21 ஆண்டுகளுக்குப் பின் பிரமிப்பான சதம்; சச்சினுக்குப் பின் சாதனை வீரர்; ரஹானேவை அசைக்கக்கூட முடியவில்லை; திணறும் ஆஸி; இந்திய அணி முன்னிலை

By க.போத்திராஜ்

கேப்டன் ரஹானேவின் பிரம்மிப்புக்குரிய சதத்தால் மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து 82 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அருமையான, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் 12-வது சதத்தை நிறைவு செய்து, 104 ரன்களுடன் (12 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். துணையாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடன் உள்ளார்.

மெல்போர்ன் மைதானத்தில் ரஹானே அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். கடந்த 2014-ம் ஆண்டு பயணத்தில் ரஹானே இதே மைதானத்தில் சதம் அடித்து 147 ரன்கள் சேர்த்தார். தற்போது கேப்டனாக சதம் அடித்துள்ளார்.

மெல்போர்ன் மைதானத்தில் 1999-ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக சதம் அடித்தார். அதன்பின் 21 ஆண்டுகளுக்குப் பின் இந்த மைதானத்தில் 2-வது சதம் அடித்த இந்திய கேப்டன் எனும் பெருமையை ரஹானே பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சென்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த 5-வது கேப்டன் ரஹானே ஆவார். இதற்கு முன் சச்சின், அசாருதீன், கங்குலி, கோலி ஆகியோர் அடித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின் வெளிநாட்டைச் சேர்ந்த அணியின் கேப்டன்களில் மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 2-வது வீரர் ரஹானே ஆவார். 2004-ல் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் சதம் அடித்திருந்தார்.

ரஹானேவின் பேட்டிங் இன்று மிக அற்புதமாக இருந்தது. அவரின் ஷாட்களும், தவறான பந்துகள் வீசினால் ஷாட்கள் ஆடுவதும் என தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். தன்னுடன் விளையாடிய வீரர்கள் அனைவருடனும் நிதானமாக ஆடி, அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

4-வது விக்கெட்டுக்கு விஹாரியுடன் கூட்டணி சேர்ந்து 52 ரன்களும், 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த்துடன் கூட்டணி அமைத்து 57 ரன்களும், 6-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் கூட்டு சேர்ந்து 104 ரன்களும் என ரஹானேவின் ஆட்டம் ஆகச்சிறந்ததாக அமைந்திருந்தது.

ரஹானேவுக்கு மட்டும் இன்றைய ஆட்டத்தில் 3 கேட்ச் வாய்ப்புகளை ஆஸி. வீரர்கள் கோட்டைவிட்டனர். 80 ஓவர்களுக்குப் பின் புதிய பந்து எடுத்தவுடன், ஸ்டார்க் வீசிய பந்தில் ரஹானே 73 ரன்களில் இருந்தபோது, அடித்த ஷாட்டை 2-வது ஸ்லிப்பில் இருந்த ஸ்மித் கேட்ச் பிடிக்கத் தவறவிட்டார்.

அதேபோல ரஹானே 57 ரன்களில், பெய்ன் ஒரு கேட்ச்சைத் தவறவிட்டார். ஆட்டம் முடியும் நிலையில் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் ரஹானே அடித்த ஷாட்டில் டிராவிஸ் ஹெட் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.

2-வது புதிய பந்து எடுத்தவுடன் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் ரஹானேவும், ஜடேஜாவும் கவனத்துடன் ஷாட்களை ஆடினர். அதேபோல விக்கெட்டை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் தீவிரமாக இருந்தனர். அதற்குப் பலன் கிடைத்தும் அதைக் கோட்டைவிட்டார்கள்.

முன்னதாக, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சேர்த்திருந்தது. ஷுப்மான் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடன் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

தேர்ந்த டெஸ்ட் வீரர் போல் ஷாட்களை ஆடி, ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எளிதாக கில் சமாளித்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய நிலையில் கம்மின்ஸ் வீசிய பந்து ஆஃப் சைடு வெளியே சென்ற நிலையில் அதைத் தொட்டு கில் 45 ரன்களில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரஹானே, புஜாராவுடன் சேர்ந்தார். புஜாரா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 17 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த விஹாரி, ரஹானேவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர்.

நாதன் லேயான் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 52 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ரிஷப் பந்த், ரஹானேவுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ரஹானே 111 பந்துகளில் அரை சதம் அடித்தார். ரிஷப் பந்த் எந்தவிதமான பதற்றமுமின்றி, கூலாக ஷாட்களை ஆடினார். ரிஷப் பந்த்தின் சில ஷாட்களைப் பார்த்த ஆஸி. கேப்டன் பெய்ன் ஃபீல்டிங் செட்டப்பை மாற்றி அமைத்தார்.

ஸ்டார்க் வீசிய பந்தில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ரிஷப் பந்த் 29 ரன்களில் வெளியேறினார். இது ஸ்டார்க்கிற்கு 250-வது விக்கெட்டாகவும், பெய்னின் 150-வது டிஸ்மிஷலாகவும் அமைந்தது. இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர்.

6-வது விக்கெட்டுக்கு வந்த ஜடேஜா, ரஹானேவுக்கு ஈடுகொடுத்து ஆடினார். இருவரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டு ரன்களைச் சேர்த்தனர். ரஹானே அவ்வப்போது சில ஷாட்களை ஆடினார்.

முதல் செஷனில் ஓரளவுக்கு இந்திய அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்திய ஆஸி.பந்துவீச்சாளர்களால் 2-வது செஷனில் முடியவில்லை. முதல் செஷனில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால், 2-வது செஷனில் 99 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணிக்கு இருந்த பெரும்பாலான நெருக்கடிகள் அனைத்தையும் ஷாக்-அப்ஷர்வர் போன்று ரஹானே தனக்குள் வைத்துக்கொண்டு அருமையான சதத்தை 195 பந்துகளில் பதிவு செய்தார். டெஸ்ட் அரங்கில் ரஹானேவுக்கு 12-வது சதமாகவும், மெல்போர்ன் மைதானத்தில் 2-வது சதமாகவும் அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்