யார் இந்த சேத்தன் சக்காரியா? நடராஜனைப் போல் தடைகளை வென்று சாதித்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்

By க.போத்திராஜ்

கடினமான சூழல்தான் ஒருவரைப் பக்குவப்படுத்துகிறது, செதுக்குகிறது, மனதிலும், உடலிலும் வைராக்கியத்தை விதைக்கிறது. இவை அனைத்தும் நமது தமிழக வீரர், சின்னப்பம்பட்டி யார்க்கர் நடராஜனுக்குப் பொருந்தும்.

டென்னிஸ் பந்துவீச்சில் பயிற்சி , வறுமையான சூழல், கடினமான முயற்சிகளுக்குப் பின்புதான் டிஎன்பிஎல், ஐபிஎல், இந்திய அணியில் தனக்கான அடையாளத்தை நடராஜன் பெற்றுள்ளார்.

நடராஜனைப் போன்றே அதே கடினமான சூழலில் வந்து ஒரே போட்டியில் யார் இந்த வேகப்பந்துவீச்சாளர் என அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா.

திரும்பிப் பார்க்க வைத்த பந்துவீச்சு

மும்பையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் சேத்தன் சக்காரியாவின் பந்துவீச்சு அனைவராலும் ரசிக்கப்பட்டது. அனுபவமற்ற சேத்தன் சக்காரியாவுக்கு இது ஐபிஎல் அறிமுகப் போட்டி என்று சொல்ல முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.

4 ஓவர்கள் வீசிய சக்காரியா 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 13 டாட் பந்துகளை வீசி திரும்பிப் பார்க்க வைத்தார். அதிலும் 20-வது ஓவரில் வெறும் 5 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய சக்காரியா, ஃபீல்டிங்கில் அற்புதமான கேட்ச்சையும் பிடித்தார்.

வறுமையான சூழல்

23 வயதாகும் சேத்தன் சக்காரியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள வர்தேஜ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா டெம்போ வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். மூத்த சகோதரர் ஒருவர் இருந்தார். ஐபிஎல் தொடர் ஏலத்துக்கு சில வாரங்களுக்கு முன் சில பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாகத் தந்தையால் டெம்போ வேன் ஓட்ட முடியாததால், சக்காரியா கிடைத்த வேலைக்குச் சென்று கிரிக்கெட் போட்டியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். சேத்தன் சக்காரியா வருமானத்தில்தான் அவரின் குடும்பமே இயங்குகிறது.

ஏலத்தில் போட்டி

2020-ம் ஆண்டில் ஆர்சிபி அணி, சேத்தன் சக்காரியாவை வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வைத்திருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் கோப்பையை வென்ற சவுராஷ்டிரா அணியில் சேத்தன் சக்காரியா பந்துவீச்சைப் பார்த்த ஐபிஎல் நிர்வாகிகள் சக்காரியா மீது குறிவைத்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் ரூ.1.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி விலைக்கு வாங்கியது. நிச்சயம் அந்தத் தொகை வீணாகவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய சக்காரியாவின் பந்துவீச்சு பேசப்பட்டது.

நடராஜனைப் போல்...

சக்காரியா பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே இவரின் வேகப்பந்துவீச்சு மாணவர்களை ஈர்த்துள்ளது. வறுமையில் வாடிய சக்காரியாவுக்கு முறையான பயிற்சியும் இல்லை, பயிற்சியாளர்களும் இல்லை. 16-வது வயதுவரை சக்காரியா டென்னிஸ் பந்தில்தான் பந்துவீசிப் பயிற்சி எடுத்தாார், கிரிக்கெட் தொடர்பான இணையதளங்களைப் பார்த்து சுயமாகப் பயிற்சி எடுத்தார்.

சக்காரியா பலமே அவரின் ஸ்விங் பந்துவீச்சும், லைன்-லென்த்தில் வீசுவதும்தான். சராசரியாக 130 கி.மீ. வேகத்தில் பந்துவீசிவரும் சக்காரியாவால் முறையான பயிற்சி இருந்தால் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத்கான் ஸ்டைலில் சக்காரியா பந்துவீசி வருகிறார்.

அடையாளம் கண்டது எப்படி?

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கூச்பெஹர் கிரிக்கெட் போட்டியில் சக்காரியா 18 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது கவனிக்கப்பட்டார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கர்நாடக அணிக்கு எதிராக 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சக்காரியா. இதையடுத்துதான் சக்காரியா அடையாளம் காணப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, அவர் மெக்காரத்தின் எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனில் பயிற்சி பெற உதவியது.

கடந்த 2018-19ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைபோட்டியில் சக்காரியா அறிமுகமானார். இதுவரை 15 முதல் தரப் போட்டிகள், 16 டி20 போட்டிகளில் மட்டுமே சக்காரியா விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஞ்சிக்கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணியில் இடம் பெற்று 12 விக்கெட்டுகளை வீழ்த்திய சக்காரியா, 4.96 எக்கானமி மட்டுமே வைத்திருந்தார். இவரின் சிறந்த பந்துவீச்சு அனைவரையும் கவர்ந்தது.

"ஷூ" கூட இல்லை

சக்காரியா பயிற்சிக் காலத்தில் அவருக்கு முறையான ஷூ கூட கிடையாது. சவுராஷ்டிரா அணியில் இருந்த மூத்த வீரர் ஷெல்டன் ஜேக்ஸன் அவருக்கு புதிய ஷூ வாங்கிக்கொடுத்து பயிற்சிக்கு உதவினார். அதன்பின்புதான் சக்காரியாவுக்கு எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனுக்குச் செல்லும் வாயப்பு கிடைத்தது. அதன்பின் ஜேக்ஸனுக்கும், சக்காரியாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

மாமாவின் உதவி

சக்காரியா மட்டுமே வேலைக்குச் சென்று அந்த வருமானத்தில்தான் குடும்பம் நடந்து வருகிறது. ஆனால், பல நாட்களாகப் பயிற்சி, போட்டிகள் என்று சக்காரியா சென்றுவிடுவதால், குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை அவரின் தாய்மாமாதான் கவனித்து வந்தார். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு சக்காரியாவுக்கு ஆலோசனையும், ஆதரவையும் வழங்கி, குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.

ஆர்வமிகுதியால் சக்காரியா தீவிரமான பந்துவீச்சுப் பயிற்சி எடுத்தபோது, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். ஏறக்குறைய ஓராண்டாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சக்காரியாவுக்குத் தேவையான மருத்துவச் செலவுகளையும், அவரின் குடும்பத்துக்கான தேவையையும் அவரின் தாய்மாமாதான் கவனித்தார். அதுமட்டுமல்லாமல் சக்காரியா கல்லூரிப் படிப்புக்கான கட்டணம், தேர்வுக் கட்டணத்தையும் அவரின் தாய்மாமாதான் செலுத்தினார்.

ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும சக்காரியா திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்