இஷான் கிஷனின் காட்டடி ஆட்டம், கோலியின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால், அகமதாபாத்தில் நேற்று நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
அதிரடி அறிமுகம்..ஆட்டநாயகன்
இஷான் கிஷனுக்கு இதுதான் சர்வதேச அறிமுகப்போட்டி என்று கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை கிஷன், கிழித்து தொங்கவிட்டார். அதிலும் ரஷித், டாம்கரன், ஆர்ச்சர் என யார் பந்தையும் பாராமல் அடித்து நொறுக்கிய கிஷன் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். முதல் போட்டியிலேயே கலக்கிய இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
டி20 உலககக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் "எக்ஸ்ப்ளோஸிவ் ஓபனிங் பேட்ஸ்மேன்" இஷான் கிஷான். இவர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேண்டிய அவசியம்கூட இல்லை. முக்கியமான சில போட்டிகளில் இதுபோன்று மிரளவைக்கும் ஆட்டத்தை வெளிக்காட்டினாலேய உலகக் கோப்பையில் எதிரணிக்கு "கிலி" வந்துவிடும்.
இந்திய அணியின் கேப்டன் கோலி, முதல் ஆட்டத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். ஆனால், இந்தப் போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். கோலி 49 பந்துகளில் 73 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கோலியின் சாதனைகள்
இந்தப் போட்டியின் மூலம் கோலி சில முத்தாய்ப்பான சாதனைகளை செய்துள்ளார். டி20 போட்டியில் கோலி அடித்த 26வது அரைசதம் இதுவாகும். டி20 போட்டிகளில் அதிகமான அரைசதம் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மாவை(25) முறியடித்துவிட்டார் கோலி.
அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 3ஆயிரம் ரன்களைக் கடந்த உலகிலேேய முதல் கிரிக்கெட் வீரர் எனும் சாதனையை கோலி படைத்தார்.
மிகவும் முக்கியமாக சர்வதேச அரங்கில் அதிவிரைவாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய கேப்டன் எனும் பெருமையையும் கோலி படைத்தார்.
இதற்கு முன் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்(282), தெ.ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்(294) இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை எட்டினர். ஆனால், கோலி, 226 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை எட்டி அதிவேக கேப்டன் எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டி20 போட்டியில் இந்திய அணி சேஸிங்கின் போது கோலி 16 முறை நாட்அவுட்டாக இருந்துள்ளார். அந்த 16 முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் கோலி "சேஸிங்கிலும் கிங்"காக ஒளிர்கிறார்.
பந்துவீச்சு, பேட்டிங் அருமை
இந்திய அணியைப் பொருத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் இந்த ஆட்டத்தில் மிகப்பிரமாதமாகச் செயல்பட்டனர்.
அறிமுகப்போட்டியில் களமிறங்கி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இஷான் கிஷன், களத்தில் சிறிதுநேரமே இருந்தாலும் ரன்ரேட்டை உயர்த்திவிட்டு சென்ற ரிஷப்பந்த் ஆகிய இரு இளம் ரத்தங்களின் ஆட்டம் அணி்யின் வெற்றியை எளிதாக்கியது.
இரு இளம் காளையர்களையும் உற்சாகப்படுத்திய கோலி, அவர்களுக்கு ஈடுகொடுத்து பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்று பொறுப்புள்ள கேப்டனாக ஜொலித்தார். இஷான் கிஷனுடன் 94 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த கோலி, 36 ரன்களை ரிஷப்பந்துடன் பாட்னர்ஷிப் அமைத்தார்.
பந்துவீச்சிலும் இந்திய வீர்ர்கள் பட்டையை கிளப்பினர். பவர்ப்ளேயில் 44 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இந்திய அணி, நடுப்பகுதி ஓவரில் மட்டுமே ரன்கள் கொடுத்தனர். அதிலும் கடைசி 5 ஓவர்களில் தாக்கூர், பாண்ட்யா, புவனேஷ்வர், சுந்தர் என அனைவரும் கட்டுக்கோப்பாக வீசி, 35 ரன்கள் மட்டுமே கொடுத்து இங்கிலாந்து ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். பந்துவீச்சில் கோட்டை விட்டிருந்தால், இங்கிலாந்து அணி கூடுதலாக 20 ரன்கள் விளாசியிருப்பார்கள்.
சுந்தர் சிறப்பு
குறிப்பாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்தான் இங்கிலாந்தின் ரன் வேகத்துக்கு "பிரேக்" போட்டார். ஜேஸன் ராய், பேர்ஸ்டோ ஆகிய இரு ஆபத்தான பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கழற்றி நெருக்கடி கொடுத்த சுந்தரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
இந்திய அணியில் ஏமாற்றமாக அமைந்தது கே.எல்.ராகுலின் பேட்டிங் மட்டுமே. அடுத்தடுத்தப் போட்டியில் நிச்சயம் சரி செய்வார் என நம்பலாம். ஐபிஎல், ஆஸ்திரலேியத் தொடருக்குப்பின் ராகுலுக்கு களத்தில் விளையாட வாய்ப்பு ஏதும் கிைடக்கவில்லை, அது டச் இல்லாத குறையை வெளிப்படுத்தும் நிச்சயம் தனது ஃபார்முக்குத் திரும்புவார் என நம்பலாம்.
வள்ளல் டாம் கரண்
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இன்னும் கூடுதலாக 30 முதல் 40 ரன்கள் அடித்திருந்தால், போட்டி கடினமாக சென்றிருக்கும். இஷான் கிஷன் அடித்த அடியில் இங்கிலாந்துக்கு சற்று கலக்கம் வந்திருக்கும். மார்க் உட் இல்லாதது இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு பெரிய குறை.
டாம் கரன் வள்ளலாக மாறி இந்திய அணிக்கு “டியூன் செட்” செய்து கொடுத்தார். அதில் ரஷித் பந்துவீச்சை இஷான் கிஷன் வெளுத்துவாங்கிவிட்டார். ஆர்ச்சர், சாம் கரண் இருவர் மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். பந்துவீச்சில் கோட்டைவிட்டுவிட்டது இங்கிலாந்து அணி.
பேட்டிங்கிலும் பட்லர் ஏமாற்றம் அளித்தார்.
சுழற்பந்துவீச்சை விளையாடி அனுபவம் இல்லாத டேவிட் மலான் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. பேர்ஸ்டோ, மோர்கன், ஸ்டோக்ஸ் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் குவிக்காதது பெரிய குறையாகும்.
இஷான் கோலி கூட்டணி
165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராகுல், இஷன் கிஷனஅ களமிறங்கினர். சாம் கரண் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் டக்அவுட்டில் வெளியேறினார். அதன்பின் வந்த கோலி, இஷானுடன் சேர்ந்தார். நிதானமாகத் தொடங்கிய இஷான்கிஷன் அதன்பின் காட்டடிக்கு திரும்பினார்.
பவர்ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது. டாம் கரண் வீசிய6-வது ஓவரில் இஷான் கிஷன் 2பவுண்டரி, ஒருசிக்ஸர் என 16 ரன்கள் சேர்த்தார்.அதன்பின் இந்திய அணியின் ரன்ரேட் எகிறத் தொடங்கியது.
ஸ்டோக்ஸ் வீசிய 7-வது ஓவரில் கோலியும், இஷானும் தலா ஒரு சிக்ஸரை விளாசி 17ரன்கள் சேர்த்தனர். ரஷித் வீசிய 10 –வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய கிஷன் 56 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
அதிரடி பந்த்
அடுந்து வந்த ரிஷப் பந்த் தனது பங்கிற்கு சிக்ஸர்,பவுண்டரி விளாசி 26 ரன்னில் ஜோர்டன் பந்துவீச்சில் தேவையில்லாத ப்ளிக் ஷாட் ஆடி விக்கெட்டை இழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.
டாம் கரன் பந்துவீச்சில் அருமையான சிக்ஸர் அடித்து விராட் கோலி 35 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஜோர்டான் வீசிய 18-வது ஓவரில் ஸ்குயர் லெக்திசையில் பவுண்டரியும், ஃபைன் லெக் திசையி்ல சிக்ஸரும் அடித்து கோலி அணியை வெற்றி பெற வைத்தார். கோலி 73 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சாம் கரன், ஜோர்டன், ரஷித் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பட்லர் ஏமாற்றம்
முன்னதாக, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. பட்லர், ராய் களமிறங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே கால்காப்பில் வாங்கி பட்லர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டேவிட் மலான் நிதானமாக பேட் செய்த, ஜேஸன் ராய் வழக்கம்போல் வெளுத்துக் கட்டினார்.
நடுவரிசை சொதப்பல்
மலான் 24 ரன்னில் சஹல் பந்துவீச்சில் கால்காப்பி்ல் வாங்கி விக்கெட்டை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த பேர்ஸ்டோ, ராயுடன் சேர்ந்தார்.
இந்த முறையும் ஜேஸன் ராய் அரைசதத்தை தவறவிட்டு 46 ரன்னில் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் பேர்ஸ்டோ (20), மோர்கன்(28), ஸ்டோக்ஸ்(24) என நடுவரிசை பேட்டிங் ஸ்திரமாக அமையவில்லை. கடைசி 5 ஓவர்களில் அடித்து நொறுக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நினைத்தவாறு பந்துவீச்சு அமையவில்லை. சாம் கரன் 6 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் சுந்தர், தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும், சஹல், புவனேஷ்வர் குமார் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago