ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் புனேவில் நடந்துவரும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 330 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் ஷிகர் தவண் (67), ரிஷப் பந்த் (78), ஹர்திக் பாண்டியா (64) ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், குர்னல் பாண்டியா ஆகியோர் சொதப்பினர்.
5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், ஹர்திக் கூட்டணி நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால், இந்திய அணியின் நிலைமை பரிதாபம்தான்.
கடந்த 2-வது ஆட்டத்தில் 336 ரன்களை 39 பந்துகள் மீதமிருக்கும்போதே சேஸிங் செய்தது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் 330 ரன்கள் இலக்கு என்பது இங்கிலாந்து அணியின் காட்டடிக்குக் கடிவாளம் போடுமா என்பது சந்தேகம்தான்.
இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே 6 ரன் ரேட் வீதம் கொண்டுசென்றது ஆறுதல் அளித்தாலும் கோலி, ராகுல், ரோஹித் சர்மா விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தது ஆட்டத்துக்குப் பின்னடைவாகும். 370 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய ஆடுகளத்தில் 329 ரன்கள் நம்மைப் பாதுகாக்கும் ஸ்கோராக இருக்குமா என்பது நிச்சயம் சந்தேகம்தான். இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து சில விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் இந்திய அணிக்கு வெற்றி பிரகாசமாகும். இல்லாவிட்டால் தொடர் இந்திய அணிக்கு இல்லை.
இந்தப் போட்டியில் 10 பந்துகள் மீதமிருக்கும்போதே இந்திய அணி ஆட்டமிழந்தது வேதனையாகும். இன்னும் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்திருந்தால், ஓரளவுக்கு இங்கிலாந்து அணிக்குச் சவாலாக இருந்திருக்கும்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தாலும் ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 103 ரன்கள் சேர்த்தனர்.
ஷிகர் தவணுக்கு அதிரடியாக ஆடும் வாய்ப்பைக் கொடுத்து ரோஹித் சர்மா நிதானமாகப் பேட் செய்தார். தவண் 44 பந்துகளில் அரை சதம் அடித்தார். பவர் ப்ளேவில் இந்திய அணி 65 ரன்கள் குவித்தது.
ஆனால், ரோஹித் சர்மா 37 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். தவண் நிதானமாக பேட் செய்த நிலையில், 67 ரன்களில் ரஷித்திடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் கோலி 7 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டானார்.
103 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இந்திய அணி அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஜோடி சரிவிலிருந்து அணியை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராகுல் 7 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சேர்ந்து 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். ரிஷப் பந்த் 44 பந்துகளிலும், ஹர்திக் பாண்டியா 36 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர்.
ரிஷப் பந்த் 78 ரன்களில் சாம் கரன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். ஹர்திக் பாண்டியவுடன், குர்னல் பாண்டியா சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரமே நிலைத்திருந்தது. ஹர்திக் பாண்டியா 64 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
அதன்பின் குர்னல் பாண்டியாவுடன், ஷர்துல் தாக்கூர் சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. தாக்கூர் 3 சிக்ஸர்கள் உள்பட 30 ரன்களில் மார்க் உட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் குர்னல் பாண்டியா (25) ரன்களில் உட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பிரசித் கிருஷ்ணா (3), புவனேஷ் குமார் (3) வரிசையாக ஆட்டமிழந்தனர். இந்திய அணி கடைசி 29 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
48.2 ஓவர்களில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் 3 விக்கெட்டுகளையும், ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago