ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்: யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த பொலார்ட்: ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர்: இலங்கையை ஊதித்தள்ளிய மே.இ.தீவுகள்

By க.போத்திராஜ்


ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட கெய்ரன் பொலார்டின் அதிரடி ஆட்டத்தால், ஆன்டிகுவாவில் நடந்த இலங்கை அணிக்குஎதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதுமட்டுமல்லாமல் இலங்கை வீரர் தஞ்செயா எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டும் முத்தாய்ப்பானது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது 132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 13.1ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என மே.இ.தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இரு சாதனைகள் படைக்கப்பட்டன. இலங்கை லெக் ஸ்பின்னர் தனஞ்செயா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது வீரராகவும், 4-வது இலங்கை வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ஹாட்ரிஸ் விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர் தனஞ்செயா

அநேரத்தில் தனஞ்செயாவின் பந்துவீச்சில்தான் மே.இ.தீவுகள் அணியின் அதிரடி வீரர் கெய்ரன் பொலார்ட் ஒரேஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார். இதுவரை டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்அடித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் யுவுராஜ் சிங், கிப்ஸ் மட்டுமே இருந்தனர் அதோடு 14 ஆண்டுகளுக்குப்பின் பொலார்ட் இணைந்தார்.

காட்டடி அடித்த பொலாரட் 11 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

டி20 போட்டிகளில் பிக் ஹிட்டர்ஸ் அதிகமாக இருக்கும் மே.இ.தீவுகள் அணிக்கெல்லாம் இலங்கை அணி நிர்ணயித்த 131 ரன் இலக்கு போதுமானதாக இருக்காது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற நிலையில்தான் இருக்கும். பிக் ஹிட்டர்ஸ் வீரர்களில் ஒருவர் களத்தில் நின்றாலும் ஆட்டம் திசை மாறிவிடும் என்பதற்கு பொலார்ட் ஆட்டமே சாட்சியாகும்.
2ஆண்டுகளுக்குப்பின் அணியில் இடம் பெற்ற கிறிஸ் கெயில் டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஆன்டிகுவாவில் உள்ள சிறிய மைதானத்தில் பொலார்ட் போன்ற பெரிய உருவம் கொண்ட வீரர்கள் பேட்டால் பந்தை தூக்கி அடித்தாலே சிக்ஸர் சென்றுவிடும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பொலார்ட் அடித்த அடியில் பல சிக்ஸர் அரங்கிற்கு வெளியே சென்றது. மே.இ.தீவுகள் அணி சேர்த்த ரன்களில் 75 சதவீதம் பவுண்டரிகளிலும், சிக்ஸர்களிலும் மே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

132 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் மே.இ.தீவுகள் களமிறங்கியது. லூயிஸ், சிம்மன்ஸ் நல்லதொடக்கத்தை அளித்தனர். இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 20பந்துகளில் ஸ்கோர் 50ரன்களை எட்டியது.

தனஞ்செயா வீசிய 4-வது ஓவரின் 2-வது பந்தில், லூயிஸ் 28 ரன்னில் குணதிலகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்குஇருவரும் 52 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர்.

அடுத்துவந்த கெயில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து பூரன் களமிறங்கினார். 4-வது பந்தில் விக்கெட் கீப்பர் டிக்வெலாவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். 3 பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தனஞ்செயா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

அடுத்து கேப்டன் பொலார்ட் களமிறங்கி சிம்மன்ஸுடன் சேர்ந்தார். சிம்மன்ஸ் 26 ரன்னில் டி சில்வா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெலியன் திரும்பினார். 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களுடன் தடுமாறியது மே.இ.தீவுகள் அணி.

டக்அவுட்டில் வெளியேரிய கெயில்

தனஞ்செயா வீசிய 6-வது ஓவரில்தான் அந்த சாதனையை பொலார்ட் நிகழ்த்தினார். அந்த ஓவரில் மட்டும், 6 சிக்ஸர்களை பொலார்ட் விளாசினார். "முதல் பந்தில் லாங்ஆனில் சிக்ஸர், 2-வது பந்தில், ஸ்ட்ரைட் சிக்ஸர், 3-வது பந்தில் வைட் லாங் ஆபில் சிக்ஸர், 4-வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸர், 5-வது பந்தில், அவுட்சைட் ஆபில் சிக்ஸர், 6-வது பந்தில் டீப் மிட்விக்கெட்டில் மறுபடியும் சிக்ஸர்" என நொறுக்கி எடுத்தார்.

பவர்ப்ளே முடிவில், 98 ரன்களைக் குவித்தது மே.இ.தீவுகள் அணி. டி சில்வா வீசிய 7-வது ஓவரில் பொலார்ட் 38 ரன்னில் கால்காப்பில்வாங்கி வெளியேறினார். அடுத்துவந்த ஆலன் கால்காப்பி்ல வாங்கி டக்அவுட்டில் பெவிலியன் சென்றார்.

அதன்பின் டுவைன் பிராவோ 4 ரன்கள், ஹோல்டர் 29 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் 13.1 ஓவர்களில் மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில டிசில்வா , தனஞ்செயா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக இலங்கை அணி முதலில் பேட் செய்தது. இலங்கை அணியில் அதிபட்சமாக டிக்வெலா 33 ரன்களும், நிசங்கா 39 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். மற்ற வீரர்களான குணதிலகா(4),சந்திமால்(11), மேத்யூஸ்(5), பெரேரா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்தது. மே.இ.தீவுகள் தரப்பில் மெக்காய் 2 விக்கெட்டுகளையும், சின்க்ளேர், எட்வர்ட்ஸ், ஹோல்டர், பிராவோ, ஆலன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்