ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், வலிமையான பேட்டிங் வரிசை, அச்சறுத்தும் பந்துவீச்சு, எந்த வரிசையிலும் விளையாடக்கூடிய வீரர்கள், சரிவிலிருந்து அணியை தூக்கி நிறுத்தும் திறன் படைத்த பேட்ஸ்மேன்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.
அப்போ…அணியில் நெகட்டிவ் பாயிண்ட்டே இல்லியா என்று கேட்பது புரிகிறது.
தங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு நெகட்டிவையும் ஒவ்வொரு தொடரிலும் பாஸிட்டாவாக மாற்றுவதால்தான் தொடர்ந்து இரு முறை ஹிட்மேன் ரோஹித் படையால் சாம்பியன் பட்டத்தைக் தக்கவைக்க முடிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
» இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ்தான் சாம்பியன்; மற்றொரு அணிக்கும் வாய்ப்பு: மைக்கேல் வான் கணிப்பு
வரும் 14-வது ஐபிஎல் தொடருக்காக இன்னும் பட்டை தீட்டப்பட்டு, கொம்புகளை கூர்தீட்டி, களம் காண்கிறது மும்பை இந்தியன்ஸ் காளைகள். அணியின் முக்கிய வீரர்கள்(கோர் ப்ளேயர்ஸ்) யாரும் மாற்றப்படாமல், தேவையற்ற வீரர்களை மட்டும் விலக்கிவிட்டு, புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை அணி.
அந்த வகையில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், பியூஷ் சாவ்லா, நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் ஆடம் மில்னே, தென் ஆப்பிரிக்க இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மேக்ரே ஜான்ஸன், ஆஸி. வேக்பபந்துவீச்சாளர் நாதன் கூல்டர் நீல் ஆகியோர் கவனிக்கப்படக் கூடியவர்கள். இவர்களை சரியாகப் பயன்படுத்தினால் இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் சாம்பியன் என்பதில் சந்தேகமில்லை.
வீரர்கள்தான் வலிமை
மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, இஷான்கிஷன் , சூர்யகுமார், பாண்டியா பிரதர்ஸ், பொலாரட், பும்ரா, டீ காக் ஆகியோரா சரியாக விளையாடினாலும் சரி விளையாடாவிட்டாலும் சரி மாற்றப்படமாட்டர்கள் என்பதுதான் அணியின் மிகப்பெரிய பலம். அதிகமான பவர் ஹிட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள், வலுவான டெத் பவுலிங் வீரர்களைக் கொண்டிருப்பது அசுரபலம்.
இந்த முக்கிய வீரர்கள் இருவர் நிலைத்து நின்று ருத்ரதாண்டவம் ஆடினாலே எதிரணி தாங்காது, ஆட்டம் வெற்றியின் பக்கம் திசை திரும்பிவிடும். இந்த முக்கிய வீரர்கள் அனைவருமே மேட்ச் வின்னர்கள் என்பதில் சந்தேகமில்லை. வலிமையான பேட்டிங் வரிசை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
அதிலும் டீகாக், ரோஹித் சர்மா கூட்டணி எந்த எதிரணியின் பந்துவீச்சாளர்களையும் மனச்சோர்வடையச் செய்துவிடுவார்கள். இதில் தொடக்க ஆட்டத்துக்கு கிறிஸ் லின், இஷான் கிஷன் என காட்டடி ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருப்பது கூடுதல் பலம்.
நடுவரிசையில் அணியின் ஸ்கோரை மிகப்பெரிய இலக்கை நோக்கி நகர்த்தும் சூர்யகுமார் யாதவ், பொலார்ட், பாண்டியா பிரதர்ஸ், இஷான் கிஷன் என அசுரத்தனமான நடுவரிசை பேட்டிங் வரிசை இருக்கிறது.
பந்துவீச்சில் ஜஸ்பிரி்த் பும்ரா, டிரன்ட் போல்ட் இருவருமே எந்த எதிரணியின் பேட்டிங்கையும் உலுகக்கக் கூடியவர்கள். இந்த முறை வேகப்பந்துவீச்சுக்கு கூடுதலாக, நாதன் கூல்டர் நீல், ஆடம் மில்னே, மார்கே ஜான்ஸன் வந்துள்ளனர், தவிர பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஸம், யுத்விர் சாரக் என பெரிய படையே இருக்கி்றது. ஆடுகளத்துக்கு ஏற்ப வேகப்பந்துவீச்சு, மிதவேகம் என வீசக்கூடிய வீரர்கள் இருப்பது மிகப்பெரிய பலம்.
இதில் டிரன்ட் போல்ட் வேகத்துக்கு இணையாக நாதன் கூல்டர் நீல், ஆடம் மில்னேவும் வீசக்கூடியவர்கள் என்பதால், அவருக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். ஆனால் பும்ராவுக்கு மாற்றாக இந்திய அளவில் நல்ல வேகப்பந்துவீச்சாளர் இல்லாதத பெரிய குறையாகும், இதனால் பும்ராவுக்கு வேலைப்பளுவும் அதிகரிக்கலாம்.
பலவீனமான சுழற்பந்துவீச்சு
மும்பை அணியின் பெரும்பாலான போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு மட்டுமே ஒத்துழைக்கும் மந்தமான ஆடுகளம். மந்தமான ஆடுகளம் என்பதை குழிப் பிட்ச், செத்துப்போன ஆடுகளம் என்றுதான் கூற முடியும்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின்போது ஆடுகளத்தை கவனித்திருக்கலாம். இதுபோன்ற ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சைத் தவிர வேறு ஏதும் எடுபடாது. ஐபிஎல் தொடருக்காக ஏதாவது மாற்றுவார்களா எனப் பார்க்கலாம்.
மும்பை அணியில் ராகுல் சஹர், பியூஷ் சாவ்லா, குர்னல் பாண்டியா தவிர பெரிதாக எந்த அனுபவ சுழற்பந்துவீச்சாளரும் இல்லை. இதில் ராகுல் சஹர், குர்னல் பாண்டியா இருவரும் ரன்களை வாரிக் கொடுக்கும் பந்துவீச்சாளர்கள். பியூஷ் சாவ்லா ரன்களைக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். சென்னையில் விளையாடும்போது, சுழற்பந்துவீச்சில் நுணுக்கமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை.
ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ், அங்குல் ராய் இருந்தாலும் இருவருக்கும் போதுமான அனுபவம் இல்லை. சென்னையில் விளையாடுவதால், சுழற்பந்துவீச்சை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பதால், அவருக்கு வேலைப்பளுவை ஏற்றாமல் நிதானமாகக் கையாள வேண்டும் அது ரோஹித் சர்மாவிடம்தான் இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் பந்துவீசமாட்டார் என்றே தெரிகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான வீரர்களைக் கொண்டிருந்தாலும், முக்கிய வீரர்களுக்கு மாற்றாக ரிசர்வ் பட்டியலில் எந்த வீரர்களும் இல்லை என்பது பலவீனம். அசுரத்தனமானபேட்டிங், வலிமையான வேகப்பந்துவீச்சு பெரும் பலமாக இருந்தாலும், சென்னையில் நடக்கும் போட்டிகளில் திறமையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாததால் சறுக்கிவிடுமோ என்ற கவலையும் இருக்கிறது.
ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல், எந்த கடினமான சூழலையும் வெற்றியாக மாற்றுவதால்தான் மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாக வலம் வர முடிகிறது.
ஆதலால், ஹாட்ரிக் கோப்பையை வெல்லவும் மும்பைக்கு வாய்ப்புண்டு.
மும்பை இந்தியன்ஸ் அணியை அசைப்பதும் சுலபமல்ல, அடக்குவதும் எளிதானதல்ல...
அணி விவரம்:
ரோஹித் சர்மா(கேப்டன்), ஆடம் மில்னே, ஆதித்யநா தாரே, அன்மோல்ப்ரீத் சிங், அன்குல் ராய் அர்ஜுன் டெண்டுல்கர், கிறிஸ் லின், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜேம்ஸ் நீஷம், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கெய்ரன் பொலார்ட், குர்னல் பாண்டியா, மார்கோ ஜான்ஸன், மோஸின் கான், நாதன் கூல்டர் நீல், பியூஷ் சாவ்லா, குயின்டன் டீ காக், ராகுல் சஹர், சவுரவ் திவாரி, சூர்யகுமார் யாதவ், டிரன்ட் போல்ட், யுத்விர் சிங்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago