ஆட்டம்னா இப்படி இருக்கணும்…கிரிக்கெட் உலகின் இரு மிகப்பெரிய அணிகள் மோதிய ஆட்டம் என்பதை நிரூபித்துவிட்டன. வந்தோம், பேட் செய்தோம், ஆட்டமிழந்தோம் என்று இ்ல்லாமல் வெற்றிக்காக கடைசிவரை போராடிய சாம் கரன், நாங்களும் வெற்றியை உங்களுக்கு தரமாட்டோம் என்று இந்திய் அணியின் விடாமுயற்சி என ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைக்கும் போட்டியாக அமைந்திருந்தது.
புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாக்கூரின் விக்கெட் வீழ்த்தும் திறமை, நடராஜனின் துல்லியமான கடைசி ஓவர், பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு ஆகியவற்றால் புனேயில் பகலிரவாக நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை ைகப்பற்றியது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 330 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வென்று கோப்பையை வென்றது இந்திய அணி. ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-3 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்றிருந்தது. இந்நிலையில் அனைத்துப்பிரிவுகளிலும் வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.
7-வது தொடர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து 6-வது ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றுகிறது.இதுவரை இந்தியாவில் 10 ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து அணி விளையாடியுள்ளது, அதில் இந்திய அணி 7-வது தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணி கடைசியாக 1985ம் ஆண்டு ஒருநாள் தொடரை இந்தியாவில் வென்றது அதன்பின் வெல்லவில்லை, இந்த முறை 40 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பொய்த்துப் போனது.
விடாமுயற்சி
அனுபவப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி இல்லாமல் புவனேஷ்வருடன் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு தொடரை இந்திய அணி வென்றுள்ளது பாராட்டுக்குரியது. அதிலும் பேட்ஸ்மேன்களுக்கு சொர்்க்கபுரியான புனே ஆடுகளத்தில் சேஸிங் செய்யவிடாமல் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து இங்கிலாந்தை வெல்வது இந்திய அணியின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்றபோது, தமிழக வீரர் நடராஜன் வீசிய துல்லியமான யார்கர், லைன் லென்த் பந்துவீச்சு வெற்றிக்கு முக்கியமான துருப்புச்சீட்டாக இருந்தது.
சாம்கரன் சூப்பர் ஃபார்மில் இருந்த நேரத்தில் நடராஜன் தவறாக ஒரு பந்துவீசியிருந்தாலும் ஆட்டம் திசைமாறியிருக்கும், நடராஜன் மீண்டும் “டெத் பவுலர்” என்பதை நிரூபித்துவிட்டார்.
நாயகன் சாம் கரன்
இங்கிலாந்து அணி தோல்வியின் பிடியில் சிக்கியநேரத்தில் அணியின் சுமையை தோளில் சுமந்து கடைசிவரை இழுத்துவந்து ரசிகர்களுக்கு அருமையான ஆட்டத்தைப் பரிசளித்த இங்கிலாந்து வீரர் சாம் கரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
8-வது வீரராக களமிறங்கிய சாம்கரன் 83 பந்துகளி்ல் 95 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணிக்கு எதிராகவும், ஒருநாள் போட்டியிலும் சாம் கரன் அடித்த முதல்அரைசதம் மற்றும் அதிகபட்சம்இதுவாகும்.
சாம் கரனின் பேட்டிங் பற்றி இங்கிலாந்து அணிக்குத் தெரிந்திருந்தும் அவரை 8-வது வீரராக களமிறக்கி வந்தனர். அடுத்துவரும் போட்டிகளி்ல் அவரின் நிலை மாறும். ஐபிஎல் தொடரி்ல் சிஎஸ்கே அணியில் சாம் கரன் விளையாடியவிதத்தை இந்திய அணியில் பல வீரர்களும் பார்த்திருப்பதால், அவரின் பேட்டிங்கை நன்கு உணர்திருந்திருப்பாார்கள்
தோனியிடம் கற்ற பாடமா !
தோல்வியின் பிடியில்இருந்த அணியை வெற்றியின் நுனிவரை இழுத்துவந்த சாம் கரனின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது.
சிஎஸ்கே அணியில் இருந்ததால் என்னவோ “தல தோனியிடம்” கற்றுக்கொண்ட பாடம் சாம் கரனுக்கு கடைசி நேரத்தில் உதவியுள்ளது, இறுதிவரை போராடு, வெற்றி கிடைக்கும் வரை போராடு என்று தோனியின் விடாமுயற்சியை சாம் கரன் களத்தில் நிரூபித்துவிட்டாரா!.
இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய சாம் கரனின் அதிகபட்சமே 15 ரன்கள்தான். ஆனால், சாம் கரனின் ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருந்தது. இந்திய அணியின் கைகளில் இருந்து ஏறக்குறைய வெற்றியை பறிக்க முயன்றார் என்றே சொல்லலாம். சாம் கரனு ஈடுகொடுத்து ஆட ஒரு தரமான பேட்ஸ்மேன் மட்டும் இருந்திருந்தால் வெற்றி இங்கிலாந்துடையது என்பதை மறுக்க முடியாது.
தொடர்நாயகன்
தொடர்நாயகன் விருது இங்கிலாந்து அணி வீரர் பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. முதல் ஆட்டத்தில் 96, 2-வது ஆட்டத்தில் சதம் என அடித்து நொறுக்கிய பேர்ஸ்டோவுக்கு தொடர்நாயகன் விருது அளிக்கப்பட்டது.
ஒருநாட்டுக்கு இங்கிலாந்து அணி பயணம் செய்து 2-வது அதிகமான தோல்விகளை இந்தியாவில் சந்தித்துள்ளது. டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என மொத்தம் 8 தோல்விகளைச் சந்தித்து. இதற்கு முன் ஆஸ்திேரலியாவிடம் 2013-14ல் ஆஷஸ் தொடரில் 12 தோல்விகளை அடைந்திருந்தது.
இந்திய அணியைப் பொருத்தவரை புனே ஆடுகளத்தில் 329 ரன்கள்அடித்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்து விளையாடுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.
பீல்டிங் மோசம்
ஆனால் புவனேஷ்வர் குமார் தொடக்கத்திலேயே ஜேஸன்ராய், பேர்ஸ்டோ இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய நம்மதி அளித்தார். அதன்பின் நடுப்பகுதியில் ஷர்துல் தாக்கூர் சீரான இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் பக்கம் திருப்பிவிட்டார்.
மொயின் அலி ஆட்டமிழந்தபோதே ஆட்டத்தை இந்திய அணி முடித்திருக்க வேண்டும். ஆனால், அதில் ரஷித், மார்க் உட் ஆகியோருடன் சாம் கரன் நேர்தியாக அமைத்த வலுவான பாட்னர்ஷிப் ஆட்டத்தை கடைசி வரை இழுத்துவந்துவிட்டது.
இந்திய அணியின் பீல்டிங் இந்தப் போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. ஹர்திக் பாண்டியா இரு கேட்சுகளை கோட்டைவிட்டதுதான் ஆட்டத்தை இந்த அளவு பரபரப்புக்கு கொண்டுவந்தது. சாம் கரன் 22 ரன்கள் இருந்தபோதே கேட்ச் பிடித்திருந்தால், ஆட்டம் “புஸ்ஸாகி” இருந்திருக்கும்.
இதில் ஷர்துல் தாக்கூர், நடராஜன் என இருவரும் தங்கள் பங்கிற்கு கேட்சை கோட்டை விட்டனர். ஆனால் கேப்டன் கோலி அதில் ரஷித்துக்கு டைவ் செய்து பிடித்த கேட்ச் அற்புதமானது. கடந்த 6 ஒருநாள் போட்டிகளில் 3க்கும் அதிமான கேட்சுகளை இந்திய அணிகோட்டைவிடுவது இது 3-வது முறையாகும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பொறுப்பான பேட்டிங்
கடந்த இரு போட்டிகளைவிட ஷிகர் தவண், ரோஹித் சர்மா நல்ல அடித்தளத்தை இந்தப் போட்டியில் அமைத்துக்கொடுத்தனர். கோலி, ராகுல் ஆட்டமிழந்தநிலையில், சற்று அணி தடுமாறியபோது, ரிஷப்பந்த், ஹர்திக் கூட்டணி நல்லஸ்கோரை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர்.
நடராஜன் அருமை
பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தான் அனுபவசாலி என்பதை நிரூபித்து இந்தத் தொடரில் புகழப்படாத ஹீரோவாகிவிட்டார். ஷர்துல் தாக்கூர் ரன்களை இந்தத் தொடரில் வாரி வழங்கினாலும் அதிகமான விக்கெட் வீழ்த்தியவர் வரிசையில் உள்ளார்.
குல்தீப் யாதவுக்கு பதிலாக இடம் பெற்ற நடராஜன் தனது திறமையை நிரூபித்து வருகிறார். நடராஜன் வந்தாலே வெற்றிதான் எனும் “சென்டிமெண்ட் ஒர்க்அவுட்” ஆகிறது. டி20 போட்டியில் கடைசி ஆட்டத்திலும், ஒருநாள் தொடரில் கடைசி ஆட்டத்திலும் களமிறங்கி தனது பணியை நடராஜன் சிறப்பாகச் செய்தார்.
அதிலும் நடராஜன் வீசிய கடைசி ஓவர் துல்லியமானது, வெற்றியை உறுதி செய்த ஓவராக அமைந்தது. உள்நாட்டில் முதன்முதலாக ஒருநாள் போட்டியி்ல் களமிறங்கிய நடராஜனுக்கு அறிமுகம் அமர்க்களமாக இருந்துள்ளது.
விக்கெட் சரிவு
329 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. புவனேஷ்வர் பந்துவீச்சில் ராய் 14 ரன்னில் போல்டாகினார், பேர்ஸ்டோ ஒரு ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
கடந்த போட்டியி்ல் பட்டைய களப்பிய ஸ்டோக்ஸ் 35 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் தவணிடம் விக்கெட்டை இழந்தார். கேப்டன் பட்லர்(15) ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் கால்காப்பில் வெளியேறினார். லிவிங்ஸ்டோன் 35 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணிக்கு இணையாக பயணித்தாலும் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது பலவீனம். பொறுமையாக ஆடிய மலான் 50 ரன்னில் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மொயின் அலி 29 ரன்னில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். 200 ரன்களுக்கு 7-வது விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது.
சவால் சாம் கரன்
ஆனால், 8-வது விக்கெட்டுக்கு சாம்கரன், அதில் ரஷித் கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். இருவரும் 57 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். ரஷித் 29 ரன்னில் தாக்கூர் பந்தவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த மார் உட்டுன் சாம்கரன் கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்கு நகர்த்தினார். இருவரும் சேர்ந்து 9-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தார்.
த்ரில் கடைசி ஓவர்
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை நடராஜன் வீசினார். 49.1 ஓவரில் மார்க்உட் 14 ரன்னில் ரன்அவுட் ஆனதுதான் திருப்பமாக அமைந்தது. நடராஜனின் துல்லியமான பந்துவீச்சில் பவுண்டரி மட்டுமே சாம் கரனால் அடிக்கமுடிந்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. சாம் கரன் 95 ரன்களிலும், டாப்ளே ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தவண்(67) ரிஷப்பந்த்(78), ஹர்திக் பாண்டியா(64) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களான ரோஹி்த் சர்மா(37), கோலி(7), ராகுல்(7), குர்னல்(25) ரன்கள் சேர்த்தனர். 48.2 ஓவர்களில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பி்ல மார்க்உட் 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago