சதமடித்த ‘சாம்சன்தான் ஹீரோ’;7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள்: தோற்றாலும் ரசிகர்களின் மனதை வென்ற ராஜஸ்தான்: கடைசிப்பந்தில் பஞ்சாப் ‘த்ரில்’ வெற்றி

By க.போத்திராஜ்


இந்தப் போட்டியைப் பற்றி எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் போட்டியாகவும், ரன் விருந்தாகவும் இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் மட்டும் 26 சிக்ஸர்கள், 40 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன தேஜாவு என்று சொல்வதைப்போல், மீண்டும் கடந்த ஐபிஎல் சீசனுக்கு பயணித்த அனுபவம். சாம்ஸன், கே.எல்.ராகுல், ஹூடா, சக்காரியா, அர்ஸ்தீப் சிங் என யாருடைய ஆட்டத்தை பற்றி புகழ்வதென்ற தெரியவில்லை.

தனி ஒருவன் சஞ்சு சாம்ஸனின் ஆகச்சிறந்த சதம், கடும் உழைப்பு ஆகியவற்றை கடைசி ஓவரில் உடைத்த அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்து போராடி 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் வென்றது பஞ்சாப் கிங்ஸ் அணியாக இருந்தாலும், பெருமை அனைத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸனுக்கு மட்டுமே சொந்தம்.

ரசிகர்கள் மனதை வென்ற சாம்ஸன்

வாவ்… என்ன மாதிரியான வியக்கவைத்த பேட்டிங், தனி ஒருவராக களத்தில் இருந்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய சாம்ஸன் 63 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்து(7சிக்ஸர்கள்,12 பவுண்டரிகள்) கடைசிப்பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருதையும், ரசிகர்களின் மனதையும் சாம்ஸன் வென்றார்.
இரு அணியின் கேப்டன்களும் ஏறக்குறைய 40 ஓவர்கள் களத்தில் இருந்துள்ளனர். சாம்ஸன் சரியாக 40 ஓவர்களும், ராகுல், 39 ஓவர்கள் வரையிலும் களத்தில் இருந்தார்.

தனி ஒருவன்

சஞ்சு சாம்ஸன் ஐபிஎல் தொடரில் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். கேப்டனாகப் ராஜஸ்தான் அணிக்குப் பொறுப்பேற்ற சாம்ஸன், முதல் போட்டியில் வெற்றி பெற்றுக்கொடுக்க கடும் பிரயத்தனம் செய்தும் கடைசிப்பந்தில் முடியவில்லை. விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அணிக்காக நான் இருக்கிறேன் என்ற ரீதியில் ஒற்றை மனிதராக அணியை தனது தோளில் சுமந்து சென்ற சாம்ஸனின் ஆட்டம் புகழப்பட வேண்டியது.

முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களைச் சேர்த்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 10 ஓவர்களில் டாப் கியரில் பயணித்து 122 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணியின் ரன்ரேட்டுக்கு குறையாமல் ராஜஸ்தான் அணி பயணித்தது. 11 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியபோது, ராஜஸ்தானும் அதே ஓவரில் எட்டியது. 18ஓவரில் பஞ்சாப் 200 ரன்களை எட்டியபோது, ாாஜஸ்தானும் அதே ஓவரில் 200 ரன்களை எட்டியது.

33 பந்துகளில் அரைசதம் அடித்த சாம்ஸன், 54 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது, அடுத்த 21 பந்துகளி்ல் 50 ரன்களை எட்டினார். ஒரு கேப்டன் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதற்கு உதாரணமாக சாம்ஸன் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம்ஸன் 12 ரன்கள் மற்றும் 35 ரன்களில் இரு கேட்ச் வாய்ப்புகளை பஞ்சாப் அணியிடனர் தவறவிட்டதை, சாம்ஸன் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.

திருப்புமுனை ஓவர்கள்

ஷமி வீசிய 18வது ஓவர், மெரிடித் வீசிய 19ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனை. இருவரின் ஓவர்களையும் சாம்ஸன் வெளுத்திருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. மெரிடித் வீசிய 19வது ஓவரில் சாம்ஸன் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் முதல் பந்து வைடாகச் சென்றும் நடுவர் வைட் கொடுக்கவில்லை. 2-வது பந்தில் சாம்ஸன் ஒரு ரன் எடுக்க மோரிஸ் பேட் செய்தார். மோரிஸ் ஒரு ரன் எடுத்து,ஸ்ட்ரைக்கை மீண்டும் சாம்ஸனிடம் வழங்கினார். 4-வது பந்தில் சாம்ஸன் ஆவுட்சைட் ஆஃபில் சிக்ஸர் அடிக்க போட்டி விறுவிறுப்படைந்தது. 2 பந்தில் 5 ரன்கள் தேவை. 5-வது பந்தில் சாம்ஸன் அடித்தபோதிலும் ரன் எடுக்கவி்ல்லை. கடைசிப்பந்தில் டீப் கவரில் அடித்த ஷாட்டை தீபக் ஹூடா கேட்ச் பிடிக்க சாம்ஸனின் கடின உழைப்பு வீணாகிப்போனது.

ராகுல் முதிர்ச்சி

அடுத்ததாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஆட்டம் அற்புதமாக இருந்தது. தான் இன்னும் ஃபார்மில் இருக்கிறேன் என்பதை 50 பந்துகளுக்கு 91 ரன்கள் விளாசி நிரூபித்துள்ளார் அதில் 7பவுண்டரி 5சிக்ஸர்கள் அடங்கும். கடந்த சீசனைவிட இந்த சீசனில் ராகுலின் கேப்டன்ஷிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. பீல்டர்களை அமைப்பதிலும், பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட பீல்டர்களை மாற்றுவதும், சக வீரர்களை ஊக்கப்படுத்துவதிலும் ராகுல் தேறுகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணி சவாலான இலக்கை கொண்டு செல்ல ராகுல் முக்கியக் காரணம்.

ஹூடா அதிரடி

பஞ்சாப் அணியில் குறிப்பிட வேண்டிய மற்றொருவீரர் தீபக் ஹூடா. எங்கிருந்தார் இத்தனை நாளா என்று கேட்கவைத்துவிட்டார். களத்தில் இறங்கியதுமுதல் காட்டடி அடித்த ஹூடா, 20 பந்துகளில் அரைசதம் அடித்து 28 பந்தில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள். அதாவது பவுண்டரி சிக்ஸர்கள் மூலமே அரைசதத்தை ஹூடா எட்டிவிட்டார்.

இளம் பந்துவீச்சாளர்கள்

ராஜஸ்தான் அணியின் இளம் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா, பஞ்சாப் வீரர் அர்ஸ் தீப் சிங் இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுமே நேற்று கவனத்தை ஈர்த்தனர். அதிலும் சேத்தன் சக்காரியாவுக்கு இது அறிமுகப் போட்டி என்று சொல்ல முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசினார். 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சக்காரியா 13 டாட் பந்துகளை வீசி திரும்பிப் பார்க்க வைத்தார், அற்புதமான கேட்சையும் பிடித்தார்.

ராஜஸ்தான் இளம் வீரர் சேத்தன் சக்காரியா

மற்றொருவர் பஞ்சாப் வீரர் அர்ஸ்தீப் சிங் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீச வில்லையென்றால் ஆட்டம் தலைகீழாகச் சென்றிருக்கும். வைட் யார்கர், ஸ்லோபால் என கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். அர்ஸ்தீப் சிங் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், 9 டாட்பந்துள் அடங்கும்.

விக்கெட் சரிவு

222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பென் ஸ்டோக்ஸ், வோரா களமிறங்கினர். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே பேட்டில் எட்ஜ் எடுத்து ஸ்டோக்ஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து சாம்ஸன் உள்ளே வந்தார். வோரா 12 ரன்கள் சேர்த்த நிலையில் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளேயில் ராஜஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. 3-வது விக்கெட்டுக்கு வந்த பட்லரும் நிலைக்காமல் 25 ரன்னில் ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் போல்டாகினார்.

சாம்ஸன் விளாசல்

அடுத்துவந்த ஷிவம் துபே, சாம்ஸனுக்கு சேர்ந்தார். துபே நிதானமாக ஆட, சாம்ஸன் வெளுத்துவாங்கினார். 10.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 33 பந்துகளில் சாம்ஸன் அரைசதம் அடித்தார். துபே 23 ரன்னில் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த ஜோடி 53ரன்கள் சேர்த்துப் பிரிந்தது.

அடுத்துவந்த ரியான் பராக் சிக்ஸர்களாக விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். சாம்ஸன் ஒருபக்கம், பராக் ஒருபக்கம் சிக்ஸர்களா விளாச ஸ்கோர் எகிறியது. சாம்ஸன் 54 பந்துகளில் சதம் அடித்தார்.
11 பந்துகளி்ல் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் சேர்த்து பராக் , ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 52 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திவேட்டியா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மோரிஸ் மோசம்

மோரிஸ் களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் அதிகவிலைக்கு வாங்கப்பட்ட மோரிஸ் பந்துவீச்சிலும் சுமார்தான், பேட்டிங்கிலும் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. மெரிடித் வீசிய 19-வது ஓவரில் 2 பந்துகளை மோரிஸ் வீணாக்கினார். அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரிலும் சிங்கில் ரன்னாக எடுத்த மோரிஸல் பெரிஷாட்களை அடிக்க முடியவில்லை.

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஸ்தீப் சிங் அருமையாகப்பந்துவீசினார். அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சை மோரிஸாலும் பெரிய ஷாட் அடிக்க முடியவில்லை சாம்ஸன் அடித்த 6 சிக்ஸர் உட்பட 8 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததது. கடைசிப்பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சாம்ஸன் சிக்ஸருக்கு விளாசிய நிலையில் டீப் கவரில் தீப் ஹூடாவிடம் பந்து தஞ்சமடைந்தது. சாம்ஸன் 119 ரன்னில் ஆட்டமிழந்து கடைசிப்பந்தில் தோற்றார்.

20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்து 4 ரன்னில் தோற்றது.பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்தீப் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அகர்வால் ஏமாற்றம்
முன்னதாக பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. அகர்வால், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். அகர்வால் 14 ரன்னில் சக்கரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வந்த கெயில்,ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 45 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஹூடா காட்டடி

ராகுல் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். கெயில் 2 சிக்ஸர், 4பவுண்டரிகள் உள்பட 28 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து பராக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 67 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த தீபக்ஹூடா அருமையான இன்னிங்ஸை ஆடினார். சிக்ஸர், பவுண்டரி என வெளுத்துக் கட்டிய ஹூடா 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். 28 பந்துகளி்ல் 64 ரன்கள் சேர்த்தநிைலயில் மோரிஸ் பந்துவீச்சில் ஹூடா ஆட்டமிழந்தார். ஹூடாவின் ஸ்ட்ரைக் ரேட் 228 ஆக இருந்தது. ராகுல், ஹூடா கூட்டணி 105 ரன்கள் சேர்த்து அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

ராகுல் 50 பந்துகளில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள் அடங்கும். பூரன், ரிச்சார்டஸன் இருவரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

20ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 221 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் சக்காரியா 3 விக்கெட்டுகளையும், மோரிஸ் 2 விக்ெகட்டுகளையும் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்