ரூ.16 கோடி ‘வொர்த்துதான்’: ஹீரோ மோரிஸ் அருமையான ஃபினிஷிங்: ராஜஸ்தானுக்கு த்ரில் வெற்றி: அஸ்வினை பயன்படுத்தாமல் தவறு செய்த ரிஷப்பந்த்

By க.போத்திராஜ்


இந்த ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்துவது போன்றே ஒவ்வொரு ஆட்டமும் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆட்டமும், கடைசி ஓவர்வரை இழுத்துச்சென்று எதிர்பாராத முடிவை அளித்து, ரத்தக்கொதிப்பை எகிறவைக்கும் ஆட்டமாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டமும் அமைந்தது.

கிறிஸ் மோரிஸின் கடைசி நேர ஃபினிஷிங், டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டம், உனத்கத் பந்துவீச்சு ஆகியவற்றால், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. 148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் வெற்றி

இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் விரைவாகவே தனது கணக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடங்கி 5-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற சஞ்சு சாம்ஸனுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும்விதத்தில் இந்த வெற்றி அமைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 222 ரன்களை சேஸிங் செய்தபோதுகூட ராஜஸ்தான் அணி இந்த அளவு சிரமப்படவி்ல்லை, ஆனால், 148 ரன்களை சேஸிங் செய்ய பலபோராட்டங்களை நடத்திவிட்டது.

வெற்றிக்கான மும்மூர்த்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு 3 வீரர்கள்தான் பிரதான காரணம். ஜெயதேவ் உனத்கத், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தவர்கள்.

உனத்கத் ஆட்டநாயகன்

டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை குலைத்த உனத்கத் தொடக்கத்திலேயே பிரித்வி ஷா, ஷிகர் தவண், ரஹானே ஆகியோரின் விக்கெட்டை பவர்ப்பளே ஓவர்களுக்குள் வீழ்த்தி பெரிய அதிர்ச்சி அளித்தார். இந்த அதிர்ச்சியிலிருந்து டெல்லி கடைசி வரை மீளவே இல்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் அற்புதமாகப் பந்துவீசிய உனத்கத் தனது பந்துவீச்சில் ஸ்லோபால், ஸ்விங், கட்டர்கள் என பலவிதங்களை வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய உனத்கத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் சேஸிங்கில் கடைசி நேரத்தில் வோக்ஸ் பந்துவீச்சில் அடித்த ஒரு சிக்ஸர், மோரிஸுக்கு ஈடுகொடுத்து பேட் செய்தது என உனத்கத் அர்ப்பணிப்பான பணியைச் செய்தார்.

தெ.ஆப்பிரிக்க ஹீரோக்கள்


தென் ஆப்பிரிக்காவில் பிறந்தாலும், 10 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் ராஜஸ்தான் அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்கள் டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ்.
பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் வாய்ப்புப் பெற்ற டேவிட் மில்லர் தன்னை வெளிப்படுத்திவிட்டார். பல ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், பெரும்பாலும் கவனிக்கப்படாத வீரராகவே மில்லர் இருந்துவந்தார். ஆனால், நேற்றைய ஆட்டம் மில்லரைத் திரும்பிப் பார்க்கவைத்தது மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியில் நிலையான இடத்தை வழங்கியுள்ளது.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் அதிரடியாக ஆடி ஸ்கோரை நகர்த்தினார் மில்லர், 43 பந்துகளில் 2 சிக்ஸர், 7பவுண்டரி உள்பட 63 ரன்கள் சேர்த்து மில்லர் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியிலேயே மில்லர் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோர், மில்லரின் ஆட்டம் ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைய முக்கியக் காரணம்.

ரூ.16 கோடி வொர்த்துதான்

ஆட்டத்தின் கதாநாயகன் கிறிஸ் மோரிஸ்தான். டேவிட் மில்லர் ஆட்டமிழந்தபோது 104 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தோல்வியின்பிடியில் இருந்தது. ராஜஸ்தான் அணி வெற்றிபெறுவது கடினம்தான் என்று எண்ணப்பட்டது.

ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிராக 222 ரன்களை சேஸிங் செய்ய முயன்ற ஆட்டத்தில் கடைசிப்பந்தில் சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பை மோரிஸுகக்கு தரமறுத்து சாம்ஸன் ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார். ஆனால், தான்ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை சாம்ஸனுக்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் உணர்த்திவிட்டார் மோரிஸ்.

ஐபிஎல் ஏலத்தில்அதிகபட்சமாக ரூ.16.50 கோடிக்கு வாங்கப்பட்ட மோரிஸுக்கு இந்த அளவு தொகை தேவையா என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஆனால், ரூ.16 கோடிக்கு நான் “வொர்த்தான வீரர்தான்” என்பதை மோரிஸ் நேற்றைய ஆட்டத்தில் நிரூபித்துவிட்டார்.

ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் வெற்றிக்கு தேவை.ரபாடா வீசிய 19-வது ஓவரில் அதிரடியாக, 2 சி்க்ஸர்கள் உள்ளிட்ட 15 ரன்களை மோரிஸ் விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வாரிவழங்கும் வள்ளல் டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை வெற்றியோடு முடித்தார் மோரிஸ். அதிரடியாக ஆடியமோரிஸ் 4 சிக்ஸர்களுடன் 18 பந்துகளில் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 4.4 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 60 ரன்களை சேர்த்தது.

பந்துவீச்சு, பீல்டிங் அருமை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டனர். எந்தவித கேட்சையும் நேற்று கோட்டைவிடாமல் அற்புதமாக செயல்பட்டனர். பந்துவீச்சிலும் லைன்லென்த் மாற்றாமல், ஸ்லோபால், கட்டர்கள் என பலவிதங்களை வெளிப்படுத்தி டெல்லி பேட்ஸ்மேன்களை திணறவிட்டனர். மோரிஸ், முஸ்தபிஸூர் ரஹ்மான், உனத் கத், சக்காரியா என அனைவருமே சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால் பேட்டிங்கில்தான் சொதப்பிவிட்டனர். ராஜஸ்தான் வீரர்கள் கையாண்ட அதே நுட்பத்தை டெல்லி பந்துவீச்சாளர்களும் கையாண்டு அதிகமான ஸ்லோபால் வீசி விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

ஆடுகளம் சிறப்பு
மும்பை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காமல் மாற்றப்பட்டது என்பது தவறு. இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் ஷாட்களை கவனித்து ஆடவில்லை. ஆடுகளம் பேட்டிங்கிற்கு அருமையாகவே இருந்தது, ஆனால், பேட்டிங்கில் இரு அணியினருமே கோட்டைவிட்டதுதான் உண்மை.

மற்றவகையில் ராஜஸ்தான் அணியின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.

ஹெட்மெயர் தேவை

டெல்லி அணியைப் பொருத்து அதீதமான நம்பி்க்கைதான், கடைசி நேரத்தில் ரிஷப்பந்த் எடு்த்த தவறான முடிவு தோல்விக்கு காரணம். கூடுதல் பந்துவீ்ச்சாளருடன் வரப்போகிறோம் என்று ஹெட்மயரை அமரவைத்து, டாம் கரனுக்கு வாய்ப்புக் கொடுத்தது தவறாகும். நடுவரிசையில் அதிரடியாக ஆடக்கூடியவர் ஹெட்மயர். அவரை அமரவைத்தது மாபெரும் தவறு.

வலிமையான பேட்டிங் வரிசை இருக்கிறது, அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறோம் என்ற மெத்தனத்தில் பேட் செய்ததுபோல் தெரிகிறது. ஷிகர் தவண் 4-வது ஓவரிலேயே அப்படியொரு ஷாட்டை அடிக்கத் தேவையில்லை. ரஹானே, பிரித்வி ஷா, ஸ்டாய்னிஷ் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
18-வது ஓவரில் உனத்கத்துக்கு ரன்அவுட் வாய்ப்பை ரிஷப்பந்த் தவறவிட்டார். பந்தை தவறவிட்டு ஸ்டெம்பில் அடித்தபோதே, ரிஷப்பந்துக்கு வெற்றி வாய்ப்பு நழுவியது. உனத்கத் ஆட்டமிழந்திருந்தால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கும்.

அஸ்வினை பயன்படுத்தாதது தவறு

கடைசி ஓவரை ரபாடாவுக்கு வழங்கி, 19-வது ஓவரை அஸ்வினுக்கு வழங்கியிருக்கலாம். இந்த ஆட்டத்தில் அஸ்வின் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து அருமையாகப் பந்துவீசியிருந்தார். ஆனால், டாம் கரனுக்கு வாய்ப்பை வழங்கியது ரிஷப்பந்த் கேப்டன்ஷிப்பில் செய்த மிகப்பெரிய தவறு, அவரின் அனுபவமின்மையை காட்டிவிட்டது. அஸ்வின் 19-வது ஓவரை வீசியிருந்தால் ஆட்டம் திசை மாறியிருக்கும். 20 வது ஓவரை ரபாடா வீசியிருந்தால் வெற்றி டெல்லியின் பக்கம் வந்திருக்கும்.

மொத்தத்தில் சில தவறான கேப்டன்ஷி முடிவுகள், அதீதமான நம்பி்க்கை தோல்வியைக் கொடுத்தது.

விக்கெட் சரிவு
148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ரபாடா, வோக்ஸ், ஆவேஷ் கான் ஆகியோரின் வேகப்பந்துவீச்சுத் தாக்குதலுக்கு ராஜஸ்தான் அணி நிலைகுலைந்தது. பட்லர்(2) மனன்வோரா(9) இருவரும் வோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். சாம்ஸன்(4) ரன்னில் ரபாடா பந்துவீச்சில் வெளிேயறினார். துபே(2), பராக்(2) இருவரும் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 9.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் என இக்கட்டான நிலையில் இருந்தது.

மில்லர் அதிரடி

திவேட்டியா, மில்லர் ஜோடி அணியை மீட்டது. திவேட்டியா ஒத்துழைப்பு அளிக்க மில்லர் அதிரடியாக பேட் செய்து, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். 40 பந்துகளி்ல அரைசதம் அடித்தார். திவேட்டியா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் மில்லர் 62 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

நம்பிக்கை மோரிஸ்

அவ்வளவுதான் ராஜஸ்தான் அணியின் ஆட்டம் முடிந்தது என்று எண்ணப்பட்டது. ஆனால், உனத்கத், மோரிஸ் ஜோடி நாங்க இருக்கோம் என்ற ரீதியில் ஆட்டத்தை நகர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா வீசிய 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள், டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் என மோரிஸ் பொளந்துகட்டி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் 36 ரன்னிலும், உனத்கத் 11 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி தரப்பில் ரபாடா, வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ்கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உனத்கத் வேகம்

முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. உனத்கத் வேகத்தில் டெல்லி அணியின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்தது. பவர்ப்ளே முடிவதற்கு தவண்(9), பிரித்வி ஷா(2), ரஹானே(8) என வரிசையாக உனத்கத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். ஸ்டாய்னிஸ் டக்அவுட்டில் முஸ்தபிசுர் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய ரிஷப்பந்த் கேப்டனுக்குரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். 51 ரன்கள் சேர்த்த ரிஷப்பந்த், தேவையில்லாமல் 2-வது ரன் ஓடி ரியான் பராக்கால் ரன்அவுட் செய்யப்பட்டார். கடைசி வரிசையில் லலித் யாதவ்(20) டாம் கரன்(21), அஸ்வின்(7) ரன்கள் சேர்த்தனர். வோக்ஸ், 15ரன்களுடனும், ரபாடா 9ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்