 41 ரன்களில் ஜாங்வி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் பாகிஸ்தானின் சரியத் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். கடைசி 26 பந்துகளில் 21 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணி இழந்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு பாகிஸ்தான் அணி 47 ரன்கள் சேர்க்க வேண்டியது இருந்தது. ஆனால், ஜிம்பாப்வே வீரர்களின் நெருக்கடியான பந்துவீச்சில் 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE