கழற்றிவிடப்பட்ட பிரபல 5 வீரர்கள்: ஐபிஎல் ஏலத்தில் விலைபோவார்களா?

By செய்திப்பிரிவு

14-வது ஐபிஎல் ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில், சமீபத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் விலைபோவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்துக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் அளித்துள்ளன. வரும் 18-ம் தேதி மினி ஏலம் சென்னையில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.

இந்த ஆண்டு, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், ஸ்மித், ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், உமேஷ் யாதவ், கீமோ பால், ஜேஸன் ராய், காட்ரெல், நீஷம் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டாலும் இவர்களை ஏலத்தில் எடுப்பதற்குப் பல சாத்தியங்கள் இருக்கின்றன.

ஆனால், குறிப்பிட்ட 5 வீரர்கள் ஏலத்தில் விலைபோவார்களா அல்லது கடந்த ஐபிஎல் போட்டி கடைசியாக அமைந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹர்பஜன் சிங்

இந்தப் பட்டியலில் முதலில் இருப்பவர் ஹர்பஜன் சிங். தற்போது ஹர்பஜனுக்கு 40 வயதாகிறது. தனிப்பட்ட காரணங்களால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடாமல் ஒதுங்கினார். இரு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு முக்கியப் பந்துவீச்சாளராக ஹர்பஜன் இருந்தார் என்றாலும் கடந்த ஓராண்டாக எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்கவில்லை.

தன்னைக் கழற்றிவிடப் போகிறார்கள் எனத் தெரிந்தே ஹர்பஜன் ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக விலகினார். இளம் வீரர்கள் கடந்த தொடரில் பிரமாதமாகச் சாதித்தனர். ஆதலால், அதிகமான வயது காரணம், அதிகமான அடிப்படை விலை ஆகியவற்றால் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்பது சந்தேகமே.

முரளி விஜய்

தமிழக வீரரான முரளி விஜய் சிஎஸ்கே அணியில் கடந்த தொடரில் இடம் பெற்றும் ஜொலிக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு சீசன்தான் முரளி விஜய்க்கான சீசனாக இருந்தது. கிங்ஸ்லெவன் அணியில் 453 ரன்கள் குவித்த விஜய்க்கு அடுத்தடுத்த சீசன்கள் பின்னடைவாக அமைந்தன.

கடந்த 2017-ல் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, 2018-ல் ஒரு போட்டி, 2019-ல் 2 போட்டி, 2020-ல் 3 ஆட்டங்கள் என்றே முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பையிலும் முரளி விஜய் விளையாடவில்லை. ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் முரளி விஜய் ஏலத்தில் புறக்கணிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது.

கருண் நாயர்:

கர்நாடக வீரரான கருண் நாயர், கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த சயித் முஷ்டாக் அலி கோப்பையிலும் அதிகபட்சமாக 27 ரன்கள்தான் சேர்த்தார். 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 16 ரன்கள் மட்டுமே கருண் நாயர் சேர்த்தார். பேட்டிங் ஃபார்மிலும் இல்லை, வாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை என்பதால், இந்த ஐபிஎல் ஏலத்தில் கருண் நாயருக்கு அணிகளின் கதவுகள் அடைக்கப்படலாம்.

ஜேஸன் ராய்

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேஸன் ராய். சேவாக்கின் பேட்டிங் ஸ்டைலைப் போன்றே ஜேஸன் ராயின் ஆட்டமும் இருக்கும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஜேஸன் ராய் அதிரடி ஆட்டம் அனைவராலும் பேசப்பட்டது. பிக் பாஷ் லீக்கில் ராய் சிறப்பாக பேட் செய்து ஐபிஎல் தொடரில் இடம் பெற்றாலும் டெல்லி அணி கடைசிவரை ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு அளிக்கவில்லை.

தொடக்க வீரராகக் களமிறங்கியே சாதித்த ஜேஸன் ராய்க்கு நடுவரிசை சரிவராது. அதேசமயம், பல அணிகளில் நிலையான தொடக்க வரிசை இருந்ததால், அணியில் இடம் கிடைத்தும் ராய்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய ராய் 120 ரன்கள் மட்டுமே குவித்தார். இருப்பினும் அணியில் நீடித்த நிலையில் இந்த முறை கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த முறை ஜேஸன் ராய் விலைக்கு வாங்கப்படுவது சந்தேகம்தான்.

கேதார் ஜாதவ்

2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியைவிட, கேதார் ஜாதவ்தான் அதிகமாகப் பேசப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் மீம்ஸ் உருவாக்குபவர்களுக்குத் தீனியாகவும் ஜாதவ் இருந்தார். ரசிகர்கள், வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்கள் எனப் பலரின் கோபத்தையும் வாங்கிக்கட்டிய ஜாதவை நீக்க கடுமையாகக் குரல்கள் வலுத்தன. அதன்படி சிஎஸ்கே அணியிலிருந்து ஜாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சமீபத்தில் நடந்த முஷ்டாக் அலி கோப்பையில் மகாராஷ்டிர அணிக்காக ஆடி தொடர்ந்து 2 அரை சதங்களை ஜாதவ் அடித்துள்ளார். இருப்பினும் 35 வயது, உடற்தகுதியின்மை, மோசமான பேட்டிங் ஃபார்ம், முக்கியமான கட்டத்தில் சொதப்புதல் போன்றவற்றால் ஜாதவை விலைக்கு வாங்கி கையைச் சுட்டுக்கொள்ள பெரும்பாலான அணிகள் விரும்பாது. குறிப்பாக மேட்ச் வின்னர் அல்லாத ஒருவருக்கு கோடிகளைக் கொடுக்க அணி நிர்வாகிகள் விரும்பமாட்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்