பிரிஸ்பேன் டெஸ்ட்; இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு: 69 ஆண்டுகளுக்குப் பின் சாதிக்குமா இந்திய அணி? சிராஜ், தாக்கூர் முத்திரை

By க.போத்திராஜ்

முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பந்துவீச்சால் பிரிஸ்பேனில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 4-வது நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 4 ரன்களிலும், கில் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி, பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் இதுவரை அதிகபட்சமாக 236 ரன்களைக் கடந்த 1951-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணி சேஸிங் செய்து வென்றதுதான் வரலாறு. அதன்பின் எந்த அணியும் இங்கு 4-வது இன்னிங்ஸில் சேஸிங் செய்து ஆஸ்திரேலியாவை வென்றதில்லை.

இந்த முறையை 69 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி சாதிக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த 1988-ம் ஆண்டுக்குப்பின் காபா மைதானத்தில் நடந்த எந்த டெஸ்ட் போட்டிியிலும்ஆஸ்திரேலிய அணி தோல்வியைச் சந்தித்து இல்லை. ஆனால், இந்த முறை இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கு அடையக்கூடியதுதான் என்றாலும், ஆஸியின் பாடிலைன் பந்துவீச்சை தாக்குப்பிடித்து வென்றால், மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக அமையும்.

காபா மைதானம் கடைசி நாளில் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும், நன்கு ஒத்துழைக்கும். கடைசி டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும், டிரா செய்ய இந்திய வீரர்களை விட்டுவிடக் கூடாது என்ற நினைப்பில் பாடிலைன் பந்துவீச்சை ஆஸி. வீரர்கள் கையிலெடுப்பார்கள்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் காட்டிய பொறுமை, நிதானத்தை நாளைய ஆட்டத்தில் வெளிப்படுத்தி விளையாடினால், நிச்சயம் தொடரை வெல்ல முடியும் அல்லது டிரா செய்து தொடரைத் தக்கவைக்க முடியும்.

3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்திருந்தது. வார்னர் 20 ரன்களிலும், ஹாரிஸ் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

ஆனால், இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 272 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியை இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்து அசத்தியுள்ளனர். 75.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

அதிலும் இந்தத் தொடருக்கு அறிமுகமாகிய முகமது சிராஜ் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். துணையாக இருந்த ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 33 ரன்கள் முன்னிலையோடு சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் ஆஸி.அணி 369 ரன்களுக்கும், இந்திய அணி 336 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்திருந்தது. வார்னர் 20 ரன்களிலும், ஹாரிஸ் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

வார்னர், ஹாரிஸ் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில், நடராஜன், தாக்கூர் ஆகியோர் லைன்லென்த் தவறிப் பல பந்துகளை வீசியதால், வார்னர், ஹாரிஸ் ஜோடி பவுண்டரிகளாக விளாசி எளிதாக ரன்களைச் சேர்த்தனர்.

ஹாரிஸ் 38 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த லாபுஷேன், வார்னருடன் சேர்ந்தார். வார்னர் அரை சதத்தை நோக்கி நகர்ந்த நிலையில், சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து மிரட்டிய லாபுஷேன் இந்த முறை தாக்கூர் பந்துவீச்சில் விரைவாக வெளியேறினார். 2-வது ஸ்லிப்பில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் லாபுஷேன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மேத்யூ வேட் ரன் ஏதும் சேர்க்காமல் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் காலை தேநீர் இடைவேளையின்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து ஆஸி. அணி வலுவாக இருந்தது. ஆனால், மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது 149 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஸ்மித், கேமரூன் க்ரீன் ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். நிதானமாக ஆடிய ஸ்மித் அரை சதம் அடித்தார். ஸ்மித் 55 ரன்கள் சேர்த்திருந்தபோது சிராஜ் வீசிய ஷார்ட் பந்தைத் தூக்கி அடிக்க முயன்று கல்லி பாயின்ட்டில் ரஹானேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கிரீன், ஸ்மித் ஜோடி 73 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின், கேப்டன் பெய்ன் களமிறங்கி கேமரூனுடன் சேர்ந்தார். இருவரும் சிறிது நேரமே இணைந்திருந்தனர். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து கேமரூன் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

பெய்ன் 27 ரன்களிலும், ஸ்டார்க் ஒரு ரன்னிலும், லேயான் 13 ரன்களிலும், ஹேசல்வுட் 9 ரன்களிலும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். 227 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 67 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளை 2-வது செஷனில் விரைவாக இழந்தது.

இந்தியத் தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

328 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழை பெய்ததையடுத்து, ஆட்டம் நிறுத்தப்பட்டது. 4-வது நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 4 ரன்களிலும், கில் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்