ஐபிஎல் 2021 டாப் 5 சர்ச்சைகள்: 'கூல் கேப்டன்' கொந்தளித்தது முதல் 'மன்கட் அவுட்' வரை

By க.போத்திராஜ்

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல்டி20 எந்த அளவு பிரபலமானதாக இருக்கிறதோ, அதுபோல அதில் நடந்த சில சர்ச்சைகளும் ரசிகர்களால் மறக்க முடியாது.

கூல் கேப்டன் என்று பெயரெடுத்த தல தோனி கொந்தளித்த தருணம், அஸ்வினின் மன்கட் அவுட் என 5 முக்கியமான சர்ச்சை சம்பவங்களை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஐபிஎல் தொடர் என்றாலே இந்த 5 சர்ச்சைகளும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது. ஒவ்வொரு சர்ச்சையும் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு, அசை போடப்பட்டு வருகிறது. 14-வது ஐபிஎல் சீசன் வரும் 9-ம் தேதி தொடங்கும் நிலையில், சர்ச்சைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.

ஷாரூக்கானின் சண்டை

2012-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வென்றது.

கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெற்றியைக் கொண்டாட மைதானத்துக்குள் சென்றார். அப்போது, வான்ஹடே மைதானத்தின் காவலர்கள் குழந்தைகளை அனுமதிக்க மறுத்த நிலையில் அதற்கு நடிகர் ஷாரூக்கான் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நடிகர் ஷாரூக்கானுக்கும், மைதான நிர்வாகிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் ஷாரூக்கான் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மும்பை மைதானத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தடை 2015-ம் ஆண்டு நீக்கப்பட்டது.

மறக்க முடியாத மன்கட் அவுட்

2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை, பஞ்சாப் கேப்டன் அஸ்வின் மன்கட் அவுட் செய்தது அந்தத் தொடரில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. அஸ்வின் பந்துவீசும்போது, பட்லர் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியிலிருந்து வெளியேறியதைப் பார்த்து அவரை எச்சரிக்காமல் மன்கட் அவுட் செய்தார்.

கிரிக்கெட் விதிமுறைகள்படி, மன்கட் அவுட் சரியானது என்றாலும் தார்மீக அறத்தின்படி அது கிரிக்கெட் பிரபலங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பட்லரை மன்கட் அவுட் செய்ததால் ராஜஸ்தான் அணி 14 ரன்களில் தோல்வி அடைந்தது. பட்லரை மன்கட் அவுட் செய்யும் முன் அஸ்வின் எச்சரித்திருக்கலாம் என்றெல்லாம் வாதிடப்பட்டது. அஸ்வின் கடுமையாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டே அஸ்வின் செயல்பட்டார் என்று ஒருதரப்பு வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

கேப்டன் கூல் கொந்தளிப்பு

கிரிக்கெட் உலகில் கேப்டன் கூல் என்றாலே அது தோனிதான். ஆனால், தோனியே கொந்தளித்து மைதானத்துக்குள் சென்று நடுவரிடம் வாதிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வியப்பாக மாறியது. 2019-ம் ஆண்டில் சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்துக்கு நடுவர் உலாஸ் காந்தி நோ பால் அளித்தார்.

அதன்பின் ஸ்கொயர் லெக் நடுவர் ப்ரூஸுடன் ஆலோசித்துவிட்டு, அது சரியான பந்து என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த தோனி, களத்திலிருந்து மைதானத்துக்குள் வந்து நடுவரிடம் வாதிட்டார். அதன்பின் கடைசிப் பந்தில் மிட்ஷெல் சான்ட்னர் பவுண்டரி அடிக்க சிஎஸ்கே அணி வென்றது. இந்த ஆட்டத்தில் நடுவரிடம் சென்று வாதிட்டதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் மோதல்

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங்கிற்கும், வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கும் இடையே நடந்த கைகலப்பும் மறக்க முடியாது. தன்னைக் கன்னத்தில் அறைந்துவிட்டார் என ஹர்பஜன் சிங் மீது ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டினார். மைதானத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதும், ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுததும் ரசிகர்கள் அதுவரை பார்த்திராத புதுவிதமாக இருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியிடம் மும்பை அணி தோல்வி அடைந்தது. ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததற்காக ஹர்பஜன் சிங்கிற்கு 11 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

அனுஷ்கா சர்மா, கவாஸ்கர் மோதல்

2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜாம்பவான் சுனிஸ் கவாஸ்கர் வர்ணனையின்போது அனுஷ்கா சர்மா குறித்துப் பேசியது சர்ச்சையானது. கிங்ஸ்லெவன் பஞ்சாப், ஆர்சிபி இடையிலான ஆட்டத்தில் அனுஷ்கா சர்மா குறித்து சர்ச்சையாக சுனில் கவாஸ்கர் பேசினார். லாக்டவுன் காலத்தில் அனுஷ்கா பந்துவீச்சை மட்டும்தான் கோலி சந்தித்துள்ளார் என்று கவாஸ்கர் பேசியது பெரும் விவாதப் பொருளாக மாறியது.

சுனில் கவாஸ்கர் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து அனுஷ்கா சர்மா சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டார். இறுதியில், தான் அவ்வாறு கூறவில்லை, தன்னுடைய கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக கவாஸ்கர் விளக்கம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்