6 மணிநேரம், 9 விக்கெட், 381 ரன்கள்: வரலாறு படைக்குமா கோலி படை? இமாலய இலக்கை நோக்கி இந்தியா: அஸ்வின் அசத்தல் 

By க.போத்திராஜ்


சென்னையில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் எனும் இமாலய இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

4-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் வெற்றிக்கு 381 ரன்கள் தேவைப்படுகிறது, நாளை பேட்டிங் செய்ய 6 மணிநேரமே இருக்கிறது. 9 விக்கெட்டுகள் இருக்கிறது எனக் கூறிக்கொண்டாலும் நிலைத்து ஆடக் கூடியவர்கள் 6 பேட்ஸ்மேன்கள் மட்டும்தான்.

நாளை 90 ஓவர்களில் 381 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்துவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்த அணி எனும் பெருமையை இந்திய அணி பெறும்.

இதற்கு முன் கடந்த 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 418 ரன்களைச் சேஸிங் செய்ததே வரலாறு. இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி எழுத வாய்ப்புக் கிடைத்துள்ளது. முடிந்தால் வெற்றி அல்லது ஆட்டத்தை டிரா செய்ய முயற்சிக்க வேண்டும்.

ஆனால், கடைசிநாளில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு கூடுதலாக ஒத்துழைக்கும் என்பதால் லீச், டாம் பெஸ் இருவரின் பந்துவீச்சையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்துஆட வேண்டும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்துக்கே பந்து ஏனோ,தானோ என பவுன்ஸ் ஆகிறது என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடுவது அவசியம்.


வெற்றி பெற வேண்டும் என அடித்து ஆடத் தொடங்கினால், தோல்வியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டதற்கு சமம். குறிப்பாக கேப்டன் கோலி லெக் ஸ்பின்னில் மிகவும்பலவீனம் என்பதால், லீச், பெஸ் பந்துவீச்சில் கணித்து ஆட வேண்டும்.


இந்திய அணித் தரப்பில் ரவிச்சந்திர அஸ்வின் முத்திரை பதிக்கக்கூடிய பந்துவீச்சை வீசியுள்ளார். 17.3 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 27-வது முறையாக அஸ்வின் 5-வது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையையும் அஸ்வின் படைத்தார். 114 ஆண்டுகளில் முதல்முறையாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவரில் முதல்பந்தில் விக்கெட் எடுத்த 2-வது சுழற்பந்துவீச்சாளர் எனும் வரலாற்றை அஸ்வின் படைத்தார்.


3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்திருந்தது. இங்கிலாந்து அணியின் 578 ரன்களைவிட இன்னும் 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருந்தது.


சென்னைவாசிகளான வாஷிங்டன் சந்தர் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் களத்தில் இருந்து இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். நிதானமாக ஆடிய சுந்தர் 82 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். துணையாக ஆடிய அஸ்வின் 31 ரன்னில் லீச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட் கொடுத்து வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.


அதன்பின் வந்த ஷான்பாஸ் நதீம்(0) லீச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இசாந்த் சர்மா(4), பும்ரா0) இருவரும் ஆன்டர்ஸனிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 95.5 ஓவர்களில் 337 ரன்களுக்கு இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

241 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், சிப்ளி களமிறங்கினர். 2-வது இன்னிங்ஸின் முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.


அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். சிப்ளி 17 ரன்னில் அஸ்வினிடம் விக்கெட்டைபறிகொடுத்தார். லாரன்ஸ் 18ரன்கள் சேர்த்திருந்தபோது இசாந்த் சர்மா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

இந்த விக்கெட்டை இசாந்த் சர்மா வீழ்த்தியபோது, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 300-வது விக்கெட்டை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார்.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (7) ரன்னில் வெளியேறினார். அஸ்வின் வீசிய பந்து உடம்பை விட்டு நகர்ந்து சென்றபோது தேவையில்லாமல் தொட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரூட் 40 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெலியன் திரும்பினார்.
101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தது. ஆனால் அடுத்த 77 ரன்களுக்குள் மீதம் இருந்த 5 வி்க்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக 165 ரன்கள் முதல் 178 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஆல்அவுட் ஆகியது.

46.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏற்கெனவே 241 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்த 178ரன்களையும் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது.

மிகப்பெரிய இலக்கைத் துரத்தி ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.சிக்ஸர், பவுண்டரி என அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 12 ரன்னில் லீச் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
புஜாரா 12 ரன்னிலும், கில் 15 ரன்னிலும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 381ரன்கள் தேவைப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்