ஒருநாள் தொடர் யாருக்கு? மிரட்டல் பேட்டிங்குடன் திகழும் இங்கிலாந்துடன் இந்திய அணி நாளை பலப்பரீட்சை: நடராஜன், சுந்தர், சஹலுக்கு வாய்ப்பு

By பிடிஐ

புனேவில் நாளை பகலிரவாக நடக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது போட்டி நாளை நடக்கிறது.

ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்துவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்லக் கடுமையாக உழைக்கும். அதே நேரத்தில் இந்திய அணி தொடரை இழந்தால், தொடர்ந்து 2-வது தொடரை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை முதலில் இந்திய அணி இழந்திருந்தது.

புனே ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி. கடந்த இரு போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் விளாசப்பட்டது. அதிலும் கடந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 650 ரன்களுக்கு மேல் விளாசினர்.

முதல் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு வாய்ப்பிருந்த நிலையில், விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றி வாய்ப்பைக் கோட்டைவிட்டது. ஆனால், 2-வது போட்டியில் விக்கெட்டை இழக்காமல் விளையாடியதால், 336 ரன்களையும் 39 பந்துகள் மீதம் இருக்கும்போதே சேஸிங் செய்தது. ஆதலால், பந்துவீச்சாளர்களை நம்பிக் களமிறங்குவதைவிட பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

புனே ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்காத ஆடுகளம், அதே நேரம், அதிகமான வேகமும் இந்த ஆடுகளத்தில் எடுக்காது. அதனால்தான் குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா இருவரின் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் நொறுக்கி அள்ளினர்.

வேகப்பந்துவீச்சில் மார்க் உட், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் 145 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக வீசுவதால், பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட ஏதுவாக இருந்தது. ஆதலால், இருவரின் தேர்வும் அணியில் ஆய்வுக்குள்ளாகும்.

ஆதலால், கடைசிப் போட்டியில் வீரர்கள் தேர்வில் இரு அணிகளும் கவனத்துடன் இருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா அமரவைக்கப்பட்டு சஹல், வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.

வேகப்பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் விக்கெட் வீழ்த்தும் திறமையுள்ளவர். ரன்களை சில நேரங்களில் வாரிக் கொடுத்தாலும் முக்கியமான தருணங்களில் விக்கெட்டை வீழ்த்திவிடுவார். ஆனால், துல்லியமான யார்க்கர்களை வீசுவதற்கும், அணியில் இடதுகை பந்துவீச்சாளர் அவசியம் என்பதாலும், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாகத் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஷிகர் தவணுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ரோஹித் சர்மா, தவண் இருவருமே தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் இங்கிலாந்து திட்டமிடலை உடைத்தெறிய முடியும். வழக்கம்போல் விக்கெட்டை நிலைப்படுத்துமாறு தவண், ரோஹித் விளையாடினால், ஸ்கோர் உயர வாய்ப்பில்லை.

கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் இருவரின் அதிரடி ஆட்டத்தால் நாளை இருவருமே அணியில் தொடர வாய்ப்புள்ளது.

நாளை ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தால், குறைந்தபட்சம் 350 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் அது பாதுகாப்பானதாக இருக்கும். இல்லாவிட்டால், இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்பது கடினமாகும்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங் வரிசைதான் மிகப்பெரிய பலமாகும். பேட்டிங் வரிசையில் பெரிதாக எந்த மாற்றமும் இங்கிலாந்து அணியில் இருக்காது. சேஸிங்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டுமானால், விக்கெட்டுகளை வீழ்த்துவதைத் தவிர இந்திய அணிக்கு வழியில்லை. விக்கெட் வீழ்த்தாமல் பந்துவீச்சில் கட்டுப்படுத்திவிடுவோம் என கோலி நினைத்தால் அது முடியாது.

ஆடுகளம் தட்டையானது, கடினமானது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு நன்கு ஒத்துழைக்கும், சேஸிங் செய்யும் அணிக்கு மிக மிக நன்கு ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால், லைன் லென்த் தவறி சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால், பந்தை பவுண்டரி, சிக்ஸரில்தான் பார்க்க முடியும்.


இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசும்போது, இங்கிலாந்து அணியில் அதில் ரஷித், மொயின் அலி சிறப்பாகப் பந்துவீசினர். இதற்குக் காரணம் இருவரும் வேகத்தைக் குறைத்து, பந்தை நன்றாக டாஸ் செய்தனர். ஆனால், இந்திய வீரர்கள் இருவருமே அதைச் செய்யவில்லை. ஆதலால், நாளைய ஆட்டத்தில் ரஷித், மொயின் அலி இருவருமே தொடர்வார்கள்.

மார்க் உட் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டால், டாப்ளேவுக்கு பதிலாகக் களமிறங்கக்கூடும். நாளைய ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான ஆட்டமாக இருக்கப் போவதில்லை. பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாகவே இருக்கப் போகிறது. இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் 2 மாதத் தொடர் முடிவதால், வெற்றியுடன் செல்லவே முயலும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்