தரம்சலாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா வெற்றிகரமாக விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மாவின் அதிரடி சதமும், ரவிச்சந்திரன் அஸ்வினின் அபார பந்துவீச்சும் விரயமாக தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஜோடிகள் ஆம்லா, அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோருடன் கடைசியில் ஏகப்பட்ட அதிர்ஷ்டத்துடன் ஜே.பி.டுமினி ஆகியோரின் ஆட்டத்தினால் தென் ஆப்பிரிக்க வெற்றி சாத்தியமானது.
பேட்டிங்குக்கு சாதகமான ஆட்டக்களத்தில் டுபிளெஸ்ஸிஸ் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைக்க இந்தியா ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் விராட் கோலியின் அதிரடி 43 ரன்களுடன், கடைசி பந்தை வழக்கம் போல் தோனி பவுண்டரிக்கு வெளியே சிக்சர் அடித்து முடிக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
நடுவரின் தவறான தீர்ப்புகள்:
தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு இந்திய நடுவரின் தவறான தீர்ப்புகளும் ஒரு காரணம். 77 ரன்களுக்கு விக்கெட் விழாத நிலையில் அதன் பிறகு அஸ்வின் டிவில்லியர்ஸை வீழ்த்த ஸ்ரீநாத் அரவிந்த் டுபிளெஸ்ஸிஸை வீழ்த்த, ஆம்லா புவனேஷ் குமாரின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆக 95/3 என்று ஆனது.
அப்போது ஆட்டத்தின் 13-வது ஓவரை அக்சர் படேல் வீச 5 ரன்களில் இருந்த டுமினி அக்சர் படேல் பந்தை லெக் திசையில் திருப்பி விடும் முயற்சியில் கால்காப்பில் வாங்கினார். பந்து நேராக லெக் மற்றும் மிடில் ஸ்டம்பை தாக்கியிருக்கும், ஆனால் முறையீடு எழுந்தவுடனேயே தன் நிலையை விட்டு நகர்ந்த நடுவர் நாட் அவுட் என்றார். இது துல்லியமான அவுட் என்பதே ரீப்ளேயும், வர்ணனையாளார்களும் தெரிவித்தது.
பிறகு 17-வது ஓவரில் தெ.ஆப்பிரிக்கா 156/3 என்ற நிலையில், டுமினி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ் குமாரின் அற்புதமான, அரிய யார்க்கர் ஒன்று ஸ்டம்புக்கு நேராக டுமினியின் பூட்-ஐ தாக்கியது, இதுவும் பிளம்ப். ஆனால் முறையீடு எழும்போது தன் நிலையை விட்டு அகன்று விடுவதிலேயே குறியாக இருந்த நடுவர் இந்த அவுட்டையும் மறுத்தார்.
இந்த இரண்டுமே அவுட், இரண்டுமே நாட் அவுட் என்றதால் டுமினிக்கு ஆவேசம் பிடிக்க சாத்தி எடுக்கத் தொடங்கினார். புவனேஷ் குமார் மிகவும் கோபமடைந்து வழக்கமான ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை வெறுப்பில் பயன் படுத்தினார். இந்த இரண்டு தீர்ப்புகளும் தென் ஆப்பிரிக்க வெற்றியை தீர்மானித்தது என்றால் மிகையாகாது.
டிவில்லியர்ஸ், ஆம்லா அபாரத் தொடக்கம்:
200 ரன்கள் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டிவில்லியர்ஸ் அபாரமாத் தொடங்கினர். புவனேஷ் குமாரின் முதல் ஓவரில் ஆம்லா 2 பவுண்டரிகளை விளாச 10 ரன்கள்.
பிறகு தனது முதல் டி20 போட்டியில் ஆடும் ஸ்ரீநாத் அரவிந்த்துக்கு அக்னிப் பரிட்சை, டிவில்லியர்ஸுக்கு வீசுவது. அதில் அரவிந்த் பந்து வீச்சு நாசம் செய்யப்பட்டது. 4-வது பந்தில் தடபுடவென இறங்கி வந்த டிவில்லியர்ஸ் மிட்விக்கெட் திசையில் முதல் சிக்சரை அடித்தார். பிறகு கடைசி பந்தை மிக அற்புதமாக பாயிண்டில் பவுண்டரி அடிக்க 14 ரன்கள் வந்தது. 3-வது ஓவரில் மீண்டும் ஆளுக்கொரு பவுண்டரி.
பிறகு மோஹித் சர்மாவை, டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகள் விளாசினார். இரண்டும் ஷார்ட் பிட்ச் பந்துகள். 5-வது ஓவர் ஸ்ரீநாத் அரவிந்த் மீண்டும் வீச அழைக்கப்பட ஆம்லா, பின்னால் சென்று அருமையான ஸ்கொயர் டிரைவி அடிக்க 4.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 50 ரன்களை எட்டினர்.
அதன் பிறகு படேல் ஓவரில் ஆம்லா ஒரு பந்தை கட் செய்ய முயன்ற போது எட்ஜ் எடுக்க தோனிக்கு மிகவும் கடினமான வாய்ப்பு, அவரால் பிடிக்க முடியவில்லை.
7 ஓவர்கள் முடிவில் 72 ரன்கள் என்று அபாரமாக ஆடி வந்த நிலையில் அஸ்வின் கொண்டு வரப்பட அவர், மிகவும் புத்திசாலித்தனமாக பந்தை மெதுவாக வீசினார். இதனால் கொஞ்சம் டிவில்லியர்ஸ், ஆம்லாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த ஓவரில்தான் டிவில்லியர்ஸ் டீப் ஸ்கொயர் லெக்கிற்கு பந்தை அடித்து விட்டு 2-வது ரன் ஓட புவனேஷ் குமார் பந்தை எடுத்து நேராக ரன்னர் முனைக்கு த்ரோ செய்ய ஆம்லா சில அடிகள் பின் தங்கினார், 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து ஆம்லா ரன் அவுட் ஆனார்.
அதன் பிறகு டிவில்லியர்ஸ், அஸ்வினின் பந்தை சரியாகக் கணித்ததோடு, நம்ப முடியாத அளவுக்கு மிட்விக்கெட்டில் ஆன் டிரைவ் பவுண்டரி மூலம் அரைசதம் கண்டார். இந்த ஒரு ஷாட் டிவில்லியர்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதற்கான சாட்சியம்.
ஆனால், முதல் பந்து அடித்த அருமையான, நம்பமுடியாத ஆன் டிரைவ் கொடுத்த தெம்பில் அடுத்த பந்தை இறங்கி வந்து ஆட முயன்றார், ஆனால் அஸ்வின் அவருக்கு கடினமான லெந்தில் பிட்ச் செய்து திருப்ப டிவில்லியர்ஸ் உடம்பில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. அருமையான பந்தில் 32 பந்து 51 ரன்களுடன் டிவில்லியர்ஸ் வெளியேறினார்.
அதன் பிறகு 4 ரன்கள் எடுத்த நிலையில் டுபிளெஸ்ஸிஸ். ஸ்ரீநாத் அரவிந்த் ஷாட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்று மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா 95/3 என்று இருந்தது.
டுமினி களமிறங்கி அஸ்வினிடம் திக்கித் திணறினார். உள்ளே வரும் என்று ஆடிய போது பந்து அவரது மட்டையை அபாயகரமாகக் கடந்து சென்றது. வெளியே செல்லும் என்று நினைத்த போது சறுக்கிக் கொண்டு நேராக வந்தது. டுமினியை ஆட்டிப் படைத்தார் அஸ்வின்.
ஆனால் அஸ்வின் அளவுக்கு படேல் எடுபடாததால் அவரை வாங்கு வாங்கென்று வாங்கினார் டுமினி. 15-வது ஓவருடன் அஸ்வினின் பந்து வீச்சு முடிவுக்கு வந்தது. 4 ஒவர்கள் 26 ரன்கள் ஒரு விக்கெட். ஆனால் அவர் வீசிய விதம் அதி அற்புதமானது என்பதோடு டிவில்லியர்ஸ் போன்ற திமிங்கிலங்களை வீழ்த்தும் கலையை அஸ்வின் கற்றுக் கொண்டு விட்டார் என்பதையும் அறிவுறுத்துவதாக அமைந்தது.
15 ஓவர்களில் 134/3 என்ற நிலையில் 30 பந்துகளில் வெற்றிக்கு 66 ரன்கள் தேவை. இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது.
ஆனால் அக்சர் படேல், வீசிய 16-வது ஓவரில் டுமினி அவரை 3 சிக்சர்கள் விளாசினார். வாகான லெந்தில் வீசியதோடு, ஒரு படு மட்டரகமான ஷார்ட் பிட்ச் பந்தையும் வீசினார், மூன்றுமே ஸ்டேடியத்தில் போய் விழுந்தது. அந்த ஓவரில் 22 ரன்கள் வந்ததோடு இந்தியாவின் வாய்ப்புக்கு ஆப்பு வைத்தார் டுமினி.
ஆனால் கடைசியில் 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ் குமார் ஒரே ஓவரில் 14 ரன்களை கொடுத்தார். முதல் 2 பந்துகளில் 10 ரன்கள் வந்தது. இதுவும் வாய்ப்பை முறியடித்தது. கடைசியில் ஸ்ரீநாத் அரவிந்தை ஒரு தீர்மானமான சிக்சரை அடித்தார் டுமினி, பிறகு ஒரு சிங்கிள் எடுத்து வெற்றி பெற்றார் டுமினி.
அவர் 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய பெஹார்டியன் 23 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
இந்தியத் தரப்பில் புவனேஷ் 40 ரன்கள், ஸ்ரீநாத் அரவிந்த் 4 ஓவர்களை முடிக்காமலேயே 44 ரன்கள், அக்சர் படேல் 45 ரன்கள். அஸ்வின் மட்டுமே நேற்றைய ஆட்டத்தின் சிறந்த பவுலராகத் திகழ்ந்தார்.
ரோஹித் சர்மாவின் அதிரடி சதமும், விராட் கோலியுடன் சதக்கூட்டணியும்:
இந்தியாவின் பலவீனம் ஷார்ட் பிட்ச் பந்துகள் என்று தவறான புரிதலில் ரபாதா, கிறிஸ் மோரிஸ், மெர்சண்ட் டி லாங்கே அத்தகைய பந்துகளை வாரி வழங்க ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அடித்து நொறுக்கினர். ஷிகர் தவண் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இணைந்து 13 ஓவர்களில் 138 ரன்கள் என்ற சாதனை சதக்கூட்டணி அமைத்தனர். 27 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் எடுத்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை பூர்த்தி செய்த முதல் இந்திய வீரரானார். இவர் இம்ரான் தாஹிரை டீப் மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்து 1000 ரன்களை கடந்தார்.
மெர்சண்ட் டி லாங்கே 24 ரன்களில் ரோஹித் இருந்த போது தனது பந்துவீச்சில் தன்னிடம் வந்த கேட்சை விட்டார். அதன் பலன் அனைத்து வடிவங்களிலும் ரோஹித் சர்மா சதம் கண்டதே. 62 பந்துகளில் ரோஹித் சர்மா சதம் கண்டார். ரெய்னாவுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் சதம் கண்டார் ரோஹித் சர்மா.
66 பந்துகளில் 12 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து அபாட்டிடம் வீழ்ந்தார். கோலியையும் அபாட் முன்னதாக வீழ்த்தினார். இருவரும் புல்ஷாட்டை சரியாக ஆடாமல் கேட்ச் கொடுத்தனர். ஒரே ஓவரில் இருவரும் அவுட் ஆகி வெளியேறினர். தோனி கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கி 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இந்தியா 199 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கான இலக்கு இது என்றே அப்போது நினைத்தனர். ஆனால் டிவில்லியர்ஸ், ஆம்லா, டுமினி, நடுவர் வேறு மாதிரியாக நினைத்து விட்டனர். ஆட்ட நாயகனாக டுமினி தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago