டி20: அதிரடி பேட்டிங்கில் 215 ரன் குவித்து மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை

By இரா.முத்துக்குமார்

பல்லெகெலே விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மே.இ.தீவுகளை இலங்கை அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களை விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் ஓரளவுக்கு அச்சுறுத்தினாலும் ஒரு பந்து மீதமிருக்கையில் 185 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் டேரன் சாமி தப்பும் தவறுமாக முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்தார். தில்ஷன், குஷால் பெரேரா இணைந்து 58 பந்துகளில் 91 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். குசால் மிட் ஆஃப் தலைக்கு மேல் பவுண்டரியுடன் தொடங்க தில்ஷன் தன் பங்குக்கு 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து இருவரும் சில நல்ல பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டத் தொடங்கினார்கள். குசால் ஸ்வீப் ஆட, தில்ஷன் தனது ‘தில் ஸ்கூப்’ ஷாட்களை ஆடத் தொடங்கினார்கள்.

4-வது ஓவர் முடிவில் 46 ரன்கள் வந்திருந்தது. ஹோல்டரின் 6-வது ஓவரில் தில்ஷன் கை ஓங்க 17 ரன்கள் நொறுக்கப்பட்டது. பவர் பிளே முடிந்தபோது ஸ்கோர் 65. சுனில் நரைன் மட்டுமே மே.இ.தீவுகளில் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்தனர். டிவைன் பிராவோ 4 ஓவர்களில் 53 ரன்கள் விளாசப்பட்டார். இலங்கைக்காக டி20 கிரிக்கெட்டில் முதலில் 1,500 ரன்களைக் குவித்து தில்ஷன் சாதனை நிகழ்த்தினார். 10-வது ஓவரில் 28 பந்துகளில் தில்ஷன் அரைசதம் கண்டார்.

அதன் பிறகு கெய்ரன் பொலார்ட், தில்ஷன், குசல் பெரேரா (40) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். ஆனாலும் ஜெயசூரியா மற்றும் சந்திமால் அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர். சந்திமால் 3 கவர் டிரைவ் பவுண்டரிகளை விளாசினார். 16-வது ஓவரில் ஜெயசூரியா மூடுக்கு வர பொலார்டை 2 பவுண்டரி ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 23 ரன்கள் வந்தது. ஷேஹன் ஜெயசூரியா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 36 ரன்களில் சுனில் நரைன் பந்தில் அவர்களிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

16.2 ஓவர்களில் 155/3 என்று இருந்தது இலங்கை, அப்போது அஞ்சேலோ மேத்யூஸ் களமிறங்கினார். நரைனை சந்திமால் ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி அடித்தார்.

மேத்யூஸ் 13 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் என்று 37 ரன்களை விளாசித் தள்ளினார், கடைசி 22 பந்துகளில் 60 ரன்கள் விளாசப்பட்டது. சந்திமால் 19 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

மே.இ.தீவுகள் களமிறங்கிய போது 2-வது பந்தில் லஷித் மலிங்கா தனது கால் பெயர்க்கும் யார்க்கர் பந்தில் ஜான்சன் சார்லஸ் ஸ்டம்பை பெயர்த்தார். சாமுயெல்ஸ் 10 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஆந்த்ரே பிளெட்சர், ஆந்த்ரே ரசல் சேர்ந்தனர். குறிப்பாக பிளெட்சர் லெக் திசையில் விளாசித்தள்ளினார். அறிமுக வீரர் துஷ்மந்த சமீரா வீசிய 6-வது ஓவரில் 19ரன்கள் குவிக்கப்பட்டது. பிறகு சேனநாயகே ஓவரில் 16 ரன்கள் நொறுக்கப்பட்டது.

ஸ்கோர் 7.3 ஓவர்களில் 77 ஆக உயர்ந்தது சுமார் 3 ஓவர்களில் 48 ரன்களை இருவரும் அடித்து நொறுக்கினர். அப்போது ரஸல் 16 ரன்களில் வெளியேறினார். 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 57 பந்துகளில் சமீரா பந்தில் பவுல்டு ஆனார். பிராவோ, பொலார்ட் ஜோடி இணைந்து அடுத்த 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க 13-வது ஓவரில் 137 ரன்கள் என்று அச்சுறுத்தியது மே.இ.தீவுகள், ஆனால் பிராவோ 24 ரன்களிலும், பொலார்ட் 26 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற, சாமி, ஹோல்டரை சேன நாயகே மலிவான ஸ்கோருக்கு பெவிலியன் அனுப்ப, பேட்டிங்கிலும் நரைன் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். ஆனால் கடைசி 2 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 17 ரன்களையே எடுத்த மே.இ.தீவுகள் 19.5 ஓவர்களில் 185 ரன்களுக்குச் சுருண்டது.

மலிங்கா 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சேனநாயக 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சிரிவதனா 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சேனநாயக ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்