டி20, மற்றும் ஒருநாள் தொடர்களில் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி சரியாக ஆடாமல் தோல்வியடைந்த பிறகு நாளை மொஹாலியில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது.
நீண்ட அயல் நாட்டு தொடர்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை இந்த புதிய இளம் அணி எதிர்கொள்வது சவாலான ஒன்றே. மேலும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்த பிறகு முதன் முறையாக இந்தியாவுக்கு வருகிறது, எனவே அவர்கள் கவனம் நிச்சயம் அந்த ஆகிருதியை இழந்து விடக்கூடாது என்பதில் இருக்கும்.
கடைசியாக வலுவான அணியான ஆஸ்திரேலியாவை அஸ்வின், ஜடேஜா கூட்டணி சிதைத்து அனுப்பியது, இந்தியா 4-0 என்று வெற்றி பெற்றது. நிச்சயம் அத்தகைய ஒரு முடிவு தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறிவிடலாம். காரணம், இந்தியாவில் அவர்களது ஆட்டம் மோசமாக இருந்ததில்லை. மாறாக கடும் சவாலாக அமைந்ததையே நாம் பார்த்திருக்கிறோம்.
மேலும், துணைக் கண்டங்களில் தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் ஆட்டங்களும் அந்த அணிக்கு வலு சேர்க்கின்றன. மொத்தமாக இது வரை 29 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 12 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் நடைபெற்ற 12 டெஸ்ட் போட்டிகளில் 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. 1999-2000 தொடரில் சச்சின் கேப்டன்சியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா 2-0 என்று வீழ்த்தியது. முன்னதாக 1996/97 தொடரில் இந்தியா இங்கு 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.
கடைசியாக 2004-05-ல் இந்தியா இங்கு, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று வெற்றி பெற்றது. அதன் பிறகு 2007/08, 2009/10 டெஸ்ட் தொடர்கள் 1-1 என்று டிரா ஆகியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்கா இங்கு தொடரை 2004-05க்குப் பிறகு இழக்கவில்லை.
வலுவான தென் ஆப்பிரிக்காவின் டாப் 4
தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் மட்டையாளர்கள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் 45.72 என்று சராசரி வைத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பயணம் செய்த அணிகளில் தென் ஆப்பிரிக்க அணியே இந்த விதத்தில் டாப் அணியாகும்.
மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் டாப் 4 பேட்ஸ்மென்களின் சராசரி 12 டெஸ்ட் போட்டிகளில் 52.81 ஆகும். மேலும் 26 முறை அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் அரைசதம் எடுத்த போதும் 14 முறை அது சதமாக மாறியுள்ளது.
மேலும் இந்தியாவில் 150 ரன்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் 17 முறை அயல் வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில் 6 முறை தென் ஆப்பிரிக்க முன் வரிசை வீரர்கள் 150 ரன்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் எடுத்துள்ளனர். இந்த 17 பெரிய இன்னிங்ஸ்களில் 2001-ம் ஆண்டு மேத்யூ ஹெய்டன் 203 ரன்கள் எடுத்தார். 2012-ல் அலிஸ்டர் குக் 176 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அந்த அணிகளுக்கு தோல்வி ஏற்படுத்திய ஒன்று.
மேலும் டிவில்லியர்ஸ் என்ற ஒரு அச்சுறுத்தலும் இம்முறை சேர்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் இந்திய பிட்சின் வெற்றிக்கு அவர்களது முன்வரிசை பேட்ஸ்மென்களின் பெரும் பங்களிப்பே காரணம். ஆனாலும் இம்முறை ஆம்லா, டுபிளேஸிஸ், டிவில்லியர்ஸ் நீங்கலாக அந்த அணியின் டாப் ஆர்டர் வலுவாகத் தெரியவில்லை. அதே போல் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சும் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகள் என்பது ஒரு சாதனைதான். ஆசிய பிட்ச்களில் டேல் ஸ்டெய்ன் 19 போட்டிகளில் 90 விக்கெட்டுகளை சாய்த்திருப்பதும் இந்தியாவுக்கு சவால் அளிக்கக் கூடிய புள்ளி விவரங்கள் ஆகும். அதாவது கார்ட்னி வால்ஷ், கிளென் மெக்ராவை காட்டிலும் ஆசிய சிங்கமாகத் திகழ்கிறார் டேல் ஸ்டெய்ன்.
எனவே இந்திய அணியின் உத்தி தென் ஆப்பிரிக்காவின் முன்வரிசை வீரர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்புவதும், டேல் ஸ்டெய்னை ஒன்று அடித்து நொறுக்கவேண்டும் அல்லது அவரது ஓவர்களை எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். இதில் அஸ்வினின் பங்கு மிக முக்கியமானது.
இந்தியாவுக்கு ஒரே ஆறுதல் இந்தத் தொடரில் அவர்களின் பிரதான பேட்ஸ்மென் ஹஷிம் ஆம்லா ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதே. இதனால் அவர் நிச்சயம் நெருக்கடியில் இருந்தாலும் இதுவே இந்தியாவுக்கு பெரிய தலைவலியாகக் கூட மாற வாய்ப்புள்ளது.
இந்திய அணிச் சேர்க்கைப் பிரச்சினை:
முரளி விஜய், ஷிகர் தவண், ரஹானே, கோலி, சஹா, அஸ்வின், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் ஆகிய 8 வீரர்கள் உத்தரவாதமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ரோஹித் சர்மாவா அல்லது புஜாராவா என்பது பற்றி உறுதியாகக் கூற முடியவில்லை, ஆனால் புஜாராவுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ஏனெனில் இலங்கையில் ரோஹித் சர்மா சொதப்ப புஜாரா அருமையான ஒரு சதம் கண்டார்.
எனவே அணி இவ்வாறு அமையலாம்: விஜய், தவண், ரஹானே, கோலி, புஜாரா, சஹா, அஸ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோர் இடம்பெறலாம். அல்லது வருண் ஆரோனுக்குப் பதிலாக புவனேஷ் குமாருக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம். இதில் கோலியின் தெரிவு என்னவென்பதை ஊகிப்பது கடினம்.
ஆனால், 5 பந்து வீச்சாளர்கள் என்பது தெளிவு. ஏனெனில் கோலியும் அவ்வாறுதான் பேசியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியில் நிச்சயம் மோர்கெல், ஸ்டெய்ன், பிலாண்டர், இம்ரான் தாஹிர் என்று இருக்கலாம். மோர்னி மோர்கெல் உடற்தகுதி விவகாரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விக்கெட் கீப்பர் டேன் விலாஸ் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டுமினிக்குப் பதிலாக தெம்பா பவுமா இறக்கப்படலாம்.
பிட்ச் நிலவரம்:
மும்பை பிட்ச் சர்ச்சைக்குப் பிறகு நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு ஆதரவான மெதுவான திரும்பும் களமே அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மொஹாலி பிட்ச் மரபு எப்போதும் வேகப்பந்து வீச்சுக்கு முதல் ஒன்றரை நாட்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த முறை எப்படி என்ற் அறுதியிட முடியவில்லை. நிச்சயம் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துக்கு சாதகமாக அமையாது என்று மட்டுமே கூற முடியும்.
ஆனாலும் இந்திய அணியின் தற்போதைய பேட்ஸ்மென்கள் ஸ்பின்னை விட வேகப்பந்தை நன்றாக எதிர்கொள்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
புள்ளி விவரங்கள்:
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா ஒரேயொரு உள்நாட்டு டெஸ்ட் தொடரையே இழந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 2012-ல் இழந்தது. நவம்பர் 2004 முதல் 2015 வரை இந்தியா 17 டெஸ்ட் தொடர்களை இந்தியாவில் விளையாடியுள்ளது. இதில் 12-ல் வெற்றி, 5 டிரா. கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்ட் தொடர் நடைபெறவில்லை.
தென் ஆப்பிரிக்கா 9 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை தோற்கவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago