இனிமேல் வெற்றிதான்: ஃபார்முக்கு திரும்பிய சிஎஸ்கே: எந்தப் பக்கம் பார்த்தாலும் ஜடேஜா; ராஜஸ்தானை நிலைகுலையச் செய்த மொயின் அலி

By க.போத்திராஜ்


ஜடேஜா பிடித்த 4 கேட்சுகள், வீழ்த்திய 2 விக்கெட்டுகள், மொயின் அலியின் பந்துவீச்சு ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று நிகர ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் 2 தோல்விகள், ஒரு வெற்றியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி பங்கேற்ற 200வது போட்டி அவருக்கு மறக்கமுடியாத வெற்றியை அளித்துள்ளது.

முதல் வெற்றி

சிஎஸ்கே அணி தனது வரலாற்றிலேயே மும்பை வான்ஹடே மைதானத்தில் முதலில் பேட் செய்து வெற்றி பெற்றதே இல்லை. ஆனால், முதலில் பேட் செய்து வெற்றி பெற்றது இதுதான் முதல்முறையாகும். சிஎஸ்கே அணி சேர்த்த் 174 ரன்களில்(14 ரன்கள் உதிரிகள்) பேட்ஸ்மேன்களன் அதிகபட்ச ஸ்கோர் என்பது 33 ரன்கள்தான் ஆனால், ஸ்கோர் 188 ரன்களுக்கு உயர்ந்தது.

பெரிய ஸ்கோர்

சிஎஸ்கே அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அதிகபட்சமாக 35 ரன்கள் கூட சேர்க்கவில்லை, ஆனால், ஸ்கோர் 188 ரன்கள் வந்துவிட்டது என்பது ராஜஸ்தான் அணிக்கும் சற்று வியப்பாகவே இருந்திருக்கும். அணியில் உள்ள தாக்கூர், ஜடேஜா தவிர்த்து மீதமுள்ள 8 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களில்தான் ஆட்டமிழந்துள்ளனர். இந்த கூட்டுமுயற்சிதான் ஸ்கோர் உயர்வுக்குக் காரணம்.
டி20 வரலாற்றிலேய ஒரு அணியில் பேட்ஸ்மேன்கள் யாரும் 35 ரன்களுக்கு மேல் அடிக்காமல் அதேநேரம் அதிகபட்ச ஸ்கோர் குவித்தது இது 5-வது முறையாகும்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி பெற்ற வெற்றியை பெரிதாகக் கொண்டாட முடியாது. ராஜஸ்தான் அணியில் மில்லர், மோரிஸ் தவிர்த்து பெரிதாக சர்வதேச அனுபவம் கொண்ட பேட்ஸ்மேனும் இல்லை, பந்துவீச்சாளர்களும் இல்லை. சமபலம் இல்லாத அணியுடன் மோதிவிட்டு வெற்றி பெற்றுவிட்டோம் என மார்தட்டுவதை ஏற்க முடியாது. ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளுடன் மோதும்போதுதான் சிஎஸ்கேயின் உண்மையான பலம் தெரியவரும்.

எங்கு பார்த்தாலும் ஜடேஜா

சிஎஸ்கே அணிக்கு ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த வெற்றியாகும். அதிலும் குறிப்பாக ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ரவிந்திர ஜடேஜா, அவர்பிடித்த 4 கேட்சுகள், மொயின் அலியின் விக்கெட்டுகள் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை எளிதாக உறுதி செய்தது.

ஸ்ட்ரைட் திசை, டீப் மிட்வி்க்டெ் திசை, ஸ்வீப்பர் கவர் என எந்தப் பக்கம் பார்த்தாலும் நேற்று ஜடேஜாதான். ஜடேஜா மட்டும் இந்த ஆட்டத்தி்ல 4 கேட்சுகளை பிடித்துள்ளார், 2 வி்க்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதிலும் ஜடேஜா வீழ்த்திய 2 விககெட்டுகளுமே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியவை.
நன்றாக செட்டில் ஆகியிருந்த ஜாஸ் பட்லரை போல்டாக்கியது, துபேயை கால்காப்பில் வாங்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தது என திருப்புமுனை விக்கெட்டுகள்தான். இவர்கள் இருவரும் சென்றபின் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை சிதைந்தது.

அதிலும் பட்லருக்கு வீசிய ஜடேஜாவி்ன் பந்துவீச்சு அழகானது. மிடில் ஸ்டெம்ப்பில் பந்து பிட்ச் ஆகி, அதிகமாகச் சுழலாலமல் லேசாக சுழன்று பட்லரை ஏமாற்றி ஆஃப் ஸ்டெம்பை பதம் பார்த்தது அருமை.

ஆட்டநாயன் மொயின் அலி

மற்றொரு வீரர் மொயின் அலி. பேட்டிங்கில் 20 பந்துகளி்ல் 26 ரன்கள், பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அதாவது மொயின் கடைசியாக வீசிய 9 பந்துகளில் இந்த 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே வரலாற்றிலேயே எந்த சுழற்பந்துவீச்சாளரும் இதுபோன்று 3 விக்கெட்டுகளை இதுபோன்று விரைவாக வீழ்த்தியது இல்லை.

தோனியின் ஃபிட்னஸ், ரன் வேகம்

தோனியின் கேப்டன்ஷிப்பை பாராட்டியே ஆக வேண்டும். ஜாஸ் பட்லர் லெக் ஸ்பின்னில் பலவீனமானவர் என்பதைத் தெரிந்து கொண்டு ஜடேஜாவை பந்துவீசச் செய்தார், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கிறது எனத் தெரிந்தவுடன் மொயின் அலிக்கும் ஓவர் வழங்கியது விக்கெட்டுகள் சரியக் காரணமாக அமைந்தார். ஓர் ஆண்டு இடைவெளியில் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி பேட் செய்த தோனி 18 ரன்கள் அடித்தார். இதில் விக்கெட்டுக்கு இடையே தோனி ரன் எடுக்க ஓடிய வேகம் இன்றுள்ள இளம் வீரர்களின் ஃபிட்னஸை கேள்வி கேட்க வைக்கும் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் ரன் அவுட் செய்யப் போகிறார்கள் எனத் தெரிந்தவுடன் தரையில் பாய்ந்தது பிரமிப்பு

ரன்அவுட்டைத் தவிர்க்க தோனி சிறுத்தைப் போல் பாய்ந்து க்ரீஸைத் தொட்டது ரசிகர்களால் பாராட்டப்பட்டாலும், இதே அளவு முயற்சியை, பிரயத்தனத்தை 2019 உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தோனி ஓடி ரன்அவுட்டை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தோனி நீலநிற ஆடையில் ஆடுவதைவிட, மஞ்சள் ஆடையில் விளையாடும்போதுதான் சிறப்பாகச் செயல்படுகிறார்.


ஒட்டுமொதத்ததில் பழைய சிஎஸ்கேவாக திரும்பிவிட்டது, இனிமேல் வரும் போட்டிகள் அனைத்தும் வெற்றியாகவே அமையும் என நம்பலாம்.

பேட்டிங் சீர்குலைவு

ராஜஸ்தான் அணியைப் பொருத்தவரை ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களின் தோல்வி. கேப்டன் சஞ்சு சாம்ஸன் தான் நிலைத்தன்மையில்லாத பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார். இந்த நிலையற்ற தன்மையால்தான் இந்திய அணியில் இடத்தை இழந்தார், இப்போது கேப்டன்ஷிப் வாய்ப்புக் கிடைத்தும் அதிலும் அதே கதையை சாம்ஸன் தொடர்கிறார்.

கேப்டனாக இருப்பவர் அணியை பொறுப்பாக இருந்து வழிநடத்த வேண்டும், ஷாட்களை தேர்வு செய்து நிதானமாக ஆட வேண்டும். ஆனால் டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும், இந்த ஆட்டத்திலும் பொறுப்பற்ற முறையில் வி்க்கெட்டை தாரைவார்ப்பதை என்ன வென்று சொல்வது.

முக்கியமேட்ச் வின்னர்களாக இருக்கும் மோரிஸ், ரியான் பராக், மில்லர் என அனைவருமே நேற்று சொதப்பியது தோல்வியை உறுதி செய்தது. 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. திவேட்டியா, உனத்கட் மட்டுமே தோல்விதான் வரப்போகிறது எனத் தெரிந்தும் கடைசிவரை போராடினார்கள்.

பந்துவீச்சில் ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டபோதிலும் பேட்டிங்கில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்துவிட்டது.

பட்லர் மட்டுமே ஆறுதல்

189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பட்லர், மனன்வோரா ஆட்டத்தைத் தொடங்கினர். வோரா 11 ரன்னில் சாம்கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அதைத் தொடர்ந்து வந்த கேப்டன் சாம்ஸன் ஒரு ரன்னில் கரன் பந்துவீச்சில் வெளியேறினார். பட்லர், துபே ஓரளவுக்கு நிலைத்து ஆடினர்.

பட்லர் தனக்கே உரிய ஸ்டைலில் பவுண்டரிகளையும் , சிக்ஸர்களையும் விளாசி சிஎஸ்கே அணிக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தினார், ரன்ரேட்டும் ஓரளவுக்கு உயர்ந்தது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.

12வது ஓவரை ஜடேஜா வீச வந்தார். இந்த ஓவரிலிருந்து ஆட்டத்தின் திருப்புமுனை தொடங்கியது. ஜடேஜா வீசிய முதல்பந்திலேயே க்ளீன் போல்டாகி பட்லர் 49 ரன்னில்(35பந்து, 5பவுண்டரி,2சிக்ஸர்)ஆட்டமிழந்தார். அதைத் தொடரந்து அதே ஓவரில் கால்காப்பில் வாங்கி ஷிவம் துபே 17ரன்னில் வெளியேறினார்.

விக்கெட் வீழ்ச்சி

அடுத்து பந்தவீசிய மொயின் அலி ஓவரில் கால்காப்பில் வாங்கி டேவிட் மில்லர் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். மொயின்அலி வீசிய 15-வது ஓவரில் ரியான் பராக் 3 ரன்னிலும், கடந்த போட்டியின் மேட்ச் வின்னர் மோரிஸ் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

திவேட்டியா, உனத்கத் ஓரளவுக்கு களத்தில் இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். திவேட்டியா 2 சிக்ஸர்கள் உள்ளட்ட 20 ரன்கள் சேர்த்து பிராவோ பந்துவீச்சில் வெளியேறினார். உனத்கட் 24 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.

சிஎஸ்கே தரப்பில் மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டூப்பிளசிஸ் அதிரடி

முன்னதாக சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்தது. கெய்க்வாட், டூபிளசிஸ் களமிறங்கினர். டூப்பிளசிஸ் தொடக்கத்திலிருந்தே சூறாவளியாக பேட்டை சுழற்றி சிக்ஸருக்கும்,பவுண்டரிகளுக்கும் விரட்டினார். கெய்க்வாட் 10 ரன்னில் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அதிரடியாக ஆடிய டூப்பிளசிஸ் 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

குழுவாக பங்களிப்பு

அடுத்து வந்த மொயின்அலி(26), ரெய்னா(18) ராயுடு(27), ஜடேஜா(8), தோனி(18) சாம்கரன்(13), பிராவோ(20) என ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். சிஎஸ்கே அணியும் நேற்று ேபட்டிங்கில் சற்று சறுக்கியது 123 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 57 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சே்ரத்தது. ராஜஸ்தான் தரப்பில் சக்காரியா 3 விக்கெட்டுகளையும், மோரிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

விளையாட்டு

32 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்