சபாஷ் ஷான்பாஸ் அகமது: ஆர்சிபி அற்புதமான வெற்றி; தோல்வியைத் தானே தேடிக்கொண்ட சன்ரைசர்ஸ்: 5 ஆண்டுகளுக்குப்பின் மேக்ஸ்வெல் அரைசதம் 

By க.போத்திராஜ்


ஷான்பாஸ் அகமதுவின் அற்புதமான பந்துவீச்சு, மேக்ஸ்வெலின் அரைசதம் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களுக்கு சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் அடைந்துவிடும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.

4-வது முறை

கோலி தலைமயிலான ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடர்ந்து பெறும் 2-வது வெற்றி, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. 4-வது முறையாக ஐபிஎல் தொடரில் குறைந்த ஸ்கோரை எடுத்து அதை டிஃபென்ட் செய்து ஆர்சிபி அணி வெல்கிறது.

இதற்கு முன் கடைசியாக சென்னையில் 2008-ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக 8விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்து அதற்குள் சிஎஸ்கே அணியை சுருட்டியது ஆர்சிபி. அதன்பின் 2009-ல் கேப்டவுனில் 133 ரன்கள் சேர்த்து அதற்குள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுருட்டியது. 2009ல் டர்பனில் நடந்த போட்டியில் 145 ரன்கள் சேர்த்து அந்த ஸ்கோருக்குள் கிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ஆர்சிபி என்பது குறிப்பிடத்தக்கது.

கார்பன் காப்பி மேட்ச்

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எவ்வாறு மும்பை இந்தியன்ஸ் அணி சுருட்டியதோ அதேபோன்றுதான் சன்ரைசர்ஸ் அணியையும் ஆர்சிபி அணி சுருட்டியது.
கொல்கத்தா அணியையும் வீழ்த்த கடைசி 4 ஓவர்கள் மும்பை அணி்க்கு முக்கியமானதாக இருந்தது. அதேபோலத்தான் இந்த ஆட்டத்திலும் சன்ரைசர்ஸைச் சாய்க்க கடைசி 4 ஓவர்கள் திருப்புமுனையாக அமைந்தது.

கொல்கத்தா, மும்பை ஆட்டத்தைப் பார்த்தபின்பும் சன்ரைசர்்ஸ் அணி விக்ெகட்டுகளை இழந்தது, என்பது தானே தலையில் மண்ணைவாரிக் போட்டுக்கொண்டதுபோலத்தான்.

ஆர்சிபி அணி அடித்த 149 ரன்கள் என்பது நிச்சயமாக டிஃபென்ட் செய்யக்கூடிய ஸ்கோர் கிடையாது. அதிலும் இன்றுள்ள டி20 பேட்ஸ்மேன்கள் இந்த ஸ்கோரை 15 ஓவர்களில் கூட அடித்துவிடுவார்கள். ஆனால், அந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு கோலிபடை டிஃபென்ட் செய்து ஆடி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது.

5ஆண்டுகளுக்குப்பின் அரைசதம்

ஆர்சிபி அணிக்கு இந்த அளவு ஸ்கோர் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் கிளென் மேக்ஸ்வெல்தான். 41 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்த(3சிக்ஸர்,5பவுண்டரி) மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக ஆடிய மேக்ஸ்வெல் கடந்த 2016ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்்ஸ் அணிக்காக அரைசதம் அடித்திருந்தார், அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் நேற்று ஆர்சிபி அணிக்காக அரைசதம் அடித்துள்ளார்.

ரூ.15 கோடி கொடுத்திருக்காங்க…. அரைசதம்கூட அடிக்கவில்லையென்றால்.. மேக்ஸ்வெலுக்கு கேள்வி வராதா….

ஷான்பாஸ்.. சபாஷ்

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு வெற்றிகரமான இளைஞர் புதிதாக முளைத்து, தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணம் ஷான்பாஸ் அகமது. பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி 14 ரன்களைச் சேர்த்த ஷான்பாஸ், பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

மும்பை அணிக்கு எதிராக கலக்கலாகப் பந்துவீசிய ஹர்ஸல் படேல் இந்தப் போட்டியிலும் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் வேற லெவலில் நேற்று பந்துவீசி, 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஒட்டுமொத்தத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி சாத்தியமில்லாத வெற்றியை சாதித்துக் காட்டியது.

கோட்டைவிட்ட சன்ரைசர்ஸ்

ஒரு கட்டத்தில் 115 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணிவலுவாக இருந்தது. ரன்ரேட் மற்றும் புள்ளிவிவரத்தின்படி 85 சதவீதம் வெற்றி வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணிக்கு இருந்தது. கடைசி 24 பந்துகளில் 35 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை படுமோசமாக இழந்து சன்ரைசர்ஸ் தோல்வி அடைந்தது.

அதிலும் ஷான்பாஸ் அகமது வீசிய 17-வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 17-வது ஓவரில் மட்டும் பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, அப்துல் சமத் ஆகிய 3 பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்தனர். அதுமட்டுமல்லாமல் தமிழக வீரர் விஜய் சங்கர், ஹேஸன் ஹோல்டரும் தேவையில்லாத ஷாட்களை ஆடி நடுவரிசைக்கு தூண்களாக இருக்க வேண்டியவர்கள் ஆட்டத்தைக் கோட்டைவிட்டனர். விஜய் சங்கரை எவ்வாறு இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

76-க்கு60 தான்

சன்ரைசர்ஸ் அணியில் வார்னர், ரஷித்கான் அடித்த ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், 76 பந்துகளி்ல் 60 ரன்களை அனைத்து பேட்ஸ்மேன்களும் சேர்ந்து அடித்துள்ளனர். ரஷித்கான் கடைசி நேரத்தில் தன்னால் முடிந்த அளவு அடித்து வெற்றிக்கு அணியை உந்தித்தள்ளினார். ரஷித்கான் முயன்ற அளவு கூட மற்ற பேட்ஸ்மேன்கள் முயவில்லை. ரஷித்கானை கடைசி வரிசையில் களமிறக்குவதற்கு பதிலாக சுனில் நரேனை தொடக்கத்தில் களமிறக்குவதுபோல் களமிறக்கி பரிசோதிக்கலாம், அடித்து ஆடுவார்.

தோல்விக்கு பிரதான காரணம் மணிஷ் பாண்டே. வார்னர் ஆட்டமிழந்தபின் நன்கு செட்டில் ஆகிய பேட்ஸ்மேனாக இருந்த பாண்டே நின்று ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால், பாண்டே 38 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து தேவையில்லாத ஷாட்டை ஆடி விக்கெட்டை வீணாக்கினார்.

விருதிமான் சஹாவை நடுவரிசையில் களமிறக்கி, தொடக்க வீரராக பேர்ஸ்டோவை களமிறக்கி வார்னர் விளையாட வேண்டும். கடந்த சீசனில் ஏதோ ஒரு போட்டியில் சாஹா அடித்துவிட்டார் என்பதற்காக தொடக்க வீரராக களமிறக்குவது தவறு, சஹாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் தொடக்கவீரராக பெரும்பாலும் களமிறங்கியது இல்லை.

தவறுக்கு கிடைத்த தண்டனை

இந்தத் தோல்வி என்பது ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களின் செய்த தவற்றுக்கும், கேப்டன் வார்னர் எடுத்த தவறான முடிவுக்கு கொடுத்தவிலை. கொல்கத்தா அணியின் முடிவைப் பார்த்தபின்பும், டாஸ் வென்று பந்துவீச்சை வார்னர் தேர்வு செய்திருக்கக்கூடாது, நல்ல பந்துவீச்சாளர்களைக் கொண்ட சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்து, ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை அடித்து, அதன்பின் டிபென்ட் செய்திருக்கலாம்.

மைண்ட் கேம் முக்கியம்

அதுமட்டுமல்லாமல் சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மந்தமான, மெதுவான ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் பேட்ட மூலம் மட்டும் ஆடக்கூடாது, மைன்ட்(mindgame) கேம் அவசியம். பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்ஸர் மட்டும் எடுத்து வெற்றி பெறலாம் என்று களமிறங்கக்கூடாது.

பேட்ஸ்மேன்கள் ஒரு ரன், 2 ரன்கள் என்று ஓடி எடுத்து வி்க்கெட்டுகளை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும், அதன்பின் மோசமான பந்துகளை மட்டும் திட்டமிட்டு அடிக்க வேண்டும். களத்துக்குள் வந்தவேகத்தில் பெரிய ஷாட்களை ஆடி அணியை வெல்லவைக்கலாம் என்று சேப்பாக்கம் ஆடுகளத்தில் எந்த பேட்ஸ்மேனும் நினைத்தால் அதுஇதுபோன்ற பரிதாபமான முடிவில்தான் முடியும்.

சாஹா வீண்

150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், சாஹா ஆட்டத்தைத் தொடங்கினர். சஹா தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் திணறினார். ஒரு ரன்னில் சேர்த்த சாஹா, சிராஜ் ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு வந்த மணிஷ் பாண்டே, வார்னருடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். வார்னர் அருமையான சில ஷாட்களை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்களைச் சேர்த்தது.

மணிஷ் பாண்டேவும் அவ்வப்போது அடித்த பவுண்டரிகள், சிக்ஸரால் ஸ்கோர் சீராக உயர்ந்து வெற்றியை நோக்கி சன்ரைசர்ஸ் நகர்ந்தது. வார்னர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க கோலி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை.

திருப்பம்

ஜேமிஸன் வீசிய 14வது ஓவரில்தான் திருப்பம் ஏற்பட்டது. ஆப்ஃகட்டரில் வீசப்பட்ட பந்தை அவுட்சைட் ஆஃப் திசையில் தூக்கி வார்னர் அடிக்க அது கிறிஸ்டியன் கையில் தஞ்சமடைந்தது. வார்னர் 54 ரன்னில்(37பந்துகள், 7பவுண்டரி, ஒருசிக்ஸர்) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பேர்ஸ்டோ, பாண்டேவுடன் சேர்ந்தார்.

திருப்புமுனை

ஷான்பாஸ் நதீம் வீசிய 16-வது ஓவரிலிருந்து ஆட்டம் ஆர்சிபி பக்கம் திரும்பியது. இந்த ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன. முதல்பந்தில் பேர்ஸ்டோ(12) மிட் விக்கடெ்டில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார், அடுத்த பந்தில் மணிஷ் பாண்டே(39) தேவையில்லாமல் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடித்து விக்கெட்டை இழந்தார். கடைசிப்பந்தில் அப்துல் சமத், ஷான்பாஸ் அகமதுவிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒரேஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தவுடன், சன்ரைசர்ஸ் அணி நிலைகுலைந்தது, அழுத்தம் அதிகரித்தது. வெற்றிக்கான வாய்ப்பு கைநழுவத் தொடங்கியது. அடுத்துவந்த விஜய் சங்கர்(4) ரன்னில் படேல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். 12 பந்துகளில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது.

தோல்வி

சிராஜ் வீசிய 18-வது ஓவரில் ரஷித் கான் சிக்ஸர் விளாசி பதற்றத்தைத் தணி்க்க முயன்றார் ஆனால், அதே ஓவரில் ஜேஸன் ஹோல்டர்(4) ரன்னில் கிறிஸ்டியனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது அணியை மேலும்சிக்கலாக்கி, ரஷித்கானுக்கு அழுத்தத்தை அதிகப்படுத்தியது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான், புவனேஷ்வர் குமார் களத்தில் இருந்தனர். ரஷித் கான் கடுமையாக முயற்சித்தும் பவுண்டரி மட்டுமே அடித்து, 17 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அடுத்துவந்த ஷான்பாஸ் நதீம் டக்அவுட்டில் வெளியேற ஆட்டம் முடிந்தது. புவனேஷ்வர் குமார் 2 ரன்னில் களத்தில் இருந்தார். 20ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.

கோலி, மேக்ஸ்வெல் கூட்டணி
முன்னதாக முதலில் ஆர்சிபி அணி பேட்டிங் செய்தது. தேவ்தத் படிக்கல், கோலி ஆட்டத்தைத் தொடங்கினர். படிக்கல் (11) ரன்னில் வெளியேறினார். ஷான்பாஸ் அகமது அதிரடியாக பேட் செய்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி, மேக்ஸ்வெல் கூட்டணி 44 ரன்கள் சேர்த்துப் பிரி்ந்தது. கோலி 33 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் களத்தில் இருந்த மேக்ஸ்வெல் அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 38 பந்துகளில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து, 59 ரன்னில்(5பவுண்டரி,3சிக்ஸர்) ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸை ஒரு ரன்னில் ரஷித்கான் வெளியேற்றினார்.

மற்றவகையில் ஆர்சிபி அணியில் எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்