தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் மற்ற கண்டங்களைச் சேர்ந்த அணிகள் ஆதிக்கம் செலுத்தியதில்லை என்ற வரலாறு இருந்தாலும்கூட, நடப்பு சாம்பியனான ஸ்பெயின் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என உலகமே எதிர்பார்த்தது. ஒருவேளை யூரோ கோப்பையை தக்கவைத்தது போல உலகக் கோப்பையையும் ஸ்பெயின் தக்கவைத்துக் கொண்டால் உலக கால்பந்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் மேலும் பரந்துவிரியும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
2008 மற்றும் 2012 யூரோ கோப்பைகளில் சாம்பியன், 2010 உலகக் கோப்பையில் சாம்பியன் என 6 ஆண்டுகள் உலக கால்பந்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சிவப்பு ரோஜா என்றழைக்கப்படும் ஸ்பெயினின் ஆதிக்கத்தை நெதர்லாந்தும், சிலியும் சேர்ந்து இரண்டே ஆட்டங்களில் முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றன.
6 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த ஸ்பெயினின் ஆதிக்கத்தை 2 போட்டிகளில் அடியோடு வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், நெதர்லாந்தும், சிலியும் அதை செய்து காட்டியிருப்பதன் மூலம் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
டெல் பாஸ்கேவின் வருகை
1920-ல் உருவாக்கப்பட்ட ஸ்பெயின் அணிக்கு யூரோ கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு 1964-ல்தான் கிடைத்தது. பங்கேற்ற முதல் யூரோ கோப்பை போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின், அடுத்த யூரோ கோப்பையை வெல்வதற்கு காத்திருந்தது ஒன்றல்ல, இரண்டல்ல…44 ஆண்டுகள்.
2008-ல் 2-வது முறையாக யூரோ கோப்பையை வென்றபோது ஸ்பெயின் அணியை மிக வலுவானதாக உருவாக்கி வைத்திருந்தார் அப்போதைய பயிற்சியாளர் லூயிஸ் அரகோன்ஸ். யூரோ கோப்பைக்குப் பிறகு அவர் விலக, புதிய பயிற்சியாளராக விசென்டே டெல் பாஸ்கே நியமிக்கப்பட்டார்.
தற்போதைய கேப்டன் இகர் காசில்லஸ், மிட்பீல்டர்கள் சேவி, சேபி அலோன்சா, ஆன்ட்ரேஸ் இனியெஸ்டா, பேப்ரிகஸ், ஸ்டிரைக்கர்கள் டேவிட் வில்லா, பெர்னாண்டோ டோரஸ் என ஸ்பெயின் அணி மிக வலுவாக இருந்ததால் டெல் பாஸ்கேவுக்கு பெரிய நெருக்கடியோ, தலைசிறந்த வீரர்களை அடையாளம் காண வேண்டிய அவசியமோ இல்லை. அணியில் இருக்கும் வீரர்களின் திறனை மேம்படுத்துவது மட்டுமே அவருடைய பணியாக இருந்தது.
உலக சாம்பியன்
டெல் பாஸ்கேவும் தனது பணியைச் சரியாக செய்ய, அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. 2010-ல் முதல்முறையாக உலக சாம்பியனாகி உலகக் கோப்பையை வென்ற 8-வது நாடு என்ற பெருமையைப் பெற்றது ஸ்பெயின். 1934-ல் இருந்து உலகக் கோப்பையில் விளையாடி வந்த ஸ்பெயினின் 76 ஆண்டுகால உலகக் கோப்பை கனவும் நனவானது.
2012-ல் மீண்டும் யூரோ கோப்பையை வென்றபோது அதை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற பெருமை ஸ்பெயின் வசமானது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் ஸ்பெயின் சாம்பியன் ஆனால், இத்தாலி, பிரேசிலுக்கு அடுத்தபடியாக கோப்பையை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டம் கண்ட ஸ்பெயின்
ஆனால் ஸ்பெயின் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளால் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதோடு, அடியோடு ஆட்டம் கண்டிருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான இறுதியாட்டத்தில் கூடுதல் நேரம் வரை போட்டியை இழுத்துச் சென்று ஒரு கோல் அடித்து வெற்றி கண்ட ஸ்பெயின், இந்த உலகக் கோப்பையில் அதே நெதர்லாந்திடம் 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி கண்டிருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளில் உலகக் கோப்பையில் ஸ்பெயின் சந்தித்த மோசமான தோல்வி இதுதான்.
கடந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்திடம் தோல்வி கண்டாலும், அதன்பிறகு சரிவிலிருந்து மீண்டது. அதேபோன்று இந்த முறையும் மீளும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநம்பிக்கையில் இருந்த பயிற்சியாளர் டெல் பாஸ்கேவும் கடந்த உலகக் கோப்பையைப் போன்றே இந்த முறையும் 2-வது ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்தார். ஆனாலும் அதற்கு பலன் கிடைக்காமல் போகவே, உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது ஸ்பெயின்.
புரட்டியெடுத்த நெதர்லாந்து
உலகின் தலைசிறந்த பின்கள வீரர்கள், உலகின் தலைசிறந்த கோல் கீப்பரைக் கொண்ட ஸ்பெயின் அணிக்கு எதிராக கோலடிப்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஆனால் பின்கள வீரர்களையும், கோல் கீப்பரும், கேப்டனுமான இகர் காசில்லஸையும் நெதர்லாந்தின் அர்ஜன் ராபென் புரட்டிபுரட்டி எடுத்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சிலியுடனான ஆட்டத்தோடு சேர்த்து ஸ்பெயினுக்காக 156 ஆட்டங்களில் விளையாடிவிட்ட, இகர் காசில்லஸ் நெதர்லாந்தின் ராபனிடம் போராடியதைப் போன்று வேறு எந்த வீரரிடம் போராடியிருக்கமாட்டார். சிலியுடனான ஆட்டத்துக்குப் பிறகு ஸ்பெயினின் பொற்காலம் முடிந்துவிட்டதாக காசில்லஸே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பலம் வாய்ந்த அணியான ஸ்பெயின் இதற்கு முன்னர் எதிரணிகளுக்கு மட்டுமே அதிர்ச்சி தோல்வியை அளித்து வந்த நிலையில், இப்போது அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருப்பது அதன் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.
நெருக்கடியில் ஸ்பெயின்
உலகக் கோப்பை படுதோல்வியின் காரணமாக ஸ்பெயின் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு பயிற்சியாளர் டெல் பாஸ்கேவோ, கேப்டன் இகர் காசில்லஸ் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று சொல்லக்கூடிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது ஸ்பெயின்.
மொத்தத்தில் ஸ்பெயினுக்கு கிடைத்துள்ள படுதோல்வி அணியில் உள்ள மூத்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்த்தியுள்ளது.
ஸ்பெயினின் வரலாற்றுச் சிறப்பமிக்க வெற்றியில் முக்கிய பங்களித்தவர்களான கேப்டன் இகர் காசில்லஸ், மிட்பீல்டர்கள் சேவி, அலோன்சா உள்ளிட்டோர் ஏறக்குறையை 35 வயதை நெருங்கிவிட்டனர். ஸ்பெயினுக்கு அடுத்த கோல் கீப்பரும் தயராகிவிட்டார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் டேவிட் டி ஜியா, காசில்லஸ் இடத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சிலிக்கு எதிரான ஆட்டத்தில் அலோன்சாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய கோகே, சேவிக்கு சரியான மாற்று வீரராக இருப்பார். எனவே ஸ்பெயின் அணிக்கு மகத்தான வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் காசில்லஸ் உள்ளிட்டோரை கௌரவமாக வழியனுப்பிவிட்டு அணியை பலப்படுத்தினாலொழிய அடுத்த யூரோ கோப்பையில் ஸ்பெயின் சாதிப்பது கடினம்.
பாக்ஸ்
2008, 2012 யூரோ கோப்பை, 2010 உலகக் கோப்பை ஆகிய மூன்றையும் சேர்த்து மொத்தம் 19 ஆட்டங்களில் விளையாடிய ஸ்பெயின் எதிரணிகளிடம் வாங்கிய மொத்த கோல் 6. ஆனால் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 2 ஆட்டங்களில் வாங்கிய கோல்களின் எண்ணிக்கை 7.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago