அவுட் ஆனபின் விராட் கோலியின் ஒழுங்கீனச் செயல்: ஐபிஎல் எச்சரிக்கை

By பிடிஐ

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்து சென்றபின் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதையடுத்து, அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 33 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆடுகளமும் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை, ஷாட்களை அடிக்கவும் முடியாத நிலையில் விரக்தியுடன் கோலி வெளியேறினார். அப்போது பெவிலியனில் வீரர்கள் அமர்வதற்காக நாற்காலி போடப்பட்டு இருந்தது. ஓய்வு அறைக்குச் செல்லும் முன்பாக, அந்த நாற்காலியை தனது பேட்டால் குத்தி, தள்ளிவிட்டு கோலி உள்ளே சென்றார். இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவிலும், நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டன.

நாற்காலியை பேட்டால் தள்ளிவிட்டு கோலி சென்ற காட்சி.

இதையடுத்து, ஐபிஎல் நிர்வாகம் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியைக் கண்டித்துள்ளது. முதல் முறையாக ஐபிஎல் விதிகளை மீறியதையடுத்து, அவருக்கு கண்டிப்பும், எச்சரிக்கையும் ஐபிஎல் நிர்வாகம் விடுத்துள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ஐபிஎல் ஒழுங்கு விதிகளில் 2.2 பிரிவு குற்றத்தைச் செய்துள்ளதை விராட் கோலி ஒப்புக்கொண்டார். இதன்படி, போட்டியின்போது மைதானத்தில் உள்ள பொருட்கள், ஐபிஎல் நிர்வாகத்துக்கு உட்பட்ட பொருட்கள், ஆடைகளை வீரர் ஒருவர் சேதம் விளைவிக்கக் கூடாது. அதைத் தவறாகவும் கையாளக் கூடாது. இதை கோலி செய்துள்ளார். கோலிக்கான தண்டனை குறித்துப் போட்டி நடுவர் முடிவு செய்வார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

போட்டி நடுவர் வெங்காலி நாராயண் குட்டி, விராட் கோலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், 2016-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த கவுதம் கம்பீர், இதுபோன்று முரட்டுத்தனமாகச் செயல்பட்டதற்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டித் தொகையில் 15 சதவீதம் அபராதமாக விதித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE