சென்னையில் நாளை ஐபிஎல் ஏலம்; எந்தெந்த வீரர்களுக்கு கடும் போட்டி இருக்கும்?: 8 அணிகளும் மும்முரம்

By க.போத்திராஜ்

சென்னையில் நாளை 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 61 வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் 18-ம் தேதி (நாளை) நடக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலைக் கடந்த மாதமே அளித்துவிட்டன. மேலும், ஏராளமான வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.

ஒட்டுமொத்தமாக 1,114 சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துப் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளன. இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களையும், சிஎஸ்கே அணி ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 6 வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முடியும்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 5 வெளிநாட்டு வீரர் உள்பட 9 வீரர்களையும், கொல்கத்தா அணி 2 வெளிநாட்டு வீரர் உள்பட 8 வீரர்களையும், ஆர்சிபி அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 வீரர்களையும் ஏலத்தில் எடுக்கலாம்.

சன்ரைசர்ஸ் அணி ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 3 வீரர்களையும், டெல்லி கேபிடல்ஸ் அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 8 வீரர்களையும் ஏலத்தில் எடுக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 61 வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன. இதற்காக 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் இருவருக்கு மட்டும் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களில், மேக்ஸ்வெல், ஸ்மித், சகிப் அல் ஹசன், சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், மொயின் அலி, ஜேஸன் ராய், மார்க் உட் ஆகியோர் ரூ.2 கோடி அடிப்படை விலைப் பட்டியலி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், சகிப் அல் ஹசன், மொயின் அலி, மார்க் உட், பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. ஜேஸன் ராய் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்தாலும், பல அணிகளில் நிலையான தொடக்க வரிசை இருப்பதால், அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

அதிலும் குறிப்பாக மேக்ஸ்வெலைத் தேர்வு செய்ய சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். மொயின் அலியை ஆர்சிபி அணி விடுவித்துள்ளதால், இவரை ஏலத்தில் எடுக்கவும் கடும் போட்டி ஏற்படக்கூடும்.

ரூ.1.50 கோடி அடிப்படை விலையில் ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் ஆகிய இரு இந்திய வீரர்கள் உள்பட 12 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மலானைத் தேர்வு செய்யக் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக அதிரடி வீரர் ஷேன் வாட்ஸனுக்கு மாற்றாக சிஎஸ்கே அணி நல்ல வீரரை எதிர்பார்த்து இருப்பதால், டேவிட் மலானை சிஎஸ்கே அணி வாங்குவதற்குக் கடும் முயற்சி எடுக்கும்.

அதேபோல அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் அடிப்படை விலை ரூ.1.50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் லீக்கில் 543 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக் ரேட் 161 ஆக ஹேல்ஸ் வைத்துள்ளார். முதல் 6 ஓவர்களுக்குள் அணியின் ஸ்கோரை உயர்த்த ஹேல்ஸ் சிறந்த வீரர் என்பதால் இவரை ஏலத்தில் எடுப்பதற்குக் கடும் போட்டி இருக்கும்.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக் கெரேவுக்கு அடிப்படை விலையாக ரூ.1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்று சில போட்டிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது, அதையும் சரியாக கெரே பயன்படுத்தவில்லை.

இந்த முறை இவரைச் சரியாகப் பயன்படுத்தும் அணிக்கு நிச்சயம், துருப்புச்சீட்டாக கெரே இருப்பார். நடுவரிசையில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன் கெரே என்பது முக்கிய அம்சம். பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடிய 62 பந்துகளில் கெரே சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களில் இளம் வீரர் முகமது அசாருதீனுக்கும், தமிழக அணியைச் சேர்ந்த ஷாருக்கானுக்கும் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சயத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்கு எதிராக கேரள வீரர் அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்துள்ளதால், அசாருதீனை ஏலத்தில் எடுக்கப் போட்டி இருக்கும்.

அதேபோல, தமிழக அணி வீரர் ஷாருக்கான் அதிரடி பேட்ஸ்மேன். சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து அணியைக் காலிறுதிக்கு அழைத்துச் சென்றவர் ஷாருக்கான். ஆதலால், ஷாருக்கானும் இந்த ஏலத்தில் நல்ல விலைக்குப் பேசப்படுவார்.

இவர்கள் தவிர ஆல்ரவுண்டர் சோனு யாதவ், பரோடா வீரர் விஷ்ணு சோலங்கி, மேற்கு வங்க வீரர் ஆகாஷ்தீப் ஆகியோரும் ஏலத்தில் அதிக விலைக்குக் கேட்கப்படலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்