அக்ஸர் படேல், அஸ்வின் ஆகியோரின் ராஜ்ஜியம் 4-வது டெஸ்டிலும் தொடர்கிறது. இருவரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், அகமதாபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-வது முறையாக 200 ரன்களை இங்கிலாந்து அணி கடந்துள்ளது.
முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியஅணி முதல்நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 8 ரன்னிலும், புஜாரா 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்திய அணி 181 ரன்கள் பின்தங்கியுள்ளது.
கடந்த 3-வது டெஸ்ட் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அக்ஸர் படேல்,அஸ்வினின் சுழற்பந்து ராஜ்ஜியமே இருந்தது. அக்ஸர் படேல் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரூட், பேர்ஸ்டோ என அபாயகரமான பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் சாய்த்தார்.
» அக்ஸர் அசத்தல்: நேராக வந்த பந்தில் போல்டான சிப்லி; இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறல்
அக்ஸர் படேலுக்கு இது 3-வது டெஸ்ட் போட்டியாகும் இதுவரை22 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
கடந்த போட்டியைப்போல் ஆடுகளத்தில் பந்து எகிறவும் இல்லை,அதிகமாகச் சுழலவும்இல்லை. பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதத்திலேயே ஆடுகளம் இருக்கிறது.
நிதானமாகப் பேட்டிங் செய்தால், இந்த மைதானத்தில் நன்றாக பேட்ஸ்மேன் ஸ்கோர் செய்ய முடியும். ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அஸ்வின், அக்ஸர்ஆகியோரின் சுழற்பந்துவீச்சை சமாளித்து ஆடத் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.
குறிப்பாகத் தொடக்க ஆட்டக்காரர் சிப்லி ஸ்டெம்புக்கு நேராக வந்த பந்தைக் கூட காலுக்குள் விட்டுக்கொண்டு போல்டாகியதை என்னவென்று சொல்வது. அதிலும் தொடக்க ஆட்டக்கார்ர சிப்லி நேராக வந்த பந்தை ஆடத்தெரியாமல் அக்ஸர் படேல் பந்துவீச்சில் போல்டாகியதற்கெல்லாம் ஆடுகளத்தைக் குறை சொல்ல முடியாது.
ஆடுகளத்தில் எந்தவிதமான தரக்குறைவும் இல்லை. ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில்தான் சிக்கல் இருக்கிறது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சைப் பார்த்து தேவையில்லாமல் அச்சப்படுவதும், அதிகமாகச் சுழலும் என்று கணித்து அதிகமாக மெனக்கெடுவதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்கக் காரணமாகும்.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணடிப்பது குறித்துக் கவலைப்படாமல் நிதானமாகப் பேட் செய்தால்,நல்ல ஸ்கோர் செய்யலாம். இந்திய அணி முதல்இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால், நிச்சயம் இன்னிங்ஸ் வெற்றிபெறுவது உறுதியாகும். கடைசி இரு நாட்களில் ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சுக்குக் கூடுதலாக ஒத்துழைக்கும் என்பதால், முதல்இன்னிங்ஸ் ஸ்கோர் மிகவும் அவசியமாகப் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் மட்டும்தான். நிதானமாகப் பேட் செய்த ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக லாரன்ஸ் 46 ரன்கள் சேர்த்தார்.இருவர் மட்டுமே ஓரளவுக்குக் கவுரமான ஸ்கோர் எடுத்தனர்.
166 ரன்கள் வரை 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வலிமையாக இருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 36 ரன்களுக்குள் மீதம்இருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. 75.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கிராலி, சிப்லி ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்திலேயே அக்ஸர் படேல் பந்துவீச அழைக்கப்பட்டார். அக்ஸர் வீசிய 6-வது ஓவரில், நேராக வந்த பந்த ஆடத்தெரியாமல் ஆடி, சிப்லி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த முறை பல இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இதேபோன்று ஸ்டெம்புக்கு நேராக வந்த பந்தை ஆடத்தெரியாமல், பந்து டர்ன் ஆகும் நினைத்துப் பேட் செய்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அனுபவத்திலிருந்து யாரும் இன்னும் பாடம் கற்கவில்லை.
அடுத்து, பேர்ஸ்டோ களமிறங்கி, கிராலியுடன் சேர்ந்தார். அக்ஸர் வீசிய 8-வது ஓவரில் மிட்ஆப் திசையில் கிராலி அடிக்க அது முகமது சிராஜிடம் பந்து தஞ்சமடைந்தது. 9 ரன்னில் கிராலி ஆட்டமிழந்தார். 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.
3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரூட் களமிறங்கி, பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். சிராஜ் வீசிய 13-வது ஓவரி்ல் கால்காப்பில் வாங்கி ரூட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவுடன் இணைந்து அவப்போது பவுண்டரிகளை அடித்தார்.
உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்திருந்தது. உணவு இடைவேளைக்குப்பின் வந்த சிறிது நேரத்தில் பேர்ஸ்டோ விக்கெட்டை பறிகொடுத்தார்
முகமது சிராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பேர்ஸ்டோ 28 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் 48 ரன்கள் சேர்த்தனர். இதுதான் அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக இன்று அமைந்தது.
அடுத்து ஒலே போப் களமிறங்கி, ஸ்டோஸுடன் சேர்ந்தார். மிகவும் பொறுமையாகப் பேட் செய்த ஸ்டோக்ஸ் 120 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் சிறிது நேரமே களத்தில் இருந்த ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்த நிலையில் சுந்தர் பந்துவீச்சில் தேவையில்லாமல் ரிவர்ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்தார்.
பின்வரிசை பேட்டிங்கை பலப்படுத்தவே லாரன்ஸ் களமிறக்கப்பட்டார். ஆனால், லாரன்ஸுக்கு ஒத்துழைத்து பின் வரிசை பேட்ஸ்மேன்கள் ஒருவரும் பேட்டிங் செய்யவில்லை. போப் 29 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஷுப்பமான்கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய பென் ஃபோக்ஸ்(1), பெஸ்(3), லீச்(7) ஆகியோர் மளமளவென விக்கெட்டை இழந்தனர்.அரைசதத்தை நோக்கி நகர்ந்த லாரன்ஸ் 46 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 75.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு முதல்இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் அக்ஸர் படேல் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago