முதல் இன்னிங்ஸில் இந்தியா மோசம்: 201 ரன்களுக்குச் சுருண்டது

By ஆர்.முத்துக்குமார்

மொஹாலியில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முரளி விஜய் (75), ரவீந்திர ஜடேஜா (38) தவிர மற்ற பேட்ஸ்மென்கள் ஒருவரும் சரியாக விளையாட முடியவில்லை. 68 ஓவர்களில் இந்தியா 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முக்கிய வீச்சாளர்களுக்கு முனையை மாற்றி பந்து வீசச் செய்ய மாற்று, இடை வீச்சாளராக பயன்படுத்தப்பட்ட இடது கை சுழல்பந்து வீச்சாளர் டீன் எல்கர் 4 விக்கெட்டுகளை 22 ரன்களுக்குக் கைப்பற்ற இம்ரான் தாஹிர், பிலாண்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பிட்ச் ரிப்போர்ட் அளித்த சுனில் கவாஸ்கர் வறண்ட, பிளவுகள் கொண்ட பிட்ச், 'இதற்கு முன்பாக மொஹாலியில் இப்படிப்பட்ட பிட்சை பார்த்ததில்லை' என்றார். பழைய பிட்சையே ரோல் செய்து தயார் படுத்திக் கொடுத்தது போல் தெரிகிறது, புதிதாக பிட்ச் அமைக்கப்படவில்லை, ஆட்டம் தொடங்கும் முன்பே வீணான பிட்ச் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. பந்துகள் தாழ்வாக வரும் சாத்திய உள்ளது என்றே கூறப்பட்டது. மேலும் சுனில் கவாஸ்கர், பேட்டிங்குக்குச் சிறப்பான ஆடுகளம் அல்ல என்று கூறியிருந்தார்.

ஆனால் விராட் கோலியோ டாஸ் வென்றவுடன் "பேட் செய்வதற்கு நல்ல பிட்ச்" என்று அதற்கு முரண்பாடாக கூறினார். பேட் செய்ய முடிவும் எடுத்தார்.

வழக்கம் போல் ஷிகர் தவண் எதிர்பார்ப்புகளை வீணடித்தார். தொடர்ந்து சொதப்பி வரும் இவரை அணி நிர்வாகம் ஆதரிப்பது ஏன் என்று புரியவில்லை. பிலாண்டரின் 4-வது பந்து, ஆடாமல் விட்டு விட வேண்டிய பந்து அதனை ஒன்று நன்றாகப் பின்னால் சென்று வலுவாக கட் செய்திருக்க வேண்டும், இல்லையேல் நின்ற படியே அது போக விட்டிருக்க வேண்டும், இரண்டுமில்லாமல் அதனை பின்னால் சென்று டிரைவ் ஆட முயன்றார். ஆனால் அது கேட்சிங் பிராக்டீஸ் ஆட்டமாக அமைய ஆம்லாவுக்கு எளிதான கேட்ச், இன்னொரு பூஜ்ஜியம் தவணுக்கு. பெவிலியன் திரும்பிய கையோடு தேநீர் கோப்பையுடன் காட்சியளித்தார் தவண்.

ஆனால், புஜாரா, விஜய் ஜோடி நம்பிக்கை அளித்தனர், 2-வது விக்கெட்டுக்காக 63 ரன்கள் சேர்க்கப்பட்டது. இருவருமே பந்துகளை நன்றாக கணித்தனர், ரன்களை வேகமாக ஓடினர். ரன் எடுக்க வேண்டிய பந்துகளில் ரன் எடுத்தனர். இதில் புஜாரா டேல் ஸ்டெய்னை அடித்த மிட்விக்கெட் பிளிக் கிளாஸ் ஷாட். டேல் ஸ்டெய்ன், பிலாண்டர் தொடக்கத்தில் இந்திய பேட்ஸ்மென்களின் பலவீனமான பகுதிகளில் வீசி சோதித்தனர், முரளி விஜய் அருமையாக ஆடினார், அதாவது ஆஃப் ஸ்டம்ப் திசையில் வரும் பந்துகளுக்கு அவரது கணிப்பு அபாரமாக இருந்தது. இன்ஸ்விங்கர்களையும் கூட அவர் அற்புதமாகக் கணித்து ஆடாமல் விட்டார்.

புஜாரா 6 அருமையான பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்த போது, பகுதி நேர இடது கை சுழற்பந்து வீச்சாளர் டீன் எல்கர் வீச அழைக்கப்பட்டார். அது ஒரு நேர் பந்து, ஒன்றுமே திரும்பவில்லை. மேலும் அதுவரை பிட்சில் பந்துகள் திரும்பியிருந்தால் மட்டுமே பேட்ஸ்மெனுக்கு அந்தப் பந்து திரும்பும் என்ற சந்தேகம் ஏற்படுவது நியாயம், மற்ற படி நேர் பந்துகளையே பேட்ஸ்மென் எதிர்பார்க்க வேண்டும். ஆனால் புஜாரா நேர் பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். நிச்சயம் மோசமான கணிப்பினால் அவுட் ஆனதாகவே கருதப்பட வேண்டும்.

விராட் கோலி பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே களமிறங்கி 4 பந்துகளே தாங்கினார். களமிறங்கி, சிறிது நேரம் நின்று பிட்சில் பந்துகளின் வேகம், அளவு மற்றும் உயரத்தை கணித்த பிறகே ஒருவர் ஆஃப் அண்ட் மிடில் பந்தை லெக் திசையில் ஆட வேண்டும், ஆனால் ரபாதா வீசிய அந்த பந்தை லெக் திசையில் ஆட முன்னதாகவே மட்டையை உட்புறமாக அவர் திருப்ப பந்து மட்டையின் முன் விளிம்பில் பட்டு எல்கரிடம் கேட்ச் ஆனது. கோலி எதிர்பார்த்த வேகத்தில் பந்து வரவில்லை.

ரஹானே ஒரு அருமையான நேர் பவுண்டரியுடன் தொடங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து எல்கரின் மெதுவான, பிளைட்டட் பந்துக்கு பெரிய டிரைவ் ஆட முயன்றார் பந்து எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. இது 38-வது ஓவரின் கடைசி பந்து, பிறகு 40-வது ஓவரின் முதல் பந்தில் சஹா ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால் இது அருமையான பந்து, ரஹானேயை வீழ்த்திய பந்து இம்முறை லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆக சஹா, இடது காலை விலக்கிக் கொண்டு மிட் ஆனில் தடுத்தாட முயன்றார் ஆனால் பந்து திரும்பி எட்ஜ் எடுத்து ஆம்லா கையில் கேட்ச் ஆனது.

விக்கெட்டுகள் மடமடவென சரியும் அபாயத்தை உணர்ந்த விஜய் சில பவுண்டரிகளை விளாசினார், அவரும், ஜடேஜாவும் 38 ரன்களைச் சேர்த்தனர், அப்போது அற்புதமாக விளையாடி 136 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த விஜய் , ஆப் பிரேக் பவுலர் ஹார்மரை ஒரு பெரிய ஸ்வீப் ஆட முயன்று பந்தைக் கோட்டை விட்டார். நேராக கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆகி வெளியேறினார்.

பிறகு மிஸ்ரா 6 ரன்களில் மேலேறி வந்து அடிக்க முயன்று எல்கரிடம் வீழ்ந்தார். ரவீந்திர ஜடேஜா நின்று ஆடி 92 பந்துகள் பொறுமை காத்து 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து தொடர்ந்து பிலாண்டரின் பந்தில் தடுமாறிய நிலையில் அவரிடமே எல்.பி.ஆனார். யாதவ், வருண் ஆரோன் ஆகியோரை இம்ரான் தாஹீர் ஒரே ஓவரில் வீழ்த்த இந்தியா இன்னிங்ஸ் என்ற கதை முடிவுக்கு வந்தது.

தற்போது தென் ஆப்பிரிக்கா இன்னமும் 9 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வான் ஸில், டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்