அமித் மிஸ்ராவின் மாயஜால சுழற்பந்துவீச்சால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி ேகபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. 138 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம், டெல்லி கேபிடல்ஸ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
முற்றுப்புள்ளி
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி, அந்த தோல்விக்கு இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுவரிசை பேட்டிங் வரிசையைக் குலைத்து 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள்(12டாட்பந்துகள்) வீழ்த்திய அமித் மிஸ்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
வல்லவனுக்கு வல்லவன்
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு பழமொழி உண்டு, அதே நிரூபித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடந்த 2 முறை சாம்பியன், நம்மை வீழ்த்த யார் இருக்கா, எந்த அணியையும் குறைந்த ஸ்கோரில் டிபென்ட் செய்துவிடலாம் என்ற மிகப்பெரிய கர்வத்துடனே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்துப் போட்டிகளையும் ஒரே மாதிரியாகக் கையாண்டதற்கு கிடைத்த சம்மட்டி அடியாக இந்தத் தோல்வி அடைந்துள்ளது.
அதீதமான நம்பிக்கை
இந்த தோல்வி மும்பை அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையையும் ஆய்வு செய்ய வைக்கும்.
நடப்பு சாம்பியன்ஸாக இருக்கும் மும்பை அணி, 137 ரன்களை சேர்த்துவிட்டு அதை டிபென்ட் செய்து வென்றுவிடுவோம் என்பது அவர்களின் அதீதமான நம்பிக்கையையும், சாம்பியன் எனும் கர்வத்தையே காட்டுகிறது.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் குறைந்த ஸ்கோர் அடித்து டிபென்ட் செய்து இதற்கு முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது மும்பை அணி என்பதை மறுக்கவில்லை. ஆனால், எந்த மாதிரியான அணி, அவர்களின் பேட்டிங் வரிசை என்ன, எந்த மாதிரியான பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து மாறுபடும்.
மற்ற அணிகளைப் போல் டெல்லி கேபிடல்ஸ் அணியையும் சுருட்டிவிடலாம் என்ற மிதப்பில் மும்பை அணி செயல்பட்ட விதம்தான் தோல்வி்க்குக் காரணம்.
பொறுப்பற்ற பேட்டிங்
மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த விதத்தை உற்று கவனித்தால் அதில் ஒருபொறுப்பற்ற தன்மை இருக்கும். குறிப்பாக ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே லாங் ஆன் திசையில் அப்படி ஒரு ஷாட்டை அடிக்க வேண்டிய தேவையில்லை.
ஏனென்றால், மிஸ்ராவின் அதே ஓவரில் 4-வது பந்தில்தான் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த நிலையில் 6-வது பந்தில் ஹர்திக் அடித்தது நிச்சயமாக பொறுப்பற்றதனத்தைவிட என்ன சொல்வது.
எதிரணியின் பந்துவீச்சையும், பலத்தையும் குறைத்து மதிப்பிட்டதற்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த சறுக்கல்தான் இந்த தோல்வி.
அணி வீரர்களை மாற்றாதது ஏன்
குறிப்பிட்ட "கோர் ப்ளேயர்ஸை" சுற்றிேய மும்பை அணி கட்டமைக்கப்பட்டு, களமிறக்கப்பட்டு வருகிறது. மும்பை அணிக்கு கிறிஸ்லின் நல்ல தொடக்கத்தை முதல் போட்டியில் அளித்தார். ஆனால் எந்த காரணமும் இன்றி அவரை அடுத்த 3 போட்டியில் அமரவைத்து, ஃபார்மில் இல்லாத டீகாக்கிற்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார்கள்.
சென்னை ஆடுகளத்தில் பியூஷ் சாவ்லாவுக்கு வாய்ப்பளித்திருக்கலாம், அமித் மிஸ்ரா போன்று சாவ்லாவும் நல்ல அனுபவமான பந்துவீச்சாளர். ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர் நீல் என அணியில் மாற்றங்களை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
மோசமான பேட்டிங்
67 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த மும்பை இந்தியன்ஸ், அடுத்த 17 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் 12 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸ் அணி இழப்பது இதுதான் முதல்முறை. கடைசி 13 ரன்களுக்குள் 3 வி்க்கெட்டுகளையும் இழந்தது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் மும்பை இந்தியன் அணியிடம் இருந்து வெளிப்பட்ட மோசமான பேட்டிங் இதுவாகத்தான் இருக்க முடியும்.
அணி நெருக்கடியான சூழலில் இருக்கும் போது "பார்ட்னர்ஷிப் பில்ட்" செய்வது என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் மும்பை அணியல் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் சேர்த்த 58 ரன்கள்தான் சுமார் பார்ட்னர்ஷிப். மற்ற எந்த வீரர்களும் உருப்படியாக எந்த பார்ட்னர்ஷிப்பும் அமைக்கவில்லை, களத்தில் நின்று பேட் செய்யவும் இல்லை.
இதைக் கூட சேஸிங் செய்யமாட்டார்களா
137 ரன்களை சேர்த்துக் கொண்டு இதை வைத்தும் எங்களால் டிபென்ட் செய்துவிட முடியும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி முரட்டுத்தனமான குருட்டு நம்பிக்கையால்தான் களமிறங்கியது. இந்த ரன்களைக் கூட சேஸிங் செய்யமுடியாத அணிகள் ஐபிஎல் தொடரில் இருந்தால், போட்டி நடத்தாமல் அம்பானி உரிமையாளாராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கோப்பையை வழங்கிவிடலாம்.
மும்பை அணியிடம் டிரன்ட் போல்ட், பும்ரா போன்ற சர்வதேச அளவில் முன்னணி பந்துவீச்சாளர்கள், அனுபவ வீரர்கள் பொலார்ட் போன்றோர் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை, அவர்களால் அனைத்துப் போட்டிகளிலும் மேட்ச்வின்னராக இருக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் போட்டியை அணுகிய விதம், பொறுப்பற்ற பேட்டிங் அதீதமான நம்பிக்கை, சாம்பியன்ஸ் எனும் மமதை போன்றவை மும்மை இந்தியன்ஸ் அணிக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது.
நன்கு திட்டமிடல்
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொருத்தவரை சென்னையில் நடக்கும் ஆட்டம், சேப்பாக்கம் மெதுவான ஆடுகளம் என்பதை அறிந்து திட்டமிட்டு வீரர்களை களமிறக்கியது. அமித் மிஸ்ராவை காத்திருந்து களமிறக்கியதற்கு நல்ல பலனை அணிக்குச் செய்துள்ளார்.
முதல் ஓவரில் 10 ரன்களை மிஸ்ரா அடிக்கவிட்டாலும், அடுத்தஓவரில் ரோஹித் சர்மா, பாண்டியா என பெரிய விக்கெட்டுகளைச் சாய்த்தார், 3-வது ஓவரில் பொலார்ட், 4-வது ஓவரில் இஷாந் கிஷன் என யாரையும் செட்டில் ஆகவிடாமல் வி்க்கெட்டுகளைக் கழற்றினார்.
அதிலும் ரோஹித் சர்மா லெஸ் ஸ்பின்னில் பலவீனம், அதிலும் மிஸ்ரா பந்துவீச்சில் பலவீனம் என்று திட்டமிட்டு பந்துவீசச் செய்தனர். ஐபிஎல் தொடரில் இதுவரை 7 முறை மிஸ்ரா பந்துவீச்சில் ரோஹித் ஆட்டமிழந்துள்ளார். வேறு எந்த பந்துவீச்சாளரிடமும் இதுபோல் அதிகமாக ரோஹித்சர்மா ஆட்டமிழந்தது இல்லை.
பார்ட்னர்ஷிப்
குறைந்த ஸ்கோர் சேஸிங், மந்தமான ஆடுகளம் ஆகியவற்றை உணர்ந்து டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை கையில் எடுக்கவில்லை. கடந்த போட்டிகளில் அதிரடியாக ஆடிய தவண், நேற்று மிகவும் நிதானமாக பார்ட்னர்ஷிப் கட்டமைக்கும் பணியில் இறங்கினார்.
ஏனென்றால், சென்னை ஆடுகளத்தில் கடந்த ஆட்டங்களில் போட்டி 10 ஓவர்களுக்குப்பின்புதான் திரும்புகிறது என்பதால், விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்ற கவனத்துடனே டெல்லி பேட்ஸ்மேன்கள் ஆடினர். ஸ்மித், லலித் யாதவ் இருவருடனும் தவண் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தார்.
பந்துவீச்சிலும் வழக்கமாக சுழற்பந்துவீச்சாளரையோ அல்லது ரபாடா போன்ற வேகப்பந்துவீச்சாளரை தொடங்கச் செய்யாமல் ஸ்டாய்னிஷுக்கு முதல் ஓவர் வழங்கப்பட்டது. அவரும் தனக்குக் கொடுத்த பணியை சிறப்பாகச் செய்து டீ காக் வி்க்கெட்டை கழற்றினார்.
ரோஹித் சர்மா, யாதவ் ஜோடி செட்டில்ஆகி வந்த நிலையில் அவர்களை ஆவேஷ் கான் பிரித்தார். இதுபோன்று மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் யாரையும் செட்டில் ஆகவோ, பார்ட்னர்ஷிப் அமைக்கவோ டெல்லி பந்துவீச்சாளர்கள் அனுமதிக்காததால் சுருட்ட முடிந்தது.
இந்த ஸ்கோரை சேஸிங் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டிருக்ககூடாது என்றாலும், எந்த நேரத்திலும் தவறுக்கு இடம் கொடுக்காமல் பேட்டிங் இருந்ததை பாராட்டியே ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லால் பனிப்பொழிவு டெல்லி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. பனிப்பொழிவு இருந்ததால், 2-வதாக பந்துவீசிய மும்பை அணி சற்றுதிணறினர், சரியாந லென்த் கிடைக்காமல் பந்துவீசினர்.
தவண் பொறுமை
138 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பிரித்வி ஷா, தவண் களமிறங்கினர். பிரித்வி ஷா 7 ரன்னில் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஸ்மித், தவண் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்ல நகர்த்தினர். பவர்ப்ளேயில் டெல்லி அணி ஒரு வி்க்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 33 ரன்கள் சேர்த்த நிலையில் பொலார்ட் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 53 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த லலித் யாதவ், தவணுடன் சேர்ந்தார். இருவரும் ஸ்ட்ரைக்கை நன்கு ரொட்டேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். தவண் வாய்ப்புக் கிடைக்கும் போது, பவுண்டரி, சிக்ஸரை விளாசி ரன்களைச் சேர்த்தார். வி்க்கெட்டுகளை இழக்காமல் இருவரும் பொறுமையாக பேட் செய்தனர்.
தவண் 45 ரன்னில் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வந்த ரிஷப்பந்த் 7 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
ஹெட்மயர்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதிரணியைச் சுருட்டுவதுபோல் இந்த முறையும் நடந்துவிடும் என மும்பை அணி எண்ணியது. பொல்ர்ட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் வைட் ஆப் திசையில் பவுண்டரி விளாசினார் ஹெட்மயர், 2-வது பந்து ஃபுல்டாஸாக வீசவே நடுவர் நோபால் வழங்க ஆட்டம் முடிந்தது.
லலித் யாதவ் 22, ஹெட்மயர் 14 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 19.1 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா ஆறுதல்
மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். டீகாக் (2) ரன்னில் ஸ்டாய்னிஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், ரோஹித் சர்மா ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். சூர்யகுமார் 24 ரன்னில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணி சரிவு தொடங்கியது. மிஸ்ரா பந்துவீச்சில் ரோஹித் சர்மா 44 ரன்னில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அதேஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.
அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இஷான் கிஷன்(26), ஹர்திக் பாண்டியா(0), குர்ணல் பாண்டியா(1), பொலார்ட்(2), ஜெயந்த் யாதவ்(23), சஹர்(6) என வீழ்ந்தனர். பும்ரா 3, போல்ட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது.
டெல்லி தரப்பில் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago