ஜோ ரூட்டின் அபாரமான சதம், சிப்ளியின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையை எட்டியுள்ளது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ஜோ ரூட் 197 பந்துகளில் 128 ரன்களுடன் (14 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ரூட்டின் பொறுப்பான பேட்டிங் இங்கிலாந்து அணிக்கு வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெறுவதற்கு வழியாக அமைந்துவிட்டது.
ஆட்டம் முடிய 3 பந்துகள் இருக்கும் நிலையில், சிப்ளி 87 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் அருமையான இன்ஸ்விங் பந்தில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு சிப்ளி - ரூட் கூட்டணி 200 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு அடித்தளம் இட்டது. முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் எட்டியுள்ளதால், நாளைய போட்டியில் கூடுதலாக 200 ரன்கள் சேர்த்தாலே அது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்கோராக, பெரும் நெருக்கடி தரக்கூடியதாக அமையும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் வலுவான ஸ்கோரைப் பதிவு செய்துவிட்டால், எதிரணியைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிது. ஆதலால், நாளை ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் 7 விக்கெட்டுகளையும் 100 ரன்களுக்குள் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வீழ்த்த முயல வேண்டும்.
ஆனால், பென் ஸ்டோக்ஸ், ஒலே போப், பட்லர் ஆகிய 3 வீரர்களுமே நிலைத்து ஆடக்கூடியவர்கள். இவர்கள் நிலைத்துவிட்டால் இந்திய அணிக்குப் பெரும் தலைவலிதான்.
500 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணி சென்றுவிட்டால், இந்திய அணிக்கு அழுத்தம் தரக்கூடிய ஸ்கோராக அமையும். 3-வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் மாறும் என்பதால், கவனத்துடன் பேட் செய்வது அவசியம்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஏற்கெனவே இலங்கை பயணத்தில் இரு டெஸ்ட்களிலும் அடுத்தடுத்து சதத்தைப் பதிவு செய்த நிலையில், 3-வதாக இந்தியாவுக்கு எதிராகச் சதம் அடித்துள்ளார்.
தொடர்ந்து அடிக்கும் 3-வது சதமாக ரூட்டுக்கு இது அமைந்துள்ளது. டெஸ்ட் வாழ்க்கையில் ஜோ ரூட் அடிக்கும் 20-வது சதமாகும்.
சர்வதேச அளவில் 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 9-வது வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 100 டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் என்பது பெருமைக்குரியது. இதற்கு முன் கடந்த 1968-ல் கோலின் கவுட்ரே (1968), அலெக் ஸ்டீவர்ட் (2000) ஆகியோரும் தற்போது ஜோ ரூட் (2021) சதம் அடித்துள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொண்டார். ஆடுகளத்தில் பந்து மெதுவாக வருகிறது, குறைவாக எழும்புகிறது எனத் தெரிந்துகொண்டு அதிகமான அளவில் ஸ்வீப் ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார்.
ஸ்கொயர் திசையில் ஸ்வீப் ஷாட் ஆடுதல், ரிவர்ஸ் ஸீவ், ஸ்விட்ச் ஹிட் எனப் பந்தை மேலே உயர்த்தி அடிக்காமல் ரூட்டின் பேட்டிங் அற்புதமாக அமைந்திருந்தது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், வாஷிங்டன், நதீம் ஆகியோர் கடினமாக முயன்றும் ரூட் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.
இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், சிப்ளி இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அஸ்வின், ஷான்பாஸ் நதீம், பும்ரா, இசாந்த் சர்மா என 4 பேர் பந்து வீசியும் சிப்ளி, பர்ன்ஸ் விக்கெட்டை 20 ஓவர்கள் வரை கழற்ற முடியவில்லை. முதல் விக்கெட்டுக்கு இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களுக்கு மேல் சென்றது.
அஸ்வின் வீசிய 24-வது ஓவரில் ரோரி பர்ன்ஸ் பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து வருவதற்கு முன்பாக, பேட்டை வேகமாகச் சுழற்றியதால், பேட்டில் எட்ஜ் எடுத்து, கீப்பர் ரிஷப் பந்த்திடம் சென்றது.
ரோரி பர்ன்ஸ் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த லாரன்ஸ் ரன் ஏதும் சேர்க்காமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
63 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் 2-வது விக்கெட்டையும் இழந்தது.
3-வது விக்கெட்டுக்கு சிப்ளி, ரூட் பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோரைக் கட்டமைத்தது. நிதானமாக ஆடிய இருவரும் நேரம் செல்லச் செல்ல ரன்களை வேகமாகச் சேர்க்கத் தொடங்கினர். சிப்ளி 159 பந்துகளில் அரை சதத்தையும், ரூட் 110 பந்துகளில் அரை சதத்தையும் அடைந்தனர்.
அரை சதம் கடந்தபின், ரூட் பேட்டிங்கில் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது. பிற்பகலுக்குப் பின் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து ஆடத் தொடங்கினார்.
அரை சதம் அடிக்க 110 பந்துகளை எடுத்துக்கொண்ட ரூட், அடுத்த 50 ரன்கள் சேர்க்க 54 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொண்டார்.164 பந்துகளில் ரூட் சதம் கண்டார். சிப்ளி- ரூட் இருவரையும் பிரிக்க முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறியதைக் காண முடிந்தது.
ஆட்டம் முடிய 3 பந்துகள் இருக்கும் நிலையில் பும்ரா வீசிய கடைசி ஓவரில் சிப்ளி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
இந்தியத் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago