டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குத் தகுதி: மீண்டும் அக்ஸர், அஸ்வினிடம் பணிந்தது இங்கிலாந்து: டெஸ்ட் தொடரை வென்றது கோலி படை

By க.போத்திராஜ்

ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சால் அகமதாபாத்தில் நடந்த 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

இந்த டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிந்துவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருதையும், அஸ்வின் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் ஜூன் மாதம் 18-ம் தேதி நடக்கும் உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக மோதும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது.

கோப்பையை வென்ற இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 28 டெஸ்ட் தொடர்களில் விளையாடி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது. உள்நாட்டில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பெறும் 13-வது வெற்றி இதுவாகும்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கும், இந்திய அணி 365 ரன்களுக்கும் ஆட்டமிழந்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 54.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்ஸர் படேல் ஆகிய 4 வீரர்களைத்தான் குறிப்பிட முடியும்.

அதில் நேற்று ரிஷப் பந்த் மட்டும் சதம் அடிக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலை மோசமடைந்திருக்கும். ரிஷப் பந்த்துக்கு துணையாகப் பொறுமையுடன் பேட் செய்த சுந்தர் (96 நாட் அவுட்) அர்ப்பணிப்பான ஆட்டம் முத்தாய்ப்பானது.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அதனால்தான் வென்றார்கள் என்று இந்திய அணி மீது இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் சேற்றை வாரி இறைத்தனர். ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆன்டர்ஸன், ஸ்டோக்ஸ் கூட்டணிதான். அப்போது ஆடுகளத்தைப் பற்றி ஏதும் பேசவில்லை. ஆனால், 2வது இன்னிங்ஸில் அஸ்வின், படேல் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு சரிந்ததுபோல் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் தோல்விதான். ஆடத் தெரியாதவர் தெரு கோணலாக இருக்கிறது என்று பழமொழி கூறுவர். அதுபோன்று, இந்திய அணியின் முதல் தரமான சுழற்பந்துவீச்சைச் சமாளித்து ஆட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குத் திறமையில்லை. அதனால்தான் ஆடுகளத்தைப் பற்றியே குறை கூறினர். இப்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கு பதிலும் கிடைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அக்ஸர் படேல் 27 விக்கெட்டுகளையும் அஸ்வின் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இருவரும் சேர்ந்து இந்த டெஸ்ட் தொடரில் 59 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் அஸ்வின், அக்ஸர் படேல் இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் சீர்குலைவுக்குக் காரணமாகினர். படேல் 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 22.5 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா ஏனோ ஃபீல்டிங் செய்யவும் வரவில்லை, பந்துவீசவும் வரவில்லை.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்து, 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுந்தர் 60 ரன்களுடனும், படேல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கினர். படேல் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த இசாந்த், முகமது சிராஜும் அடுத்தடுத்து வெளியேறினர் இதனால், சதம் அடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சுந்தர் 96 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து 160 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கியது. அஸ்வின் வீசிய 5-வது ஓவரில் 4-வது பந்தில் கிராலி (5) ராஹேனேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பேர்ஸ்டோ, 5-வது பந்தில் பேரஸ்டோ டக் அவுட்டில் லெக் ஸ்லிப்பில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிப்ளி (3) ரன்களில் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழந்து வந்தது. கேப்டன் ரூட் 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஸ்டோக்ஸ் (2) ரன்களில் படேல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். போப் 15 ரன்களில் படேல் பந்துவீச்சில் ரிஷப் பந்த்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக லாரன்ஸ் 50 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.

54.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 135 ரன்களில் ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணித் தரப்பில் அஸ்வின், படேல் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்