‘இதுதான் இந்தியா; கிரிக்கெட் இங்கு சாதாரண விளையாட்டு அல்ல’: நடராஜனுக்கான வரவேற்பு குறித்து சேவாக் பாராட்டு

By செய்திப்பிரிவு

இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன் நேற்று சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்குத் திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்து, முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்ற தமிழக வீரர் நடராஜன் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று தனி முத்திரை பதித்தார். இந்திய அணியில் பல வீரர்கள் ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நடராஜனின் பங்களிப்பு குறித்துப் பெருமையாகவே பேசப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார். காபா மைதானத்தில் 32 ஆண்டுகளாக தோல்வியைச் சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-வது முறையாகக் கைப்பற்றியது.

இந்திய அணியினர் ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தாயகம் திரும்பினர். இதில் தமிழக வீரர் நடராஜன் சேலம், சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை வந்தார். நடராஜனுக்கு சொந்த ஊர் மக்கள், ரசிகர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாரட் வண்டியில் அமரவைக்கப்பட்டு மலர்கள் தூவி, நடராஜனுக்கு மேள தாளத்துடன், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, அவரை மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்த காட்சிகளைக் காணொலி மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் பார்த்து பிரமித்தார்.

நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் சேவாக் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

அதில், “இதுதான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டு அல்ல. அதற்கும் மேல், அதிகமாகப் பார்க்கப்படுகிறது. சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் உள்ள சொந்த ஊருக்கு நடராஜன் வந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நம்ப முடியாத வகையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE