ஷேன் வாட்ஸன், பிராவோவுக்கு பதிலாக மாற்று வீரரைச் சிந்திக்க வேண்டிய நேரம்: சிஎஸ்கே அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசனை

By பிடிஐ

ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸன், மே.இ.தீவுகள் வீரர் டுவைன் பிராவோ இருவருக்கும் பதிலாக வரும் ஐபிஎல் ஏலத்தில் மாற்று வீரரை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தங்கள் அணியிலிருந்து கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், முரளி விஜய், பியூஸ் சாவ்லா ஆகியோரைக் கழற்றிவிட்டுள்ளது.

இதில் ஷேன் வாட்ஸன் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாகவும், கால் வலி காரணமாகவும் பல போட்டிகளில் பிராவோ பங்கேற்கவில்லை. மேலும், சுரேஷ் ரெய்னாவும் கடந்த முறை விளையாடாததால் சூப்பர் லீக் சுற்று செல்லாமல் முதல் முறையாக சிஎஸ்கே அணி வெளியேறியது.

இந்நிலையில் இந்த முறை சிஎஸ்கே அணியில் ரெய்னா, பிராவோ தக்கவைக்கப்பட்டுள்ளார். ஆனால், பிராவோ, வாட்ஸனுக்கு பதிலாக மாற்று வீரர்களைப் பற்றிச் சந்திக்க வேண்டிய நேரம் என்று கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஷேன் வாட்ஸன், டுவைன் பிராவோ ஆகியோருக்கு பதிலாக அடுத்த ஐபிஎல் சீசனில் மாற்று வீரர்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த முறை ரெய்னா சிஎஸ்கே அணியில் இல்லை. ஆனால், இந்த முறை ரெய்னா வந்துவிட்டார். ஆதலால், வாட்ஸனுக்கு பதிலாக நல்ல ஆல்ரவுண்டரைத் தேர்வு செய்ய வேண்டும்.

சேப்பாக்கம் ஆடுகளம் வழக்கம்போல் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் சுழற்பந்துவீச்சும், பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் தேவை. மேலும், ஹர்பஜன் சிங்கும் விடுவிக்கப்பட்டுள்ளதால், நல்ல ஆஃப் ஸ்பின்னர் தேவை.

டுவைன் பிராவோ காயம் காரணமாக அடிக்கடி அவதிப்படுவதால், பிராவோவுக்கு பதிலாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஓரளவு செயல்படக்கூடிய ஆல்ரவுண்டர் எடுக்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஆதலால், இந்த இரு வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக நல்ல மாற்று வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த சீசன் முடிந்தபின் அடுத்த ஆண்டு மிகப்பெரிய ஏலம் நடைபெறும். அப்போதுகூட சிஎஸ்கே அணி மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யும் என்று நான் நினைக்கவில்லை.

சுரேஷ் ரெய்னா அணிக்குள் வருவது மிகப்பெரிய ஊக்கமாக அமையும். டி20 கிரிக்கெட் போட்டியில் ரெய்னா சிறப்பாக விளையாடக்கூடியவர், பல சாதனைகளையும் வைத்துள்ளார். அதே நேரத்தில் வாட்ஸனுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் ஆல்ரவுண்டரை எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புதிய வீரர்களும் இளம் வீரர்களும் அணிக்குள் வந்திருப்பதால், அடுத்த சீசன் சிஎஸ்கே அணிக்கு உற்சாகத்தைக் கொண்டுவரும்''.

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்