'சோக்கர்ஸ்' சன்ரைசர்ஸ்: நிரூபித்தது மும்பை: போல்ட், சஹர், பும்ரா மிரட்டல்; மீண்டும் வெற்றியைக் தாரைவார்த்தது வார்னர் படை

By க.போத்திராஜ்


பும்ரா, டிரன்ட் போல்ட், ராகுல் சஹர் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

சோக்கர்ஸ்

இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்தி்த்துள்ளது. குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்ய முயன்று, கடைசி நேர அழுத்தத்தை தாங்க முடியாமல் ஆட்டமிழந்து மீண்டும் சோக்கர்ஸ் என்பதை நிரூபித்துள்ளது. அழுத்ததை ,நெருக்கடியான சூழலை தாங்க முடியாதவர்கள் சோக்கர்ஸ்.

ஆனால், இதற்கு முன் கடந்த இரு போட்டிகளிலும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி இரு முறை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்து குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிராக 149 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் 6 ரன்களில் தோற்றது, கொல்கத்தா அணிக்கு எதிராக 187 ரன்களை சேஸிங் செய்து 10 ரன்களில் தோற்றது. இந்த முறையும் 150 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் பேட்டிங்கில் தோல்வி அடைந்துள்ளது.

முதல்முறை

இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஒரு அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்து, ஒரு ஸ்கோரை டிஃபென்ட் செய்து எதிரணியைச் சுருட்டி வெற்றி அடைந்திருக்கிறது என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும்தான்.

ஏன் இவ்வளவு மோசம்

சென்னை ஆடுகளம் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது எனத் தெரியவில்லை. தொடர்ந்து குறைந்த ஸ்கோரை அடிக்கும் ஆடுகளமாகவும் ரசிகர்களுக்கு ரன் விருந்தளிக்கும் ஆடுகளமாக இல்லாமல் இருக்கிறது. மாற்றி அமைக்கப்பட்ட சென்னை ஆடுகளத்தின் தரம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூட அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த லட்சணத்தில் இந்த ஆடுகளத்தில் உலகக் கோப்பை போட்டி நடத்தப் போகிறார்கள். ஐபிஎல் போட்டி என்றால் ரசிகர்களுக்கு ரன் விருந்தளிக்கும் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும், ஆனால், இதுபோன்று மந்தமான ஆட்டத்தை தரும் மைதானமாக இருக்கக்கூடாது.

ஆட்டநாயகன்

இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு டிரன்ட்போல்ட், பும்ரா, சஹர், பொலார்ட் என ஒவ்வொருவரும் குறி்ப்பிட்ட பங்களிப்பை செய்துள்ளனர். ஆனால் பேட்டிங்கில் 35 ரன்களையும், பந்துவீச்சில் இரு முக்கியமான ஓவர்களையும் வீசிய கெய்ரன் பொலார்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

கெய்ரன் பொலார்ட் கடைசியில் அடித்த 3 5ரன்கள்தான் மும்பை அணியின் ஸ்கோர் 150 ரன்களை எட்டுவதற்கு முக்கியக் காரணம். 19வது ஓவரில் விஜய் சங்கர் கேட்ச் பிடித்தருந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி 135 ரன்களுக்குள் சுருண்டிருக்கலாம். ஆனால், வாய்ப்பைப் பயன்படுத்திய பொலார்ட் போராடும் ஸ்கோருக்கு அணியை உயர்த்தினார்.

அதேபோல, பொலார்ட் வீசிய 10 மற்றும் 12 ஓவர்களில் ரன் ஏதும் எடுக்கமுடியாமல் சன்ரைசர்ஸ் அணி திணறியதால், அந்த அணிக்கான அழுத்தம் அதிகரித்து வார்னர் விக்கெட்டை ரன்அவுட்டில் இழக்க நேர்ந்தது. அணியில் திருப்புமுனையை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பொலார்ட் உருவாக்கினார்.

பவுண்டரி இல்லாத பும்ரா

பும்ராவின் அபாரமான பந்துவீச்சு இந்த ஐபிஎல் தொடரிலும் தொடர்கிறது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4-வது முறையாக ஒரு பவுண்டரிகூட எதிரணியை அடிக்கவிடாமல் பும்ரா பந்துவீசியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய பும்ரா 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இதில் 12 டாட்பந்துகள் அடங்கும்.

சன்ரைசர்ஸ் அணியின் முதுகெலும்பை உடைத்தவர் ராகுல் சஹர். கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பேட்டிங்கை குலைத்த சஹர், இந்தப் போட்டியிலும் சன்ரைசர்ஸ் நடுவரிசையை உடைத்தார். தொடக்கத்தில் ரன்களை வழங்கினாலும், கடைசி நேரத்தில் போல்ட் தனது சர்வதேச தரத்திலான பந்துவீச்சை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

எந்த ஸ்கோரையும் டிபென்ட் செய்வோம், சேஸிங்கும் செய்வோம், குறிப்பாக வெற்றி பெறுவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும், அதனால்தான் சாம்பியன்களாக இருக்கிறோம் என மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் நிரூபிக்கிறது.

பேட்ஸ்மேன்கள் தோல்வி

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை தொடர்ந்து 3-வது தோல்வியைச் சந்திக்கிறது. சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் இருவரைத் தவிர கடந்த 3 போட்டிகளாக எந்த வீரரும் சரியாக விளையாடவில்லை, இருவரை மட்டுமே அணி நம்பியுள்ளது என்பது தெரிகிறது.

வார்னர், பேர்ஸ்டோ இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை எந்தவீரரும் கடைசிவரை பயன்படுத்தவி்ல்லை. இனிவரும் போட்டிகளில் வெற்றிக்காக வார்னர், பேர்ஸ்டோ இருவரில் ஒருவரில் கடைசி வரை களமாட வேண்டும், அல்லது, இருவர் மட்டுமே நின்று வென்று கொடுக்க வேண்டிய நிலையில்தான் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.

அதிலும் நடுவரிசையில் சர்வதேச அனுபவமற்ற பேட்ஸ்மேன்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் அணியில் இருப்பது எதிரணியின் வேலைப்பழுவைக் குறைக்கிறது.

கேதார் ஜாதவ்

ஜேஸன் ஹோல்டர், வில்லியம்ஸன், கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை ஏன் சன்ரைசர்ஸ் அணி பயன்படுத்தவில்லை எனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிலும் கடைசி 8 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது ஒட்டுமொத்த பேட்டிங் தோல்வி.

நடுவரிசையை வலுப்படுத்த வில்லியம்ஸன் அழைக்கப்பட வேண்டும், கேதார் ஜாதவ் சர்வதேச அனுபவம் கொண்டவர் என்பதால் அவரை களமிறக்கி பரிசோதிக்க வேண்டும். கடந்த ஐபிஎல் தொடர்தான் ஜாதவுக்கு மோசமாக அமைந்தது, மற்றவகையில் இந்திய அணியிலும், சிஎஸ்கே அணியிலும் ஓரளவுக்கு சிறப்பாகவே விளையாடியவர்.

புவனேஷ்வருக்கு என்ன ஆச்சு

புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு தொடர்ந்து 3-வது போட்டியிலும் மோசமாக இருந்து வருகிறது. கடந்த 2 போட்டிகளிலும் சொதப்பிய புவனேஷ்வர் இந்த போட்டியிலும் ரன்களை வழங்கினார்.
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கில் பேர்ஸ்டோ, வார்னர், விஜயச் சங்கர் ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக விளையாடவில்லை. 5-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி மட்டுமே சன்ரைசர்ஸ் அணி அடித்திருந்தது.

இதுபோன்ற குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்யும்போது, பவுண்டரி, சிக்ஸர் அவ்வப்போது அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், நடுவரிசை பேட்ஸ்மேன்களால் ரன்களை அடிக்கவே முடியவில்லை.

ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு பேட்ஸ்மேன்களால் ஏற்பட்ட 3-வது தோல்வி.

அருமையான தொடக்கம்

151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பேர்ஸ்டோ, வார்னர் இருவரும் களமிறங்கி, தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடினர். போல்ட், மில்னே பந்துவீச்சை பேர்ஸ்டோ குறிவைத்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் சேர்த்தது.

8-வது ஓவரில் பேர்ஸ்டோ 43 ரன்களில் குர்னல் பாண்டியா ஓவரில் அவுட் ஆகினார். அதுதான் திருப்புமுனையாகும். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர். இதுதான் சிறந்த பார்டனர்ஷிப் அதன்பின் எந்த பார்ட்னர்ஷிப்பும் அமையவில்லை.

அதைத் தொடர்ந்து வந்த மணிஷ் பாண்டே 2 ரன்னில் சஹர் பந்துவீச்சில் வெளியேறினார். வார்னர் 36 ரன்னில் ஹர்திக் பாண்டியாவில் ரன்அவுட் ஆகினார்.

விக்கெட் சரிவு

இந்த மூவரும் சென்றபின் சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. விஜய் சங்கர் மட்டும் ஒற்றை வீரராக போராடி 28 ரன்கள் சேர்த்தார். இவருக்கு ஒத்துழைக்க ஒருவர் கூட இல்லை.

அபிஷேக் சர்மா(2), அப்துல் சமத்(7),ரஷி்த் கான்(0), புவனேஷ்வர் (1), கலீல் அகமது(1) என வரிசையாக வீழ்ந்தனர். 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 47 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிலும் கடைசி 8 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணி ஆட்டமிழந்தது. மும்பை அணித் தரப்பில் ராகுல் சஹர், போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிரடி ஆட்டம்

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. டீகாக், ரோஹித் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அளித்து, பவர்ப்ளேயில் விக்கெட் ஏதும் இழக்காமல் 53 ரன்கள் சேர்த்தனர். விஜய் சங்கர் பந்தவீச்சில் ரோஹித் சர்மா 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ஆபத்தான பேட்ஸ்மேன் சூர்யகுமார்(10)இந்த முறையும் விரைவாக விக்கெட்டை இழந்தார். நிதானமாக ஆடிய டி காக் 40 ரன்னில் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த இஷான் கிஷன் 12 ரன்னில் ரஹ்மானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பொலார்ட் சிறப்பு

ஹர்திப் பாண்டியா 7 ரன்னில் வெளியேறினார். ஆனால் அனுபவ வீரர் பொலார்ட் கடைசி நேரத்தில் அதிரடியாக சில சிக்ஸர்களை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். பொலார்ட் 35 ரன்னிலும், குர்னல் பாண்டியா 3 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணித் தரப்பில் விஜய் சங்கர், ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்