பிரமாதம்…டி20 தொடரை வென்றது கோலி படை; ‘நம்பர் ஒன்’ இங்கிலாந்தை சாய்த்தது இந்திய அணி: புவனேஷ் கலக்கல்; கோலி, ரோஹித் சர்மா மிரட்டல் 

By க.போத்திராஜ்


‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா, ‘சேஸிங் ஹீரோ’ விராட் ஆகியோரின் மிரட்டலான பேட்டிங்கிங், புவனேஷ்வர், தாக்கூரின் பந்துவீச்சு ஆகியவற்றால் அகமபாதாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 6-வது டி20 தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
லாஜிக் பொய்யானது

டாஸ் வென்ற அணி எப்போதுமே வெற்றி பெறாது, முதலில் பேட் செய்த அணி எப்போதுமே தோற்காது என்று இந்திய அணி நிரூபித்துவிட்டது.

தொடர் நாயகன் வென்ற கோலிக்கு கார் பரிசு

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை வென்றது. இந்தத் தொடரின் ஒரு கட்டத்தில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி மோசமாகப் பின்தங்கி, கோப்பையை இழந்துவிடுமா என்று அஞ்சப்பட்டது. ஆனால், அதன்பின் மிகச்சிறப்பாக மீண்டுவந்துள்ளது இளைஞர்களைக் கொண்ட கோலிப்படை.
ஆட்டநாயகன், தொடர்நாயகன்

4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 17 டாட் பந்துகளுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தத் தொடரில் 231 ரன்கல் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருது பெற்றார்.

தமிழக வீரர் நடராஜன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை சாய்த்து இந்திய மண்ணில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தது மகிழ்ச்சியான தருணம்.

இளைஞர்கள் அடையாளம்

இந்த கோப்பை இளைஞர்களின் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் என அருமையான இரு பேட்ஸ்மேன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இரு தமிழக வீரர்கள் முத்திரை பதித்துள்ளார்கள்.

உலகக் கோப்பை டி20 போட்டிக்கு அணியைத் தேர்வு செய்வதில் மிகவும் தர்மசங்கடமான சூழலுக்கு இந்திய அணியின் தேர்வாளர்கள் உருவாகியுள்ளார்கள். திறமையான பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பர்கள் என கூட்டமே இருக்கிறார்கள்

கோலியின் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஃபார்மிலே இல்லை, டி20 போட்டியிலும் போட்டிலும் சிலபோட்டிகளில் சொதப்பினார் என்று ஃபார்ம் குறித்து விமர்சித்தவர்களுக்கு கோலி தொடர்நாயகன் விருது வென்று தனது பேட்டால் பதில் அளித்துள்ளார்.

வெற்றிக்குக் காரணம்

இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் காரணம். கேப்டனும், துணைக் கேப்டனும் கடந்த 6 ஆண்டுகளுக்குப்பின் தொடக்க வரிசையில் களமிறங்கி இங்கிலாந்து பந்தை துவம்சம் செய்தனர்.

இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி, ரோஹித் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர் அதன்பின் நேற்றைய ஆட்டத்தில் இருவரும் களமிறங்கினர். இருவரின் அதிரடியான ஆட்டம், சூர்யகுமார், ஹர்திக் இருவரின் காட்டடியால் 224 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோர் இந்திய அணியால் குவிக்க முடிந்தது.

இ்ந்தியாவில் இந்திய அணி டி20 போட்டியில் சேர்த்த 3-வது அதிகபட்ச ஸ்கோராகும், ஒட்டுமொத்தத்தில் 4-வது பெரிய ஸ்கோராக அமைந்தது.

மிரட்டலான ஷாட்கள், நான்கு திசைகளிலும் பறந்த பந்துகள் என ரோஹித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ‘ஹிட் மேன்’ என நிரூபித்துச் சென்றார். தனது இடத்தை சூர்யகுமார் யாதவுக்கு வழங்கி துணிச்சலாக தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டம் முடியும் வரையில் கேப்டன் கோலி 80 ரன்களுடன்(52பந்துகள் 2 சிக்ஸர்,7பவுண்டரி) களத்தில் இருந்து பொறுப்பான கேப்டன் என நிரூபித்தார்.

புவனேஷ் அருமை
பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள்வீசி 17 டாட்பந்துகளுடன் 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். பட்லர், மலான் கூட்டணியை உடைக்க முடியாமல் திணறியபோது புவனேஷ்குமார் பட்டலர் விக்கெட்டை வீழ்த்தியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மலான், பட்லர் களத்தில் நின்றிருந்தால் கதை வேறுமாதிரி சென்றிருக்கும்.

இந்த திருப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து நெருக்கடி அளித்து இங்கிலாந்து பேட்டிங் வரிசையைக் குலைத்தனர். குறிப்பாக ஷர்துல் தாக்கூர் ரன்களை வாரி வழங்கினாலும், இதுபோன்ற நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை எளிதாக்குகிறார். இதனால்தான் ‘சிஎஸ்கே’ அணியில் தாக்கூரை விடாமல் ‘தோனி’ வைத்திருக்கிறார்.

ஹர்திக் பொறுப்பு
ஹர்திக் பாண்டியாவைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஹர்திக் பாண்டியாவுக்கு கூடுதல் பொறுப்பாக தொடக்க ஓவர் வீச கோலி வாய்ப்பு அளித்ததில் இருந்து கடந்த 3 போட்டிகளிலும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். இந்தப் போட்டியில் தொடக்கத்தில் ரன்களை கொடுத்தாலும், அதன்பின் கட்டுக்கோப்பாக வீசினார்.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி வெற்றிக்குத் தகுதியானது என நிரூபித்துள்ளது.

பட்லர்,மலான் உழைப்பு வீண்
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை 224 ரன்கள் எனும் இலக்கு அந்த அணிக்கு மனரீதியாக மிரட்சியை ஏற்படுத்தியது. அதிலும் ராய் தொடக்கத்தில் ஆட்டமிழந்தபின் சற்று தயங்கினாலும், பட்லர், மலான் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தத் தவறவிட்டனர்.

பவர்ப்ளேயில் 60 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியின் ரன்ரேட்டோடு நெருங்கியே பயணித்தனர். 130 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இங்கிலாந்து அடுத்த 58 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பட்லர், மலானுக்குப்பின் எந்த வீரர்களும் பாட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்குக் காரணம்.

சாம் கரனை வீணடித்தனர்
இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் இருவரைத் தவிர வேறு எந்தப் பந்துவீச்சாளர்களும் சரியாகப் பந்துவீசவில்லை. பந்துவீச்சில் கோட்டை விட்டது, ரோஹித் சர்மா, கோலிக்கு கேட்சை கோட்டைவிட்டது தோல்விக்கு முக்கியக் காரணம். கேட்ச்சை நழுவவிடுதல், போட்டியை நழுவவிடுதல் எனச் சொல்வார்கள் அதுதான் நடந்தது. அதேநேரத்தில் ஜோர்டான் பவுன்டரி லைனில் எடுத்த கேட்ச் அற்புதமானது. சாம்கரன் திறமையான ஆல்ரவுண்டர் அவரை முன்வரிசையில் இறக்காமல் வீணடித்துவிட்டார்கள். சிறப்பாக ஆடிய நம்பர் ஒன் அணி கடைசியில் கோட்டைவிட்டுவிட்டது.

கடினமான இலக்கு
225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே ஜேஸன் ராய் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

வலுவான பாட்னர்ஷிப்

2-வது விக்கெட்டுக்கு பட்லர், மலான் சேர்ந்து இந்தியப் பந்துவீச்சை பொளந்து கட்டினர். யார் பந்துவீசினாலும் சிக்ஸர், பவுண்டரி என பறந்தது, இருவரும் இங்கிலாந்து அணியை மெல்ல வெற்றிக்கு நகர்த்தினர். இரு வீரர்களையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்களும், கேப்டன் கோலியும் திணறினர்.பட்லர் 30 பந்துகளிலும், மலான் 33 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரும் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் வெற்றி தூரத்தில்தான் இருந்தது.

திருப்பம்
புவனேஷ்வர் குமார் வீசிய 13-வது ஓவரில் பட்லர் 52 ரன்னில் பாண்டியாவிடம் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 130 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் விக்கெட்டுகள் மளமளவெனசரிந்தன.

தாக்கூர் வீசிய 15-வது ஓவரில் டேவிட் மலான் 68 ரன்னில் போல்டாகி வெளியேறினார், அதே ஓவரில் பேர்ஸ்டோ(7) ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மோர்கன்(1), ஸ்டோக்ஸ்(14), ஜோர்டன்(11), ஆர்ச்சர்(1) என அடுத்தடுத்து விரைவாக ஆட்டமிழந்தனர். 130 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 58 ரன்களைச் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

சாம் கரன் 14 ரன்களுடனும், ரஷித் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
இந்தியத் தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நடராஜனுக்கு வாய்ப்பு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்தவு செய்தார். இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து கேப்டன் கோலி ஆட்டத்தைத் தொடங்கினார்

அதிரடித் தொடக்கம்

அதில் ரஷித் வீசிய முதல் ஓவரில் இருவரும் பொறுமை காத்தனர். ஆர்ச்சர் வீசிய 2-வது ஓவரில் கோலி, ரோஹித் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். 3-வது ஓவரிலிருந்து ரோஹித் சர்மாஅதிரடியை வெளிப்படுத்தி ரஷித், மார்கஉட் ஓவரில் சிக்ஸர்,பவுண்டரி என வெளுத்து கட்டினார்.

மார்க் வீசிய 6-வது ஓவரில் ரோஹித், கோலி இருவரும் தலா ஒரு சிக்ஸரை விளாசி வானவேடிக்கை காட்டினர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் பவர்ப்ளேயில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஹிட்மேன் அரைசதம்

அதன்பின் ஹிட்மேன் வழக்கம்போல் சிக்ஸர்,பவுண்டரிகளாக விளாசி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஸ்டோக்ஸ் வீசிய 9 வது ஓவரில் ரோஹித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தநிலையில் போல்டாகினார். இதில் 5 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். முதல்விக்கெட்டுக்கு இருவரும் 94 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

காட்டடி சூர்யா
அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். ரஷித் வீசிய 10-வது ஓவரில் வந்த வேகத்தில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை சூர்யகுமார் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். 9.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்திய அணி.

பிரமாதமான கேட்ச்

ஜோர்டன் வீசிய 12-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். ரஷித் வீசிய 14-வது ஓவரில் சூர்யகுமார் அடித்த பந்தை ஜோர்டன் பவுண்டரி லைனில் அருமையாகக் கேட்ச்பிடித்து, எல்லை தாண்டி செல்லும் முன் அருகே நின்றிருந்த டாவிட் மலானிடம் தூக்கிவீசினார். சூர்யகுமார் 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து துரதிர்ஷ்டமாக ஆட்டமிழந்தார்.

கோலி, பாண்டியா கூட்டணி

அடுத்து வந்த பாண்டியா, கோலியுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியை பெரிய ஸ்கோருக்கு நகர்த்தினர். அதிரடியாக ஆடிய கோலி 36 பந்துகளில் 28-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.மாக் உட் வீசிய 18-வது ஓவரில் பாண்டியா இரு பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். 18.2 ஓவரில் இந்திய அணி 200 ரன்களைத் தொட்டது.

ஜோர்டன் வீசிய 19-வது ஓவரில் பாண்டியா இரு சிக்ஸர்களையும், கோலி பவுண்டரியும் விளாசினர். ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் கோலி இரு பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

கோலி 52 பந்துகளில் 80 ரன்களுடனும்,(7பவுண்டரி,2சிக்ஸர்), பாண்டியா17 பந்துகளில் 39 ரன்களுடனும்(4பவுண்டரி, 2 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் பாண்டியா கோலி கூட்டணி 67 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்