100 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் அஜின்கயே ரஹானேவின் பெயர், 2-வது முறையாக பெருமைக்குரியவர்கள் பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் முதல் முறையாக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பழங்குடியினரைக் கவுரவப்படுத்தும் பதக்கத்தையும் ஆட்ட நாயகனாகத் தேர்வான ரஹானே பெற்றார்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முந்தைய தோல்வி எதையும் கருத்தில் கொள்ளாமல், ஆடிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்துப் பதிலடி கொடுத்தது.
கேப்டன் கோலி இல்லாத நிலையில், இடைக்கால கேப்டனாகச் செயல்பட்ட ரஹானே சதம் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். மெல்போர்ன் மைதானத்தில் ரஹானே அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டில் ஆஸி. பயணம் வந்தபோது ரஹானே 147 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதுவரை ரஹானே இந்திய அணிக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் தலைமை ஏற்று நடத்திச் சென்று அனைத்திலும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பெயர் அங்குள்ள பெருமைக்குரியவர்களின் பெயர்ப் பட்டியலில் பொறிக்கப்படும். அந்த வகையில் ஏற்கெனவே ரஹானேவின் பெயர் கடந்த 2014-ம் ஆண்டில் சதம் அடித்த காரணத்தால் பாரம்பரிய மெல்போர்ன் மைதானத்தில் பொறிக்கப்பட்டது.
இந்த முறை பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதம் அடித்தது மட்டுமல்லாமல், கேப்டனாக வழிநடத்தி வென்றதால், 2-வது முறையாக ரஹானேவின் பெயர் பெருமைக்குரியவர்கள் பெயர்ப் பட்டியலில் பொறிக்கப்பட்டது.
இந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், ஐசிசியும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளன. பிசிசிஐ அமைப்பும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதற்குமுன் மெல்போர்ன் மைதானத்தின் பெருமைக்குரிய பட்டியலில், இந்திய வீரர்கள் வினு மன்கட், சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரஹானே, விராட் கோலி, சத்தேஸ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2-வது முறையாக ஒரு வீரரின் பெயர் பொறிக்கப்படுவது ரஹானேவுக்கு மட்டும்தான்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 1868-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் சார்பில் ஒரு கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு, முதல் முறையாக இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாட ஜானி முல்லாக் தலைமையில் அணி சென்றது.
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற முதல் ஆஸ்திரேலிய அணி என்பதால் அந்த அணியின் கேப்டன் முல்லாக்கைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அந்த அணியின் வீரர்கள் படம் பொறிக்கப்பட்ட பதக்கம் முதல் முறையாக பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆட்டநாயகன் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெருமைக்குரிய, பாரம்பரிய அணியைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட பதக்கத்தையும் முதல் முறையாக ரஹானே பெற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்றபோது ரஹானேதான் ஆட்டநாயகன் விருதுக்கு முழுமையான சொந்தக்காரர் இல்லை எனக் கூறி, ஆட்டநாயகன் விருதுக்குத்தான் பொருத்தமானவர் அல்ல எனக் கூறி மறுத்துவிட்டார்.
அதன்பின் விருதைப் பெற்றுக்கொண்டு ரஹானே அளித்த பேட்டியில், “வீரர்கள் அனைவரையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். சிறப்பாக விளையாடினார்கள். அறிமுக வீரர்கள் சிராஜ், கில் இருவருக்கும்தான் ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட வேண்டும். அடிலெய்ட் தோல்விக்குப்பின், அதை வெளிக்காட்டாமல் வீரர்கள் தங்களுடைய குணத்தை வெளிப்படுத்தி விளையாடியது பார்க்கவே பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago