ராகுல் சஹர், போல்ட், பும்ரா, குர்னல் பாண்டியா ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தொடர்ந்து 10-வது வெற்றி
இதன் மூலம் ஐபிஎல் டி20 சீசனில் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்தது. நிச்சயமாக இந்த வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணியினரும், கேப்டன் ரோஹித் சர்மாவும் எதிர்பார்த்திராத வெற்றி, ஜாக்பாட் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.
» யார் இந்த சேத்தன் சக்காரியா? நடராஜனைப் போல் தடைகளை வென்று சாதித்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்
கடந்த 11 ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 10-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த மும்பை இந்தியன்ஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர் 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
சாம்பியன்களால் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றி அமைக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. உண்மையில் மும்பை இந்தியன்ஸ் ரியல் சாம்பியன்ஸ்தான்.
ஆட்டத்தை மாற்றிய 4 ஓவர்கள்
இந்த ஆட்டத்தில் 40 ஓவர்களில் 36 ஓவர்கள்வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறி, வெற்றியை மும்பை இந்தியன்ஸிடம் தாரை வார்த்து 'பெருந்தன்மையாக வெளியேறியது' கொல்கத்தா அணி.
இந்த மோசமான தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தினேஷுக்கு என்னாச்சு
நிடாஸ் டிராபியில் இந்திய அணியை வெல்ல வைத்த தினேஷ் கார்த்திக் நேற்று ஒரு பவுண்டரி அடிக்கத் திணறியதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. என்னஆச்சு டி.கே.வுக்கு என்ற ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
ரஸல் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் திணறும்போது, ஸ்ட்ரைக்கை தினேஷ் கார்த்திக் தக்கவைத்து, ஆட்டத்தை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் அதைவிடுத்து ஸ்ட்ரைக்கை ரஸலிடம் வழங்கியது மிகப்பெரிய தவறு.
படம் காட்டிய பும்ரா
கார்த்திக்,ரஸல் களத்தி்ல் இருந்தபோது, வெற்றிக்கு 24 பந்துகளில் 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால், ரஸலை நிற்கவைத்து 17-வது ஓவரை பும்ரா நன்றாக படம்காட்டினார். குர்னல் பாண்டியாவெல்லாம் ஒரு பந்துவீச்சாளர் என்றே ஏற்க முடியாது. ஆனால், அவரின் பந்துவீச்சை அடிக்க முடியாமல் 3 ரன்கள் மட்டுமே ரஸலும், கார்த்திக்கும் சேர்த்ததை என்னவென்று சொல்வது. அதிலும் ரஸலுக்காக ஸ்லிப்பில் எல்லாம் பீல்டிங் செட் செய்திருந்தது கொடுமை.......
பும்ரா வீசிய 19 ஓவரிலும் ரஸலுக்கும், தினேஷ்க்கும் படம் காட்டிவிட்டு சென்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடந்த 3 ஓவர்களாக அடிக்காதவர்கள் கடைசி ஓவரிலா அடித்துவிடப்போகிறார்கள். போல்ட் வீசிய கடைசி ஓவரில் ரஸல், கம்மின்ஸ் விக்கெட்டை இழந்தனர். ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ரஸலின் சொதப்பல்
அதுமட்டுமல்லாமல் அதிரடி ஆட்டத்துக்கு பெயரெடுத்த ரஸலின் சொதப்பலான பேட்டிங் கடந்த சீசனிலிருந்து தொடர்ந்து வருகிறது, களத்தில் பிக் ஹிட்டர்ஸ் இருவர் இருந்தும், மிகக்குறைந்த இலக்கைக் கூட அடிக்கவில்லை என்பது மிகவும் பொறுப்பற்ற பேட்டிங்கின் உதாரணம்
மோர்கனின் மோசமான முடிவு
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைப் பொருத்தவரை கேப்டன் மோர்கன் டாஸ் வென்று சேஸிங் செய்ய முயன்றது மிகப்பெரிய தவறு. சென்னை போன்ற மந்தமான, மெதுவான ஆடுகளத்தில் சேஸிங் செய்வது கடினமானது எனத் தெரிந்து கொண்டு பந்துவீச்சைத் தேர்வு செய்ததே அணியை குழிக்குள் தள்ளும் மோசமான முடிவு.
கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணா, கில் அருமையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். திரிபாதியும் ஏமாற்றினார். ஆனால், அதன்பின் வந்த சகிப் அல் ஹசன், மோர்கன் இருவரும் தேவையில்லாமல் ஆக்ரோஷமான ஷாட்களை அடித்து விக்கெட்டுகளை இழந்தனர்.
தேவையில்லாத ஷாட்கள்
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் என்று சொல்வதை நம்புவதற்கே கடினமாக இருக்கிறது. அணியின் சூழலை உணர்ந்து, நிதானமாக பேட் செய்ய வேண்டிய கேப்டன் மோர்கன் டீப் மிட்விக்கெட்டில் அந்த ஷாட்டை ஆட வேண்டிய அவசியமே இல்லை. கொல்கத்தா அணிக்கு மோர்கனை கேப்டனாக ஏன் நியமித்தார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது. சஹிப் அல் ஹசன் பெயரில் இருக்கும் ஆல்ரவுண்டர் பட்டத்தை தயவு செய்து எடுத்துவிடலாம்.
ராணா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து தேவையில்லாமல் ராகுல் சஹர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகினார். பொதுவாக ஒரு அணியில் செட்டில் ஆன பேட்ஸ்மேன் இருந்தால், அவர்தான் கடைசிவரை இருந்து ஆட்டத்தை முடித்துக்கொடுக்க வேண்டும், புதிதாக ஒருபேட்ஸ்மேன் களத்துக்குவந்து அவர் செட்டிலாகி விளையாட நீண்டநேரம் ஆகும். அந்தவகையில் ராணாவும் தனது பொறுப்பைச் சரியாகச் செய்யவில்லை.
மொத்தமாக முடிச்சுட்டாங்க
களத்தில் இருந்த அனுபவமான பேட்ஸ்மேன்கள் ஆன்ட்ரே ரஸல், தினேஷ்கார்த்்திக் ஆட்டத்தை முடித்துக்கொடுத்திருக்க வேண்டும். 24 பந்துகளில் 30 ரன்கள் இலக்கு பெரிய விஷயம் அல்ல. இருவரின் பொறுப்பற்ற, மோசமான பேட்டிங், தடவல் ஆட்டம் கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
பந்துவீச்சாளர்கள் தங்களின் பங்களிப்பை நிறைவாகச் செய்துவிட்டார்கள். ரஸல் தனது இரு ஓவர்களில் 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். கம்மின்ஸ், சகிப் அல் ஹசன் இருவருமே கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.
இது முழுமையாக பேட்ஸ்மேன்களால் ஏற்பட்ட மாபெரும் தோல்வி
திருப்புமுனை பந்துவீச்சு
மும்பை இந்தியன்ஸைப் பொறுத்தவரை இந்த வெற்றி அவர்களுக்கு நம்பமுடியாத, ஜாக்பாட் வெற்றி. 16-வது ஓவர்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி மீதான நம்பிக்கை இருந்திருக்காது, ஆனால், கடைசி ஓவர்களில்தான் ஆட்டம் திசை மாறியது. எந்த நேரத்திலும் ஆட்டத்தை திசைதிருப்ப முடியும் என்பதால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து சாம்பியனாக இருந்து வருகிறார்கள்.
கடைசி 4 ஓவர்களில் பும்ரா, போல்ட் தங்களின் அனுபவமான பந்துவீச்சை வெளிப்படுத்திய விதம், குர்னல் பாண்டியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவைதான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. நீண்ட நாட்களுக்குப்பின் ராகுல் சஹர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
பேட்டிங் மோசம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கும் நேற்று மோசமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் மட்டும் அடித்துக் கொடுக்காமல் இருந்திருந்தால், நிலைமை மோசமாக இருந்திருக்கும்.
172 ரன்கள் வரை மும்பை இந்தியன்ஸ் அணி சேர்க்க வாய்ப்புள்ளது என்று சூர்யகுமார் ஆட்டத்தை மதிப்பிட்டும், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, இஷான் கிஷன், பொலார்ட் ஆகியோர் இருப்பதை நம்பி மதிப்பிடப்பட்டது.
ஆனால், நடந்ததே தலைகீழ் 86 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்ததை என்ன வென்று சொல்வது.
வீடியோ கேம் கிரிக்கெட்டா
கடைசி 5 ஓவர்களில் 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. அதிலும் செல்போனில் கிரிக்கெட் விளையாடுவது போன்று ரஸலின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளும், அதற்கு முந்தைய அவரின் ஓவரில் 2 விக்கெட்டுகளையும் மும்பை இழந்தது.
சாம்பியன்ஸ் அணியாக இருக்கும் மும்பை அணியிடம் இருந்து இதுபோன்ற மோசமான பேட்டிங்கை எதிர்பார்க்கவில்லை. அணியில் யாரேனும் ஒருவர் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் நின்றிருக்க வேண்டும். அதைச் செய்யவி்ல்லை. பந்துவீச்சிலும் பெரிதாக தொடக்கத்தில் எடுக்கவி்ல்லை, ஆனால், ராகுல் சஹர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழந்தவுடன் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி இறுகப்பிடித்துக்கொண்டது.
மொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த ஜாக்பாட் வெற்றி, எதிர்பாராத வெற்றி.
நல்ல தொடக்கம்
152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கிறது. ராணா, கில் நல்ல தொடக்கத்தை அளித்தனர். விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேயில் 45 ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கில் 33 ரன்னில் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த திரிபாதி 5 ரன்னில் வந்த வேகத்தில் வெளியேறினார். அதன்பின் வந்த மோர்கன்(7), சகிப் அல் ஹசன்(9) என் அடுத்தடுத்து தேவையற்ற ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தனர். ராணா 40 பந்துகளில் அரைசதம் அடித்து, 57 ரன்னில் சஹர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகினார்.
பொறுப்பற்ற பேட்டிங்
கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக், ரஸல் இருவரும் ஆட்டத்தை முடித்து வைப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், கொல்கத்தா அணியின் ஆட்டத்தையே இருவரும் சேர்ந்து முடித்துவிட்டார்கள்.
பும்ரா, குர்னல் பாண்டியா, போல்ட் வீசிய கடைசி 4 ஓவர்க்ளை இருவரும் சேர்ந்து தேய்த்து, வீணடித்தன். ரஸல் 9 ரன்னிலும், கம்மின்ஸ் டக்அவுட்டிலும் போல்டின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர்.
சொதப்பலாக ஆடிய தினேஷ் கார்த்தி்க் 11 ரன்களுடனும், ஹர்பஜன் 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 10 ரன்னில் கொல்கத்தா தோல்வி அடைந்தது. மும்பை அணித் தரப்பில் சஹர் 4 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சூர்யகுமார்அதிரடி
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா(43), சூர்யகுமார் யாதவ்(56) ஆகிய இருவரைத் தவிர எந்த வீரரும் ஒழுங்காக ஆடவில்லை.இஷான் கிஷன்(1), பொலார்ட்(5) ஹர்திக்(15), குர்னல்பாண்டியா(15), ஜான்ஸன்(0), சஹர்(8), பும்ரா(0), போல்ட்(0) என வரிசையாக வீழ்ந்தனர். 86 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த மும்பை அணி, அடுத்த 66 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்ெகட்டுகளையும் இழந்தது.
20 ஓவர்களில் 152ரன்களுக்கு மும்பை அணி ஆட்டமிழந்தது. கொல்கத்தா தரப்பில் ரஹஸ் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago