இங்கிலாந்துடன் நாளை அகமதாபாத்தில் 3-வது டெஸ்ட்: பிங்க் பந்து, புதிய ஆடுகளம், பனி: தாக்குப் பிடிக்குமா இந்தியா?

By க.போத்திராஜ்

அகமதாபாத் மொட்டீரா மைதானத்தில் 7 ஆண்டுகளுக்குக்குப் பின் நாளை நடக்கும் சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை எதிர்த்துக் களமிறங்குகிறது இந்திய அணி.

மொட்டீரா மைதானத்தில் முதல் முறையாக 7 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஆட்டம் நடைபெறுவதால், இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையுமா அல்லது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்குமா எனப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. ஆதலால், 3-வது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுகளத்தில் லேசாகப் புற்கள் காணப்படுவதால், வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங் செய்யவும் மைதானம் ஒத்துழைக்கும் என ஒருபுறம் இங்கிலாந்து வீரர்கள் நம்புகிறார்கள். ஆனால், சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்ததைப் போன்றுதான் முதல் நாளில் இருந்தே பந்துகள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆதலால், நாளை பிற்பகல் வரை இரு அணிகளிலும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது உறுதியில்லாமல் இருக்கிறது.

உலகிலேயே மிகப்பெரிய மைதானமான மொட்டீரா மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரலாம். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக 50 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

புதிய மைதானத்தில் நடக்கும் முதல் சர்வதேச போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். வழக்கமான மின்விளக்குபோல் மைதானத்தில் இல்லாமல், துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் அமைக்கப்பட்ட ரிங் ஆஃப் பயர் போன்று விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.

பிங்க் பந்து

வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்தைப் போல் அல்லாமல் எஸ்ஜி. பிங்க் பந்து நாளை பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அடுக்குகளாக பிங்க் வண்ணம் பூசப்பட்டு இருப்பதால், நீண்டநேரத்துக்கு வண்ணம் மாறாமல் இருக்கும்.

இதற்கு முன் கொல்கத்தாவில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பிங்க் பந்து பந்துவீசும்போது பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வந்தது. ஃபீல்டிங் செய்யவும் கடினமாகவும், வழக்கமான பந்தைவிடச் சற்று எடையும் கூடி இருந்தது. ஆதலால், இந்தப் பந்தில் பந்து வீசுவது இரு அணிகளுக்கும் சற்று சவால்தான். ஆதலால், நாளை வேகப்பந்துவீச்சுக்கு இந்திய அணி முக்கியத்துவம் அளிக்கப் போகிறதா அல்லது சுழற்பந்து வீச்சுக்கு அளிக்குமா என்பது கடைசி நேரத்தில் முடிவாகும்.

ஆடுகளம்

மொட்டீரா மைதானத்தில் கடந்த 7 ஆண்டுகளாகச் சர்வதேசப் போட்டிகள் ஏதும் நடக்கவில்லை என்பதால் ஆடுகளம் பற்றிக் கணிப்பது கடினம்தான். ஆனால், உலக அளவில் பிங்க் பந்து, பகலிரவு ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்களே அதிகமாக 354 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர்கள் 115 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்கள்.


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியிலும் வேகப்பந்துவீச்சாளர்களே அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆதலால். இந்த மைதானமும் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து வீரர்கள் நம்புகிறார்கள். ஆனால், சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி போன்று தொடக்க நாளில் இருந்தே பந்துகள் சுழலும் என்று ரோஹித் சர்மா கூறுகிறார். தற்போது ஆடுகளத்தில் இருக்கும் சிறிய அளவிலான புற்களும் வெட்டி எடுக்கப்பட்டால், சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கலாம்.

அதிலும் 2-வது செஷனில் பனி விழும்போது, நிச்சயம் பந்துவீச்சாளர்கள் பந்தைப் பிடித்து வீசுவதில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். பந்தை ஸ்விங் செய்வதிலும், சுழற்பந்துவீச்சாளர்கள் வீசுவதிலும் தடுமாறலாம். நாளை ஆட்டத்தில் ஆடுகளமும், இரவுப் பனியும் முக்கியப் பங்காற்றும்.

ரிங் ஆஃப் பயர்

மொட்டீரா ஆடுகளத்தில் வழக்கமான மின்விளக்குகள் அமைக்கப்படாமல், துபாயில் உள்ள மைதானம்போல் ரிங் ஆஃப் பயர் போன்று எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மின்னொளியில் விளையாடும்போது பந்துகளை கேட்ச் பிடிப்பதில் வீரர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம்.

துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, பல வீரர்கள் கேட்ச்சுகளை நழுவவிட்டனர். ஆனால், மற்ற 3 மைதானங்களில் இதுபோன்று நடக்கவில்லை. ஆதலால், மின்னொளியில் ஃபீல்டிங் செய்யும் அணி சற்று தடுமாற்றத்தை எதிர்கொள்ளலாம். மேலும், பேட்ஸ்மேன்களுக்கு பவுன்ஸர் வீசும்போது, பந்தைக் கணித்து ஆடுவதிலும் சிரமம் ஏற்படும்.

கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில், வங்கதேச வீரர்கள் பலர் பவுன்ஸரைச் சமாளிக்க முடியாமல் ஹெல்மெட்டில் அடிவாங்கினர். அதன்பின்புதான் மின்னொளியில் பிங்க் நிறப் பந்து சரியாகத் தெரியவில்லை என்ற புகார் எழுந்தது. ஆதலால், நாளைய ஆட்டத்தில் இந்தச் சிக்கலும் எழக்கூடும்.

100-வது டெஸ்ட் போட்டி

நாளைய டெஸ்ட் போட்டி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். வேகப்பந்துவீச்சாளர்களில் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய கபில்தேவுடன், இசாந்த் சர்மாவும் நாளை இணைய உள்ளார்.

இந்திய அணியில் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் மட்டும் மாற்றப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் தேர்வில் மாற்றம் ஏதுமில்லை. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்குமா அல்லது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்குமா என்பதைப் பொறுத்து வீரர்கள் தேர்வு அமையும்.

யாருக்கு இடம்?

அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெறவே அதிகமான வாய்ப்புள்ளது. உமேஷ் யாதவ் உள்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நாளை வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான்.

பேட்டிங்கில் ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, கோலி, புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெறக்கூடும்.

ஆர்ச்சர், ஆன்டர்ஸன் வருகை

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 2-வது டெஸ்ட்டில் இடம் பெறாத, ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்டர்ஸன், ஆகியோர் அணிக்குத் திரும்புவது கூடுதல் பலம். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் இருந்தால், ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படலாம். பேட்டிங்கைப் பலப்படுத்த பேர்ஸ்டோவும், ரோரி பர்ன்ஸும் நாளை களமிறங்கலாம்.

நாளைய டெஸ்ட் போட்டியில் மொயின் அலி இல்லாததால், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கு பதிலாக கிறிஸ்வோக்ஸ், அல்லது மார்க் உட் சேர்க்கப்படலாம். சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மைதானம் அமைந்தால், ஜேக் லீச் சேர்க்கப்படலாம்.

நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்