சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து வீழ்த்திவிட்டி வந்திருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் இந்திய அணியை சென்னையில் நாளை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சிதம்பரம் மைதானத்தில்தான் நடக்கின்றன.
கடந்த 35 ஆண்டுகளில் அதாவது கடந்த 1985-ம் ஆண்டுக்குப் பின் இங்கிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் தொடரை (2012-13) மட்டுமே வென்றுள்ளது. அதன்பின் எந்த டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணி வெல்லவில்லை என்பதால், இந்தத் தொடர் இங்கிலாந்து அணிக்கு முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெல்லும் அணிதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஃபைனலில் நியூஸிலாந்து அணியுடன் மோத முடியும். புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தாலும், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தினால்தான் ஃபைனலுக்குள் செல்ல முடியும்.
புள்ளிவிவரப் பார்வை
இங்கிலாந்து அணி இந்தியாவில் கடந்த 1933-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுவரை 15 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது.
இந்தியாவில் இதுவரை இரு அணிகளும் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 19 டெஸ்ட் போட்டிகளில் வென்று, 7 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டிகளில் வென்று 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் (வெளிநாடு, உள்நாடு) இரு அணிகளும் இதுவரை 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 26 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், 47 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 49 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
உள்நாட்டில் இங்கிலாந்துடன் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் ஆதிக்கமே இருக்கிறது எனப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
சென்னையில் எப்படி?
அதிலும் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இதுவரை இங்கிலாந்து, இந்திய அணிகள் 9 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், இந்திய அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளன.
கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-20ஆம் தேதி நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்களில் இந்திய அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை இரு அணிகளும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து 13 வெற்றிகளும், இந்திய அணி 7 வெற்றிகளும் பெற்றுள்ளன. 3 ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
ஒட்டுமொத்தம்
ஓட்டுமொத்தமாக இரு அணிகளும் சேர்ந்து 32 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 18 டெஸ்ட் தொடர்களையும், இந்திய அணி 10 தொடர்களையும் வென்றுள்ளன. 4 டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்துள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இங்கிலாந்து அணியின் கை ஓங்கியுள்ளது. உள்நாட்டளவில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கிறது.
20 ஆண்டுகளுக்குப் பின் முதல் வெற்றி
இதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இங்கிலாந்து அணியுடன் முதன்முதலாகக் கடந்த 1933-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்ய 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதாவது கடந்த 1952-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில்தான் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியைப் பெற்றது.. அதன்பின் அடுத்த வெற்றியைப் பெற 10 ஆண்டுகள் இந்திய அணி காத்திருந்தது. இதனால்தான் இந்திய அணி வெற்றி சதவீதத்தில் பின்தங்கியுள்ளது.
நம்பிக்கை
சிங்கத்தை அதன் குகையிலேயே சாய்த்ததுபோல், ஆஸ்திேரலிய அணியை சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.
மனைவியின் குழந்தை பிறப்புக்காக விடுப்பில் சென்ற கேப்டன் விராட் கோலி முழு உற்சாகத்துடன் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கிறது. காயத்திலிருந்து குணமடைந்து அஸ்வின், பும்ரா, இசாந்த் சர்மா ஆகியோர் வந்துள்ளது பந்துவீச்சைப் பலப்படுத்துகிறது.
சென்னை ஆடுகளம் முதல் இரு நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்து பவுன்ஸ் ஆகும். ஆனால், கடைசி 3 நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி என்பதால், இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கும்.
முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்
முதலில் பேட்டிங் செய்யும் அணி முதல் இன்னிங்ஸில் வலுவான ஸ்கோர் செய்துவிட்டால், ஆட்டத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடலாம். இரு அணிகளுக்கும் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முக்கியம் என்பதால், நிதானமாக பேட்டிங் செய்வது அவசியம். 3-வது நாளில் இருந்து ஆடுகளத்தில் பந்து நன்றாகச் சுழலும் என்பதால், போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
3 சுழற்பந்துவீச்சாளர்கள்
இந்திய அணியைப் பொறுத்தவரை இரு வேகப்பந்துவீச்சாளர்கள், 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் வீரர்கள் களமிறங்கக்கூடும். சுழற்பந்துவீச்சில் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால், வாஷிங்டன் சந்தர், அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு இருக்கக்கூடும், அஸ்வினுக்கும் இடம் உண்டு. குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டால், அக்ஸர் படேல் நீக்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் பும்ரா, இசாந்த் சர்மா களமிறங்க வாய்ப்பு உண்டு. சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
பேட்டிங்கில் ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பந்த் ஆகிய வீரர்கள் இடம்பெறவே வாய்ப்பு உண்டு. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.
ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் முழுமையான ஃபார்முக்குத் திரும்பவில்லை. டெஸ்ட் போட்டியில் அதிகமான ஓவர்கள் வீச வேண்டும் என்பதாலும், சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமானது என்பதாலும் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை ரிஷப் பந்த், புஜாரா, ரஹானே, ஷுப்மான் கில் ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் இங்கிலாந்து அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். கேப்டன் கோலி களத்தில் நின்றுவிட்டால் அவரை வீழ்த்துவது கடினம் என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
இங்கி. நம்பிக்கை
இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது. ஆனால், இலங்கையின் ஆடுகளம், இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கையைப் போல் இந்திய வீரர்களும், ஆடுகளமும் இருக்கும் எனக் கணக்கிடுவது தவறானது.
இந்திய அணி இப்போது இருக்கும் ஃபார்மில் உள்நாட்டில் வைத்து வீழ்த்துவது கடினமான செயல். ஜோப்ரா ஆர்ச்சர், ஆன்டர்ஸன், பிராட் ஆகியோரின் வேகப்பந்துவீச்சு, லீச், மொயின் அலி, டாம் பெஸ் ஆகியோரின் சுழற்பந்துவீச்சும் இந்திய அணிக்குச் சவாலாக இருக்கலாம்.
ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களான பெஸ், லீச் இருவரும் அதிக அனுபவம் இல்லாதவர்கள். இந்திய ஆடுகளங்கள் குறித்து அதிகம் அறிந்திராதவர்கள் என்பது இந்திய அணிக்குச் சாதகமானது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியின் ஆடுகளத்தை நன்கு அறிந்த வீரர்களில் இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் மட்டுமே உள்ளார். அதிகமான டெஸ்ட் அனுபவம் கொண்ட வீரர்களில் ஒருவர்.
மற்ற வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர், மொயின் அலி போன்றோருக்கு ஐபிஎல் அனுபவம் மட்டுமே இருக்கிறது. முதல் இரு நாட்களுக்கு மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் என்பதால், ஆர்ச்சர், ஆன்டர்ஸனுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. இங்கிலாந்து அணியிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்குத்தான் அதிகமான வாய்ப்பு அளிக்கப்படும்.
பின்னடைவு
தொடக்க வீரர் கிராளே மணிக்கட்டுக் காயத்தால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கு விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்குச் சற்று பின்னடைவாகும். இதனால், தொடக்க வீரர்களாக போப், லாரன்ஸ் ஆகியோர் ரோரி பர்ன்ஸுடன் களமிறங்கலாம்.
ஆஸ்திரேலியத் தொடரை இந்திய அணி வென்று கொண்டாட்டத்தில் இருந்தபோது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ இந்திய அணி அதிகமாகக் கொண்டாட வேண்டாம். உண்மையான அணி விரைவில் இந்தியா வருகிறது. அதை வென்றுவிட்டு வெற்றியைக் கொண்டாடட்டும்” என இங்கிலந்து அணியின் திறமையை பெருமையாகத் தெரிவித்திருந்தார்.
பீட்டர்ஸனின் வார்த்தைகள் இந்த டெஸ்ட் தொடரில் தெரிந்துவிடும்.
சென்னையில் காலை 9.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago