11 விக்கெட்டுகளை வீழ்த்திய 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன்: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தானை பந்தாடியது நியூஸி. 

By க.போத்திராஜ்


6.8அடி உயரமுள்ள கைல் ஜேமிஸனின் வேகப்பந்துவீச்சு, போல்டின் துல்லியப்பந்துவீச்சு ஆகியவற்றால் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

இந்த கோடைகால சீசனில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளது.

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேமிஸன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் ஜேமிஸன் 69 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் நியூஸிலாந்து அணி ஐசிசி வரலாற்றிலேயே முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அணியாக நியூஸிலாந்து மாறியுள்ளது.

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேமிஸன்

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்து. நியூஸிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்ஸன் 238 ரன்கள், நிகோலஸ் 157,டேரல் மிட்ஷெல் 102 ஆகியோரின் அபாரமான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள்சேர்த்து டிக்ளேர் செய்து,362 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 186 ரன்களில் ஆட்டமிழந்து, இன்னிங்ஸ் 176 ரன்களில் தோல்வி அடைந்தது.

4-வது நாளான நேற்று ஒரு விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 8 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று காலை ஆட்டம் தொடங்கியவுடன் போல்ட் வீசிய 4-வது ஓவரில் நைட்வாட்ச்மேன் அப்பாஸ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜோடி அபித் அலி, அசார் அலி இருவரும் நிலைத்து நிற்க முயன்றனர்,

ஆனால், இருவரும் 29 ரன்கள் கூட்டணி சேர்த்த நிலையில் பிரிந்தனர். ஜேமிஸன் பந்துவீச்சில் அபித் அலி 26 ரன்னில் வெளியேறினார். உணவு இடைவேளையின்போது 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்தது. அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி, விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால், ஆட்டத்தை டிரா செய்திருக்கலாம். ஆனால், உணவு இடைவேளைக்குப்பின் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஜேமிஸன் பந்துவீச்சில் இழந்தனர்.

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களான பாபர் ஆஸம் போன்றோர் காயம் காரணமாக விளையாடாததால் 2-ம் தரமான அணியாகவே மதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி வலுவற்ற சராசரி வீரர்கள் கொண்ட அணியாக இருக்கிறது என்று முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கூட விமர்சித்திருந்தார். அது சரியானது என நிரூபிக்கும் வகையில் இன்றை பேட்டிங் அமைந்திருந்தது.

79 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 107 ரன்களில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. ஒட்டுமொத்ததமாக 81.4 ஓவர்களில் 186ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி(37),ஜாபர் கோகர்(37) ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்துவீச்சாளர் ஜேமிஸன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகனாக வில்லியம்ஸன் தேர்வு செய்யப்பட்டார்.

நியூஸிலாந்து வீரர் ஜேஸமின் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 4-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய ஜேமிஸன், இதுவரை 36 விக்கெட்டுகளை வீழ்த்தி 13 சராசரி வைத்துள்ளார். ஒரு அரைசதம் அடித்து பேட்டிங்கிலும் 56.5 சராசரி வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகிய ஜேமிஸன் 44,49 என இரு இன்னிங்ஸிலும் பேட்டிங்ஸில் ஸ்கோர் செய்து, 45 ரன்களுக்கு 5 வி்க்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

இந்த சீசனில் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் அரைசதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் ஜேமிஸன் வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட்டிங்கில் 32ரன்கள் சேர்த்த ஜேமிஸன், 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பேட்டிங்கில் சேர்த்த ஜேமிஸன் 5 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்