இந்திய வீரர்களோடு ஒப்பிடும்போது ஆஸி. இளம் வீரர்கள் ‘எல்கேஜி’ மாணவர்கள்தான்; வார்னர், ஸ்மித்தை இனியும் நம்பாதீங்க: கிரேக் சேப்பல் விளாசல்

By பிடிஐ

இந்திய அணி வீரர்களோடு ஒப்பிடும்போது, ஆஸ்திரேலியாவின் இளம் வீரர்கள் எல்கேஜி படிக்கும் மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆஸி. ஜாம்பவானுமான கிரேக் சேப்பல் காட்டமாகக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இந்திய அணியில் முன்னணி வீரர்களான கேப்டன் கோலி, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, கே.எல்.ராகுல், அஸ்வின், ஹனுமா விஹாரி ஆகியோர் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் சாதித்தனர்.

அதிலும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் காபா மைதானத்தில் 32 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்திராத ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்தது. இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி உலகக் கிரிக்கெட் ரசிகர்களை பிரமிப்படைய வைத்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் ஆஸ்திரேலியாவில் வெளிவரும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நம்முடைய நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலவீனமான போர் வீரர்களாகவே இருக்கிறார்கள். இந்திய வீரர்களோடு ஒப்பிடும்போது, நமது இளம் வீரர்கள் 16 வயதுக்குக் கீழ் உள்ள அணியில் விளையாடும் வீரர்களைப் போல், எல்கேஜி மாணவர்கள்போல்தான் இருக்கிறார்கள்.

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணி அனைத்து வகையிலும் தேர்ந்ததாக உள்ளது. இந்திய அணிக்குள் வந்தாலே கிடைக்கும் வாய்ப்பில் தங்களை நிரூபிக்கவும், அணியை வெற்றி பெற வைக்கவும் முயல்கிறார்கள்.

இரு அணிகளையும் ஒப்பிட்டுப் பேசுவதில் எனக்குச் சிறிது அச்சமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஆஸி. இளம் வீரர்கள் வில் புகோவ்ஸ்கி, கேமரூன் ஆகியோரின் பேட்டிங்கை இந்திய வீரர்களோடு ஒப்பிடும்போது தொடக்கப்பள்ளி மாணவர்கள் அளவில்தான் இருக்கிறார்கள்.

கடந்த 1960களில் ஓடிய ஹோல்டன் கார்களை வைத்துக்கொண்டு, எலக்ட்ரிக் கார்களை இயக்கும் இந்தக் காலகட்டத்தில் ஓட்ட முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புரிந்துகொள்ள வேண்டும்.

பிசிசிஐ கோடிக்கணக்கில் வீரர்களை உருவாக்குவதில் செலவிடுகிறது. ஆனால், பிசிசிஐ அமைப்போடு ஒப்பிடும்போது ஆஸ்திரேலிய வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிக்கு 4.40 கோடி டாலர்கள்தான் செலவிடுகிறது.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கிரிக்கெட் வீரர்களுக்குச் செலவிடும் தொகைக்கான இடைவெளி வளைகுடா அளவில் இல்லை. அதற்கும் அதிகமாக இந்தியப் பெருங்கடல் அளவுக்கு இடைவெளி இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு என்ன தேவை என்பதை ஆஸ்திரேலிய வாரியம் உணராவிட்டால், நம்முடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் வாரியமும், வீரர்களைக் கட்டமைப்பதில் முதலீடு செய்யும் மனநிலையை மாற்றாவிட்டால், நாம் தொடர்ந்து போட்டிகளில் தோற்றுக்கொண்டுதான் இருப்போம். இந்திய ஏ அணியின் திறமையோடு நம்முடைய முதல் தர அணியை ஒப்பிடும்போது, நாம் வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

கடினமான போட்டிகளில் விளையாடி, இந்திய அணியினர் நெருக்கடிகளை, அழுத்தங்களைச் சமாளிக்கும் திறமையோடு இருக்கிறார்கள். இந்த ஆழம் வலைப்பயிற்சியிலும், வலுகுறைந்த அணிகளுக்கு எதிராகவும் எதிரொலிக்காது. எந்த மாதிரியான திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தியாவில் உள்ள 38 உள்நாட்டு முதல் தர அணியே உதாரணங்களை வழங்கும்.

இந்திய ஏ அணியின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, அவர்களின் விளையாட்டில் உள்ள முதிர்ச்சியும், விளையாட்டின் அனைத்து விதங்களையும் புரிந்துகொள்ளும் விதமும் வியப்பாக இருக்கிறது. இதுபோன்று செயல்படுவது அரிது.

அடிமட்டத்தில் இருந்து வீரர்களை உருவாக்க இந்தியா செய்துவரும் முதலீட்டின் அளவு கிரிக்கெட் உலகத்தை இனி விழிப்படையச் செய்யும். அதேசமயம், கரோனா வைரஸ் பாதிப்பால், உலக அளவில் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னுடைய வீரர்களைக் கட்டமைக்கச் செய்த முதலீட்டிலும், பிற நாடுகள் செய்துள்ள முதலீட்டிலும் வேறுபாட்டின் அளவை அதிகப்படுத்தும்.

இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு கேப்டன் பெய்ன், பந்துவீச்சாளர்களைக் குறை கூறாதீர்கள். இந்தத் தோல்விக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டியது பேட்ஸ்மேன்கள்தான். பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில்கூட அவர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் இடத்தை நிரப்புவதற்கு விரைவாகவே புதிய வீரர்களை அடையாளம் காண வேண்டும். இனியும் அவர்களை நம்புவதில் பயனில்லை.

125 ஓவர்கள் வரை முதல் இன்னிங்ஸில் விளையாட முடியாத பேட்ஸ்மேன்களை அடையாளம் காண வேண்டும். வார்னர் தடுமாறுகிறார். ஸ்மித்தால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த இருவருக்குப் பதிலாக மாற்று சாம்பியன் வீரர்களைத் தேட வேண்டும்.

டிம் பெய்ன் தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியிலும் பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையின் அடிப்படையில் தேர்வாகும் முதல் 5 வீரர்களில் பெய்னும் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் நீண்டநேரம் கீப்பிங் செய்வதிலும் திறமையானவர். பேட்டிங்கில் 40 சராசரி வைத்துள்ளார்''.

இவ்வாறு கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்